குயில் கூவும் மரச்செறிவின்...
குயில் கூவும் மரச் செறிவின் நிழலுக்கு வரச்சொல்லி
உன்னோடு உரையாடக் காத்திருந்தேன்
உன் தாமதத்தில் நான் படுவதோ
ஆயிரமாயிரமாண்டு காலப் பாலைத் துயர்
பதற்றத்தோடு நீ வந்து பேசிவிட்டுச் செல்வதிலோ
நம் இதயத் துடிப்பின் நிறைவேறாத பரிவர்த்தனையின்
கொடுநொருப்பே அதிகரிக்கிறது
அறிவு எனும் வினை உக்கிரமான அமைதியும் உரமாகி
மரித்துப் பிறந்த புத்துணர்வின் மணம் வீசியபடி
கண்ணெதிரே
பூக்கள் மலர்ந்து மலர்ந்து உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன
அவசர அவசரமாக வந்துபோகும் உன் காலடியில் மிதிபட்டு
அவை உன்னை சலிக்காமல் வரவேற்றபடியிருப்பதையும்
நீ அறியவில்லை
இரண்டு ஆன்மாக்கள் ஒருக்காலும் சந்திக்க முடியாத
கலியில் நாம் வாழ்கிறோமோ எனச்
சோர்ந்து மடியும் முடிவுக்கும் ஒரு நாளும் வரமாட்டேன்
என்றென்றோ நிகழ்ந்துள்ள சந்திப்புகளின்
வாசனைகளை நுகர்கிறேன்
இக் கடுங்கோடையில் வெள்ளமாய்ப் பூத்துப்
பேசும் இம்மலர்களின் மணமும் ஒளியும்தான் என்ன?
இரண்டு ஆன்மாக்கள் சந்திக்கும் இடங்களிலெல்லாம்
கோயில் கோயில்களாய் மலர்கின்ற
இப்பூமியெனும் கோயிலிலன்றோ நாம் வாழ்கிறோம்!