காலை நடை
சூரியன் உதித்து உறைக்கத் தொடங்கியிருந்த வேளையிலும்
வெளிப்பூட்டுக்கள் தொங்கும் ஒரு வீட்டின்
மொட்டைமாடியில் எரியும் ஒரு விளக்கை-
ஓடிப்போய், ஏறிக்குதித்து
மாடிப்படிக்கட்டுகள் தாவி
அதன் சுவிட்சைத் தேடிப் பிடித்து
அணைக்க வேண்டும்போலிருந்தது
நடவாததால்
அது அவன் மனசுக்குள் சிக்கிக்கொண்டது
அவனைக் கடந்து சென்ற சிறுமியின்
ஈர உச்சந்தலை வகிட்டின்
கச்சிதம் பிழைக்கச் செய்த மயிரிழைகளும் அப்படியே
தெரு ஒழுங்குக்கு மத்தியில்
ஒரே ஒரு இடத்தில் குத்திட்டிருந்த குப்பையும்
ஒரு முள் செடியும்-
அந்தச் சிறு வேலையைச் செய்யாமல்
நடை தொடர முடியாதபடி ஒரு பரபரப்பு
வந்து உட்கார்ந்த இடத்தில், சற்றதிக நேரமாய்
அழுக்குடன் காட்சியளித்துக்கொண்டிருந்த
ஹோட்டல் மேஜையினை- ஒரு துடைப்பான் தென்பட்டால்
தானே எழுந்து துடைத்துவிடலாம்போல்
ஒரு நிம்மதியின்மை
நெக்குருகச் செய்தது
யாரோ மேஜைமீது விட்டுச் சென்றிருந்த
காலி சிகரெட் பெட்டியின்
வடிவவியல் நேர்த்தி