பால்ய கால சகோதரி
சகோதரி,
குழந்தைப் பருவத்திலேயே
ஒரு பேரிடித் துயராகப்
பிரிந்துபோன சகோதரனை
நாற்பது நாற்பத்தைந்தாண்டு காலம் கழிந்து
இன்று சந்திக்க வாய்த்ததுபோல
பேசறியாப் பிரியம் உந்த
கடைத் தெருவுக்கும் அடுக்களைக்குமாய் ஓடி ஓடி
உன் ஆர்வ நரம்புகள் அதிர அதிர
அவனுக்காக நீ சமைத்ததையெல்லாம்
வந்து வந்து பரிமாறிக்கொண்டேயிருக்கிறாய்
அவனோ காலத்தின் சம்மட்டி அடியால்
ஓர் எளிய நாடோடியாய் மாறிவிட்டிருப்பவன்
வழிப்போக்கன். பிறர்முன்
தன் முக்கியத்துவத்தைத் தாங்க முடியாதவன்
தகுதியில்லாதவன்போல் சங்கடப்படுபவன்
எளிமையும் சிறிதுமான உணவுகொள்வோன்
உன் அன்பளிப்புகளின் வண்ணங்களையெல்லாம்
ஏற்கப் போதிய பாத்திரங்களில்லாதவன்
நன்றியாகத் திருப்பித் தருவதற்கும் ஏதுமில்லாதவன்
இவை எல்லாம் தெரிந்தும் கண்டுகொள்ளாமலேயே
நீ பாட்டுக்கு இயங்கிக்கொண்டிருக்கிறாய்
அவனது சுவைநரம்புகள் மீதுதான் உனக்கெத்தனை நம்பிக்கை!
சுவை ஒவ்வொன்றையும்
தவறாது அவன் உணர்வது கண்டு பூரிக்கிறாய்
கானகம் ஆறு மலை
நித்ய கார்மேகம் தவழும் சிகரம் – என்றான
அவனது யாத்திரைகளின்போது
ஆற்றங்கரைப் புடவுகளில் ரா முடித்து
பொங்கும் காலையிளம் பரிதியின்
ஒளிப்பேரின்பம் காணுகையிலும்
வண்ணங்களும் சுவைகளும் நிரம்பிய
தேன்கனிகளில் பல் பதிந்து அவன் பரவசமடைகையிலும்
சகோதரி,
அவன் உன்னையும் உன் பிரியத்தையுமே கண்டடைகிறான்