கவிப்பாடு
வெறும் புலம்பல்கள் என் நான் சீறுகையில்
நேர்மையும் உக்கிரமுமான அப் புலம்பல்கள்
செவிகள் திருப்பும் இல்லையா
எனத் தாழ்மைப் பதிலளிக்கிறாய்
இரத்தத்தை மசியாக்கும் சக்திவிரயங்கள் என
அலட்சியம் கனல்கையில்
இரத்தம் கொடுக்க விழையும்
கருணை இல்லையா என இறைஞ்சுகிறாய்
நீ காண்பதெல்லாம் உன் மூஞ்சியைத் தானன்றி
உண்மையையல்ல எனச் சுட்டுவிரல் நீட்டுகையில்
நானும் என் மூஞ்சியுமான இவ்வுலகமும் ஓர் உண்மைதானே
எனக் கெஞ்சுகிறாய்
சரி. பிழைத்துப் போ.
ஆனாலும் எக் கவிதைகள் உனக்குக்
கவி யெனும் மகுடத்தைச் சூட்டுகிறதென யோசி
அங்கங்கே உன் கவிதைகளில்
உன்னை மீறி ஒலிக்கும் உன் அதிகாரக்குரல்
உன்னை மீறி ஓய்ந்து விடுவதைக் கவனி
இக் கவனப்பார்வை ஒன்றே மீட்குமன்றோ உன்னை!