அம்மாவின் விளக்கும் அகற்றப்படாத இருளும்
இருள் மெல்லக் கவியத் தொடங்குகையிலும்
அம்மா, உங்களிடம்தான் எத்தனை நிதானம்!
பதற்றமேயில்லாப் பேரமைதியுடன் எழுந்து சென்று
சிம்னி விளக்கையும்
மண்ணெண்ணெய் மணம் வீசும் துண்டுத் துணியையும்
விளக்கைக் குலுக்கிப் பார்த்துக் கொண்டபின்
மண்ணெண்ணெய்ப் புட்டியையும்
மெல்லசைவால் சோதித்தபடியே தீப்பெட்டியையும்
சாம்பல் பொடியையும் எடுத்துக்கொண்டு
அம்மா, நீங்கள் தார்சாவில் கால் மடித்து அமர்ந்தபோது
அந்த அதி உன்னதச் செயலால் ஈர்க்கப்பட்டவனாய்
நானும் உங்களோடு அமர்ந்தேன்
விளக்கைத் துடைத்து முடித்து
அதைத் திறந்து எண்ணெயிட்டு
திரியினைத் தொட்டுத்தடவிச் செம்மைப்படுத்தி
சாம்பல் பொடிகொண்டு சிம்னியைத் துலக்கியபின்
உங்கள் தீக்குச்சி உரசலில் நிகழ்ந்த உச்ச அனுபவத்தையும்
மாறாத நிதானத்துடனேயே
நீங்கள் கை கூப்பித் தொழுததையும்
நான் வியந்து போய்ப் பார்த்திருந்தேன்
அதைத் தூக்கிக்கொண்டு எழுந்து
காற்றில் அது நடுங்கி அணைந்து விடாதபடி
உள் வீட்டுக்குள் பக்குவமாய் எடுத்துச செல்ல
நீங்கள் முன் நடக்கையில்
அதே வேகத்துடன் இருள் உங்கள் பின்னாலேயே
பொல்லாத வக்கணைத் திமிருடன் தொடர்கிறது!
உங்கள் முன்னுள்ள இருளும் அதே வேகத்துடன்
அச்சமோ குற்றவுணர்வோ இரக்கமோ
கிஞ்சித்தும் இல்லாத எதிரியின் எகத்தாளத்துடன்
உங்களையும் உங்கள் நடையையும் நையாண்டி செய்தபடியே
கால்களைப் பின்னே பின்னே வைத்து நடந்து
நீங்கள் நின்றதும் சற்றே தள்ளித்
தானும் நிற்கிறது
அம்மா,
அகற்றப்படாத இருளிடையேதான்
நீங்கள் இயற்றிய எளிய விளக்கு அற்புதம்
உங்களைப் போலவே அமைதியுடனும்
அடக்கத்துடனும் தன்னியல்பான பீடுடனும்
எவ்விதத் துக்கமுமின்றி
தன் செயலே தானாகச்
சுடர்ந்து கொண்டிருக்கிறதம்மா இன்றும்
என் இதயத்தில்