அகால மரணங்களும் தூய-தன்-எழுச்சியும்
கோடி சூரியப் பிரகாசம் என்பார்களே
அது இதுதான் என்பதுபோல்
வியத்தகு அழகுடன் அவள் பிறந்தாள்
அடர்ந்த கருங்கூந்தலும் பிறை நுதலும்
அகண்ட கரிய விழிகளும்
சிற்பி வடித்ததுபோன்ற நாசியும்
இன்ப ஊற்றுப் போன்ற செவ்விதழ்களுமாய்
செவ்வியல் அழகின் இலக்கணச் சிலையோ
எனும்படி அவள் திகழ்ந்தாள்
அவள் பேச்சிலும் மூச்சிலும்
உடலின் ஒவ்வொரு அசைவிலும்
பொங்கி வழிந்தது உயிரின் கொந்தளிப்பு
மண்ணின் துயர் தீண்டியிராத
தேவதா காலமோ அது?
அகால மரணம்போல்
எங்குபோய் ஒளிந்துகொண்டது
இன்று அந்த அழகெல்லாம்?
யாரோ திருடியது?
’நீ பிறந்திருக்க வேண்டிய இடமே வேறு’
எனும் சுயவதைகள் விடையாமோ?
திருடப்பட்ட எல்லா அழகுகளும்
அந்த வேறு இடத்தில்தான் கொலுவிருக்கிறதாமோ?
பொறாமையோ? அல்ல; பகைமையற்ற
துயர்க் கனலோ? வேகமோ?
சுரணையற்ற உலகின்
அன்பில்லாத இதயத்தால்
யாது செய்திட முடியும் எனும் புரிதலோ?