மகள் வரையும் அம்மாவின் முகச் சித்திரம்
தலையை ஒழுங்காக்க் காட்டித் தொலை, பிசாசே!
ஒழுங்காகத்தானேம்மா காட்டிக் கொண்டிருக்கிறேன்
நீங்கள் எனக்குத் தலைவாருவது ஏன் இப்படி வலிக்கிறதம்மா?
உங்கள் விரல்களிலும் முகத்திலும் ஏனம்மா இத்தனை கடுமை?
அறியாத சிறு தவறுக்கும் ரத்தம் வந்துவிடும்போல்
மண்டையில் குட்டுகிறீர்கள்
வேலை செய்து முரடேறிய உங்கள் விரல்களில்
அன்பின் இதம் தரும் மென்மையை
நான் அனுபவித்த வேளைகளை எண்ணி
ஏங்குகிறேன் இன்று.
அன்பு கொஞ்ச வேண்டிய வேளையிலும்
இந்தக் கோபம் உங்களுக்கு
எங்கிருந்துதான் வருகிறதோ?
எந்தப் பணியில் நீங்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கையிலும்
ஒன்று, உங்களை அவலட்சணமாக்கும் கடுகடுப்பை
அல்லது எனது மனம் இருளும்படியான துயரத்தையே
நான் உங்கள் முகத்தில் காண்கிறேன்.
ஆனால் அம்மா, நீங்கள் சிரிக்கும்போதோ
உங்கள் முகத்தின் அற்புதமான அழகுக்கு
அத் துயரமே பின்சாரமாயிருப்பது கண்டு
பிரியம் பொங்குகிறதம்மா
இன்னதென்றறியாத அத்துயர்மீது
சரியம்மா, இப்போது என்ன யோசிக்கிறீர்கள்?
எனது அழகான அம்மா,
இப்போது நீங்கள்தான் என் மகளாம்.
இப்படி உட்காருங்கள்,
நான் உங்களுக்குத் தலை வாரப் போகிறேன்.
முதலில் நன்றாய்க் கழுவித் துடைத்து வாருங்கள்
உங்கள் முகத்தை
கடுகடுப்பு நீங்கிய முகத்தின் தெளிவில் – மின்னும் –
திசை தவறாத ஒரு கடுமையிலும் துயரிலும்தான்
நீங்கள் எவ்வளவு அழகாயிருக்கிறீர்கள்!
கொஞ்சம் பொறுங்கள் அம்மா,
இன்னும் சிறிது நேரத்தில் உங்கள் முகத்தை
எப்படி பளிச்சிட வைக்கிறேன் பாருங்கள்!
உங்கள் விழிகளுக்கு மைதீட்டவே வேண்டாம் அம்மா
ஒரு சின்ன தொடுகையால்
விழிகளைக் கூர்மைப்படுத்தப் போகிறேன்
நீங்கள் ஒன்றும் பேசக்கூடாது
அசையாமல் சும்மா இருக்க வேண்டும்
இடையூறு செய்தால் மண்டையில் குட்டுவேன்
(கோபம் தவறில்லை அம்மா;
அது திசை தெரியாமல் அலைவதுதான் தவறு)
இந்த வயதிலும் கூந்தலில்
ஒரு நரை இல்லை; பெருமையாயில்லையா உங்களுக்கு?
அம்மா, நான் தலைவாரிச் செய்த அலங்காரம் இது
அந்திவரை இப்படியே இருக்க வேண்டும்
இல்லாவிட்டால் எனக்குக் கெட்ட கோபம் வரும்
இப்போது இந்தக் கண்ணாடியில்
உங்கள் முகத்தைப் பாருங்கள்
என்மீது கோபம்வந்தால் குட்டுங்கள்
அன்பு பொங்கினால் கொஞ்சுங்கள்