வள்ளியம்மா
கருநீலப் பூ என்ற ஒரு சொல் உதித்ததுமே
என் கடல் ஆழத்திலிருந்து மேலேறி வந்தது
உன் நினைவு. வள்ளியம்மா…
கருமை நிறமுடைய பெண்மணியே…
குடும்பப் பொறுப்பற்ற குடிகாரக் கணவனும்
மாசிலாத இரு குழந்தைகளின் முகமும்
உன்னைச் சோர்விலா உழைப்புக்கு உந்தினவோ?
வீடுகள் இரண்டொன்றின் தூய்மைப் பணியினை
மாயமான ஒரு மகிழ்ச்சியோடு செய்துவந்தாய்
முடிவிலாத தூய்மைப் பணியினால்
அழிவிலாத ஒரு பெண்ணானாய் நீ எனக்கு
உன்னைக் காணும் தோறும் அலட்சியப்படுத்த முடியாத
ஒரு மரியாதை கனன்றது என்னுள்
உன்னைப் போன்ற ஒரு நல்லுறவை
எங்கள் குடும்பம் ஒரு நாளும் அடைந்ததில்லை
பணி செய்தபடியே
வீட்டம்மாவோடு உன் ஓசைமிக்க உரையாடல்
நம்மைத் துயரணுகாதபடித் தற்காக்கும் ஒரு யத்தனமோ
இளைப்பாறலோ என்றுதானேயிருந்தது?
துயரொழிக்கும் மார்க்கத்தை
நாம் இன்னும் கற்றோமில்லையோ தோழி?
கணவனது பிரிவும்
அவன் இன்னொருத்தி மற்றொருத்தி என்று
திசை தேறாது சென்ற வாழ்க்கையும்
உன்னைச் சுட்டதின் காயங்களையும் வலியையும்,
தனித்திருந்து ஊரார் மெச்சத்
தன் கவுரவம் பேணிக்கொண்ட
உன் வாழ்வையும் நான் அறிவேன்
இவை அனைத்துமே தளைகளென
ஒரு நாள் நீ உணர்ந்தாயோ?
இல்லையெனில் வேறென்ன?
அன்று நீ பணி செய்யத் தொடங்கியிருந்த விடுதியில்
விடுதியறை ஆண்களோடு விளையாடும் வனிதையாக
மாறிப்போனதாய்க் கேள்விப்பட்டோம்
கட்டறுந்த வெள்ளமும் புயலுமான
உன் விடுதலையின் மகிழ்ச்சியும் உண்மையில்லையா?
ரகசியமான ஒரு மவுனத்தின் பொருளை
நாம் அறியவில்லையா?
ஒரு நாள் அதிகாலை விடுதி முன் நடுரோட்டில்
கடப்பாரையால் ஓங்கி மண்டை பிளக்கப்பட்டு
இரத்தம் தோய்ந்த கருநீலப் பூவாய் நீ கிடந்ததை
ஓடோடி வந்து பார்த்தோம்.
எம் இதயத்தைப் படபடக்க வைக்கும் எத்தனை அமைதி தோழி,
எத்தனை அமைதி அங்கு நிலவியது!
காவலில் சரணடைந்த உன் கணவனின்
அனாதை ரிட்ஷாவிலே அனாதைப் பிணமாய்,
உன் உடல் மண்மூடிப் போகுமுன்
பிணப் பரிசோதனை அறை முற்றத்து இருளில்
இரவெல்லாம் நட்சத்திரங்களை வெறித்தபடி கிடந்தனவே
எறும்புகளுடனும் ஈக்களுடனும் இமையாத உன் விழிகள்!
இத்தகைய உக்கிரமான முடிவை வேண்டித்தான்
ஒரு திசைமாற்றத்தை நீ மேற்கொண்டாயோ?
துயரறுக்கும் மார்க்கத்தை நாம் இன்னும்
கண்டடையவில்லையே தோழி…