யாகம்
நம் உயிர் காக்கும் நெருப்பை
உலர்ந்த மரக்கட்டைகளைக் கொண்டு தொடங்கி
உலர்ந்த மரக்கட்டைகளாலேயே பேணிக்கொண்டிருந்தோம்
இரவு தொடங்கிவிட்ட வனத்தில்
உலர்கட்டைகளுக்குப் பதிலாய்
ஆடு மாடு குதிரைகளில் தொடங்கி
மெல்ல மெல்ல மனிதர்களையே
ஆகுதியாக்கத் தொடங்கிவிட்டது எந்தப் பிசாசு?
ஏன்? எப்படி? எதற்காக? எப்போது?
இன்று மனிதர்கள் தங்களைத் தாங்களே
அழகாய் மண்ணெண்ணெயில் முக்கிப் பொரித்துக்கொண்டும்
கூட்டமாய்ச் சேர்ந்து கூட்டமாய்ப் பிறரைப் பொரித்தும்
தங்கள் ஆருயிர் பேணிக்கொள்ளும் அழகைத்தான்
நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம், இல்லையா?