இன்றைய ஒரே ஆசுவாசம்
அமைதியின்மையின் குட்டிப் புயலோ
அமைதியினைத் தாங்கிக்கொள்ள இயலாத
சஞ்சல வேகத்தின் பூதப் பெருக்கமோ
மனச்சிதைவின் ஆட்டமோ
பைத்திய வெறியோ
கெட்ட கோபமோ
என்ன தீவினை இது?
முருங்கை மரத்தை முறித்துச் சிதறியாயிற்று
விளையாடும் சிறார்களின் தலைகளைக் கலைத்து
கண்களில் தூசியை அள்ளித் திணித்தாயிற்று
வசவுகளைக் காதில் வாங்காது
குடிசைகளின் கூரைகளைப் பிய்த்தாயிற்று
போகும் வழியில் சில மரங்களைக்
குப்புறப் பிடித்துத் தள்ளியாயிற்று
மரங்களின் உச்சியைப் பிடித்து ஆட்டோஆட்டு என்று
ஆட்டித் தீரவில்லை
தளிர்களுக்கும் பூக்களுக்கும் பிஞ்சுகளுக்கும்
அகால மரணத்தை வழங்கியாயிற்று
காக்காய்க் கூட்டைக் கீழே உதைத்துத் தள்ளியாயிற்று
இடையிடையே சற்று மூச்சு வாங்கிக்கொண்டு
நிற்கும் பயங்கர மவுனத்தைத் தூக்கிக்கொண்டபடியே
மீண்டும் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தபடியே இருக்கிறது
உடலையும் மனதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது
வெயிலைவிடக் கொடூரமான
வறட்சியை உண்டாக்கும் இத் தீவினை!
மேலே சில பறவைகளோ
இச் சலனத்தைச் சமன்செய்ய விழைபவையாய்
வளைந்து வளைந்து சிறகடிக்கின்றன
மொட்டை மாடியில் நின்றபடி
உல்லாசமாய்ப் பட்டம் விட்டுக் கொண்டிருக்கிறது
களங்கமில்லாத குழந்தையொன்று