மலர்களும் உயிரற்ற பிரதிமைகளும்
வாழ்வு, எங்கும் வியாபித்துள்ளதின் தரிசனமோ
மெய்மையின் தீண்டல்பட்டு
உள்-வெளி-எங்கும் மலர்ந்துள்ள இக்கோடி மலர்கள்?
உயிரற்ற பிரதிமைகளுக்காக வேண்டி
திருகித் திருகிக் கொய்து
துவளத் துவளச் சேகரிக்கப்படாத மலர்கள்!
(உயிரற்ற அப்பிரதிமைகளை நாம் உருவாக்கியது ஏன்? எதற்காக?)
முரண்கொண்ட பிரதிமைகளின் அழியாட்டம்!
எல்லா மலர்களையும் பிய்த்தெறிந்து
காலடியில் போட்டுச் சவட்டிச் செல்கின்றன
இன்றுவரை போர்வெறியின் குரோதம் தீராத
காரணமறியாத
பூர்வகுடிப் பிரதிமைகள்!
நம் அகங்காரமே தாமாய்க் கோயில் கொண்டமர்ந்து
ஆணையிட்டுவிட்டுக் கொக்கரிக்கின்றன
தம் ஆட்சி அதிகாரத்திற்குத் தடை நிகழ்த்தக்கூடும்
மலர்கள் அனைத்தும் தம் காலடியில் சமர்ப்பிக்கப்பட!
மலர்கள் ஒருபோதும் பிரதிமைகளைச் சாடி அறைவதில்லை;
மலர்ந்து மலர்ந்து மடிகின்றன அவை,
குரோதமின்றி வெறுப்பின்றி
வாழ்வின் ரகசியத்தை, மெய்ம்மையை, இறைமையை
நம் வாழ்வாலே பேசியபடி