ஒளி
தன் ஒவ்வொரு அணு இலையும் பளபளக்க
ஒளியின் பாலாபிஷேகத்தை அனுபவித்தபடி
தன் எல்லாக் கைகளையும் நீட்டி அசைத்து
கிறங்கி பரவசித்துக் கொண்டிருந்தது
புதுக் குழியில்
ஒரு குழந்தை உயரம்
வளர்ந்திருந்த அந்தச் செடி
பொருள்களைத் துலங்கச் செய்யும் இந்த ஒளியே
உயிர்க்குள் புகுந்து அதனைப் பேணுகிறதும்
மூளைக்குள் புகுந்து அறிவாகச் செயல்படும் இந்த ஒளியே
மூளையின் செயல்பாட்டை முற்றுமாய் அணைப்பதும்
ஞானத்தின் வடிவாக எங்கும் விரிந்து நிற்கும் இந்த ஒளியே
அரிதான பார்வையை நல்குவதும்
ஒளியின் பாலாபிஷேகத்தில்
அனைத்து உயிர்களும் திளைத்து மகிழ்கையில்
தன் மகனைப் பற்றிய
ஒரே மனக்குறையை உடைய தாயாக
பார்வையற்ற மனிதனின்
விழிகளை வருடி அழுகிறது ஒளி