அய்யர் சாமி
எளிதில் பெயர்த்தெடுக்க இயலாதபடி
கான்க்ரீட் முளையிட்டுப் பதித்த கனஇயந்திரமோ என
அள்ளி முடித்த குடுமியும், மேலாடை கழற்றிப்
பூணூல் காட்டும் மேனியுமாய்
இன்னும்
அக்னி மூட்டி அமர்ந்திருப்பதேனோ
அய்யர் சாமி?
அரணிக் கட்டைகள் தூண்டி
அக்னியை நன்றாய் வளர்த்தபின்னே
ஆகுதிப் பொட்டலத்தை நிதானமாய்ப் பிரிக்கின்றீர்,
வாழ்வை எமக்கு வழங்கும் மேதமையைத்
தாமே கொண்டவர்போல்.
அது உண்மைதானோ, அய்யர் சாமி?
மெதுவாய்
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, குதிரைகளைக் கடித்து
மனிதரையும் கடித்த அந்த அக்னி மீது
எந்தத் தேவர்களை மகிழ்விக்க
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
நெய் வார்த்து வருகின்றீர், அய்யர் சாமி?
நீரில் முழுக்காடி, முளைவிட்டு,
வான் காணத் துடித்து நிற்கும்
பச்சைப் பயிர்விதைகள்
மண் தொடுமுன்னே
கருகிச் சாம்பலாகிக்
கரும்புகையாய் வானில் அழவோ
இப்போதும் நெய் வார்க்கின்றீர்
என் உயிர் அய்யர் சாமி?
பேராசையின் அருவருப்பாய்
நெளியும் தீநாளங்களின் ஒளியில்
குரூரமாய்த் தன் முகம் கனல
திடீரென்று
தன் ராட்சசக் கைவிரல்களுக்கிடையில்
கைம்பெண் உடல்கள், குடிசைகள்
புழுவாய்த் திமிறித் துடித்துக்கொண்டிருக்க
அள்ளி அள்ளி அவர்களை உடன்கட்டையில் போட்டபடி
எத் தர்மம் காப்பதற்கோ நெய் வார்க்கின்றீர்
என் உயிர் அய்யர் சாமியே?
யாகத்தை விமர்சித்தவர்களும்
தாமரை மலரை ஒரு கையிலும்
பிட்சா பாத்திரத்தை மறுகையிலுமாய்ப் பிடித்தபடி
அமைதியாய் நடந்து கொண்டிருந்தவர்களுமான
புத்தர்களைப் பிடித்து அதிலே போட்டது மட்டுமின்றி
மலர்வதற்கு முன்னான
தாமரை மொட்டுக்களையெல்லாம்
முன் ஜாக்கிரதையாய்ப் பறித்துக் கொண்டுவந்து
அவற்றை அவசர அவசரமாய் அக்னியிலே கொட்டி
இன்று இவ்வுலகு உய்யவோ
நெய் வார்க்கின்றீர், என் உயிர் அய்யர் சாமி?
விவேகம் பொருந்திய
மின் விசிறிகள் நிறுத்தப்பட்டிருப்பதும்
கண்மூடித்தனமான வெக்கை
நம்மைத் தீண்டுவதும்
விழி கரிக்கும் புகைமூட்டம்
இம்மண்டப வெளியெங்கும் பரவுவதுமே
நவிலவில்லையா, அய்யர் சாமி?