அங்குலப் புழுவும் உப்புப் பொம்மையும்
முன்னொரு காலத்தில்
தன் முழு உடல் கொண்டு
அகப்பட்ட பொருட்களையெல்லாம்
சதா அளந்துகொண்டிருப்பதிலேயே
உற்சாகம் கொண்டு திரிந்து, பின்
இப்பூமியிலுள்ள எல்லாப் பொருட்களையும்
அளந்துவிட முடியுமெனும் கர்வம் கொண்டிருந்த
அங்குலப் புழுவொன்று,
ஒருநாள், குயிலின் பாடலினை அளக்கமுயன்று
தோற்றுத்
தன் கர்வம் அழிந்த
கதையினைக் கேட்டிருப்பீர்கள்*
அந்தப்புழு, அதே புழுதான்
அதே பச்சை நிறம், பவள வாய்.
பின்னங்கால்களை ஊன்றித்
தன் தலை உயர்த்தி
விழிகளை மூடி நிமிர்ந்தவாறு
அசையாது அமர்ந்திருந்தது ஒரு கிளையினில்
அதைத் தின்ன வந்த குருவி ஒன்று
பார்த்துத் திகைத்தது
”அட! நீயா? விநோதமாயிருக்கிறதே
என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ?” என்றது
ஒன்றுமில்லை; சும்மாதான் இருக்கிறேன்”
என்றது புழு
”இல்லை; குயிலின் பாடலை அளக்க முனைந்து
தோற்றுப் போனதிலிருந்து நீ ரொம்ப மாறிவிட்டாய்
நான் உன்னைச் சாப்பிட வந்துள்ளேன்
நீ அஞ்சாமல் அமைதியாயிருக்கிறாய்
என்ன ஆயிற்று உனக்கு என்றுதான்
சொல்லேன்” என்றது குருவி
”சொல்கிறேன்” என்றபடி தொடங்கியது புழு
”குயிலின் பாடல்
பிரபஞ்ச ரகசியத்தை உள்ளடக்கியது.
ஓர் உப்புப் பொம்மையால்
கடலின் ஆழத்தை அளக்கமுடியாதது போன்றே
அப்பாடலும் அளக்கப்பட முடியாததென்று
நான் அறிந்துகொண்டேன்
ஆனால் நாம் இந்தக் காட்டை
அளந்துவிட முடியும்
நம்மால்தான் இக்காடும்
இக்காட்டால்தான் நாமும்
உண்டாகியுள்ளோம்
இக் காட்டின் வறுமை, அநீதி, போர்
அனைத்தின் காரணங்களையும் நாம்
நமக்குள்ளே உணரமுடியும்.
ஆகவே அதைச் சரிசெய்துவிடவும் முடியும்
அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்” என்றது புழு
_____________
*நன்றி: இந்திய ஆங்கிலக் கவி ஏ.கே.ராமானுஜன் கவிதை: அங்குலப் புழு.