உறுதிமொழி
கருவறை பிதுங்கி வெளிவந்தபோதோ
தாமதமாய் எழுந்த ஒரு காலையின்போதோ
கண்டேன் நான்
என் கண்களை அகல விரித்த அந்த ஒளியை!
வீட்டின் சிறுஇருளுக்குள் அடைபட்டிருந்த என்னைச்
சாளரங்கள் காட்டி, பறவை ஒலி காட்டி
வெளியே அழைத்துவந்த அதே ஒளி!
அன்று அதை உணர்ந்தேன்:
என் கை பற்றியிருக்கும் கட்புலனாகாத வாள் ஒன்றின்
பளபளப்புத்தான் அந்த ஒளி என்பதை!
ஒரு சிறு நடுக்கமுமின்றி
இப் போர் வாளினைப் பற்றி இருக்கும்
எனது இக் கைவலிமை!
எங்கிருந்து வந்த்தென வியக்கிறேன்
எனது இக்கோலம் கண்டோ
’தந்தை!’ என்றபடி
உறுதிமொழிக் குழந்தைகள் ஓடிவந்து
என் கால்களைக் கட்டிக்கொள்கின்றன?
இனி, இந்த உலகு குருடாகுமாறு
ஒருக்காலும் நான் இந்த வாளை
உறையிலிட மாட்டேன்
அதிகாரம் தழைத்து
மனிதகுலம் வாடும்படிக்கு
இனி ஒருக்காலும் நான் இந்த வாளை
உறையிலிட மாட்டேன்
ஆட்கொல்லி விழிகள்
இவ்வொளிப் பெருக்கிலே மிரண்டோட
ஏந்திநிற்பேன் எப்போதும் இவ்வாளினை நான்
பேதமிலா மக்கள் கூடிக்கூடிக்
குளிர் காய்ந்து உளங் களிப்பர்
வயது முதிர்ந்தோர்க்கும் குழந்தைகட்கும்
வெந்நீர் ஆக்கிக் கொடுப்போம்
இன்பத்தில் குளியல் முடித்து
முற்றங்களில் முளைத்தும்
மொட்டைமாடிகளில் மலர்ந்தும்
கூந்தலுலர்த்துவர் எம் மக்கள்
புல்லில் சாய்ந்து கிடந்தபடி
இவ்வொளி வெம்மையின் மின்சாரம் பெற்றல்லவா
உயிர் நிமிர்ந்து நிற்கிறது!
வாழ்வின் இவ்வின்பங்களெல்லாம்
இவ்வாளினை நான் உறையிலிட்டுவிட்டால்
என்ன ஆகும்?
ஓ... உன் சந்தேகம் புரிகிறது.
ஈடு இணையற்றுப் பற்றிநிற்கும் இக்கைக்கு
இதை வீசும் வலு இருக்காதா?
இம்மியளவு அசைவையும் நிகழ்த்தத் துடிக்காத
திடசித்தமும் வந்த்தெப்படி இக் கைக்கு?