மீண்டும் அந்தக் குருவி
1.
என்னைக் கண்டு ஒரு சிறு குருவி
பதறி விலகி ஓடியது கண்டு
துயருற்றேனே அதை மறந்து
எதையெதையெல்லாமோ தேடி
எங்கெங்கெல்லாமோ அலைந்து விட்டதெண்ணி
மீண்டும் துயருற்ற வேளை…
மீண்டும் அதே போலொரு வேளை
அதே போலொரு இடம்
அதே போலவே நடந்துகொண்டிருந்தவன்
சட்டென்று நின்று விட்டேன். எட்டும் தூரத்தில்
அதே போலவே இரை கொத்திக்கொண்டிருக்கும்
அதே போலொரு சிறு குருவி
காலூன்றி எழுந்து
தளர்நடை பயின்றபோது
குதித்துக் குதித்து என் கைக்கெட்டாது விலகி விலகி
நான் மகிழ விளையாட்டுக் காட்டிய
அதே தோழிதானே நீ?
2.
கூடு, கூடு பிரிந்த தன் உயிரைக் காண்கிறதோ?
வெறுமையான கூட்டின் ஆறாத வெப்பமும்
கூடு துறந்த விண் திரியும் கனலும்
ஒன்றேதானோ?
3.
பூமியில் காலூன்றி
அது தன் இரையைப் பசியோடு
கொத்தித் தின்றுகொண்டிருந்த்து
வெகு ஜாக்கிரதையாக
மூச்சிரைக்கும் வேகமே தெரியாதபடி
அதனருகே புல் நுனிகளில்
துளிகள் நீட்டிக் காத்திருந்தேன்
அதன் அடிவயிற்றின் மென்மையையும்
கிள்ளும் கால்களையும்
என் கன்னத்தில் உணர்ந்தபடி
மெய் சிலிர்த்திருந்தேன்
ஏக்கத்துடன் சிவந்திருந்த என் உதடுகளை
அதன் தீண்டலே வந்து முத்தமிடும்வரை
பொறுமையோடிருந்தேன்
பெருமிதமான என் உயிர்மூச்சில்
அது என் அன்பைத் தொட்டுணரும் அண்மை!
என் ஆருயிரே என் முன் தோன்றி
என் கண்ணீரைத் துடைத்து நிற்கும் அற்புதம்!