முத்துச் சிப்பியின்...
தூய்மையில்
புல்லிய
சிறு மாசும்-
அது தாளாத
துயர்க் கனலும்
பிறப்பித்தன
ஒளிரும் ஒரு
முத்தினை
Poet Devadevan
தூய்மையில்
புல்லிய
சிறு மாசும்-
அது தாளாத
துயர்க் கனலும்
பிறப்பித்தன
ஒளிரும் ஒரு
முத்தினை
அன்றைய என் அவதானத்திற்குள்
என் பிழைகள்
என்னைத் தகித்துக்கொண்டிருக்கையில்
நான் தெரிந்துகொண்டேன்
ஒரு கல் வைரமாவதிலுள்ள ரசவாதத்தை
அது என்ன ஓசைகள் என் இனியவனே!
என்ன செய்துகொண்டிருக்கிறாய் நீ?
எப்படி இருக்கிறாய்?
பேசத் தொடங்கும்போது-
சிரிப்பும் கும்மாளமுமோ
போரும் துயரோலமுமோ
அமைதி தவிர்த்த
எதுவாயிருந்தாலுமென்ன?-
பிசிறில்லாத உரையாடலுக்காய்
கைத்தொலைபேசியோடு
என்னைப் போலவே
நீயும் உன் பிரதேசத்திலிருந்தும்
விலகிவந்து நிற்பதை
இங்கிருந்தே உணரமுடிகிறது
வேண்டுவதெல்லாம்
இந்த விவேகம் ஒன்றுதான் நண்பனே!
வாசல் விட்டிறங்கி
இரண்டு எட்டு கிழக்கே நடந்தால்
காய்கறிச் சந்தை! அவ்வளவு பக்கம்!
நாம் எதற்கு வாசல்தோறும் வந்து கூவும்
கூடைக்காரிகளைச் சார்ந்திருக்க வேண்டும்?
எத்தகைய செல்வம் இது!
இத்துணை பசுமையும் தூய்மையுமான
காட்சி வேறுண்டோ உலகில்?
காலையில் இவை முகத்தில்
முழிப்பதுதான் எத்தனை இன்பம்!
வெறுமே வாய்க்கும் வயிற்றுக்குமாய்
உண்பதற்கு மட்டுமே எனில்
இத்தனை வண்ணங்களில் இயற்கை ஏன்
இவற்றைப் படைத்திருக்க வேண்டும்?
நம்மைக் கொஞ்சி மகிழப் பீரிய
பித்துவெறிவேகத்தின்
பிரியப் பிதற்றல்கள்தாமோ இவ்வண்ணங்கள்?
அங்கு சென்றுவரும்போதெல்லாம்
காதலால் தீண்டப்பட்டவன்போல்
நான் வருவதை என் துணைவி பார்க்கிறார்
ஒரு பெரும் அற்புதத்தை நிகழ்த்தப்போவதுபோல்
காய்கறிப் பையைத் தலைகீழாய்க்
கூடம் நடுவே கொட்டுவேன்
ஆ! எத்தனை அழகு ஓவியம்!
என் மனைவிக்கு அந்த வேலையை
விட்டுக் கொடுத்துவிடாமல்
ஒவ்வொன்றையும்
பிரியம் பிரியமாய் நானே பிரிப்பேன்.
சமையலறை மேஜைமேல் ஒரு பாத்திரத்தில்
பூக்குவளை மலர்கள்போல் அமைத்து
அவற்றைப் பார்த்துப் பார்த்து நெகிழ்ந்தபின்தான்
பதனப் பெட்டிக்குள் பத்திரப்படுத்துவேன்
சோயாபீன்ஸை உரித்து உரித்து
பருப்புகளைக் கைகளில் அள்ளி
அந்த மெஜந்தா விழிகளைப்
பாத்துக்கொண்டிருப்பதற்காகவே
நான் வாழ்வேனே இப்பூமியில் பல்லாண்டு காலம்!
தனியாகச் செல்லும் மனிதனைப் பிடித்துக்கொண்டு
கானகம் அச்சுறுத்தத் தொடங்குகிறது
அடர்ந்த புதர் ஓரக் கொடிகள்
ஆடைபிடித்து இழுக்கின்றன
ஓயாது ஒலிக்கும் அதன் நிழலிருளில்
உறுமிக் கொண்டிருக்கின்றன சிறுத்தைகள்
சருகுநிலம் சரசரக்க வந்து
பாம்புகள் அவன் கால்களைச் சுற்றிக்கொள்ளக்
காத்திருக்கின்றன
நினைவுகள் மறக்காத யானைகள்
துரோகி துரோகி எனக் கோபத்துடன்
சவட்டி நசுக்கத் துடித்துக்கொண்டிருக்கின்றன
அத்துணை பயங்கரக் கானகத்துள்தாமோ
இத்துணை எழிலார்ந்த வனதேவதைகளின் நடமாட்டங்களும்!
இன்பமாய்ப் பாடிக்கொண்டிருக்கும்
எத்தனை மலர்கள்! எத்தனை சிற்றுயிர்கள்!
எத்தனை பறவைகள்!
தித்திக்கும் சூரிய ஒளிக் கதிர்களணிந்து
ஜொலிக்கும் நீர்நிலைகள்
காண்பார் தழுவிக் களிக்கும் தேன் காற்று!
கானுயிர்கள்
ஒன்றையொன்று சற்றே வெட்டியும் ஒட்டியும்
அனுசரித்து வாழும் வாழ்வில்
மானுடக் கொடூரங்களே உள்ளனவோ?
களங்கமின்மையும் மிரண்ட கண்களின்
உயிர்ப் பொலிவும் கொண்டு
துள்ளித் திரியும் மான்கள்
புதர்களிலிருந்து புதர்களுக்குப்
பாய்ச்சலும் பரபரப்புமே நடையாய்
ஒளிரும் வெண்முயல்கள்
நெருக்கியடித்துக்கொண்டு நிற்கும் மரங்கள்
பெருமரங்களின் கீழ்
திணறி நிற்கும் சிறு மரங்கள்
செடிகொடிகள் புல்பூண்டுகள்
புழுக்கள் வண்டுகள் பறவைகள்-
என்றாலும்
கானகத்தின் எந்த ஓர் உயிரினம்
மனிதனைப் போல்
பெருங் காமமும் சிறு புத்தியும் கொண்டுள்ளது?
குத்தி
நுழைந்து
முறிந்து
குருதி மாந்தியபடியே
கிடந்து
அழுந்தி
புண்ணும்
சீழும்
வாதையுமாய்த்
துயர் தரும்
முள்ளும்,
அம் முள்ளைக்
குத்திக்
கிளர்த்தி
வெளிக்கொணர்ந்து
துயராற்றத் துடிக்கும் முள்ளும்
ஒன்றாமோ?
உன் இரத்தத்தில் ஒலிக்கவில்லையா
”தர்மம் போடுங்க சாமீ!” என்றபடி
பிட்சா பாத்திரத்துடன் ஒரு பரதேசி
வீடு வீடாய் ஏறி இறங்கும் காட்சி?
அதைத்தானோ
”நீயே கடவுள்
தர்மமே உன் கடமை!” என்று
கம்பீரமாய்ப் பாடுகிறான் கவிஞன்?
அந்தோ! அன்று அச்சிறு செடி
வழிவிலங்கொன்றின் கால்மிதிபட்டோ
காட்சியளித்தது அப்படி?
பதறி அதனருகே சென்று குனிந்து
அதைத் தொட்டு நிமிர்த்தியபோது கண்டேன்:
அதனை அவ்விதம் இழுத்துக் கவிழ்த்தியிருந்த
இலைமறை கனியொன்றின் பாரம்!
கம்பீரமான ஒரு கல்மரமாய்த் திமிர்ந்து
வான்நோக்கி நிமிர்ந்து எழுந்து
ஒரு பூங்கொத்தைப்போல்
தாங்கி நிற்கலாகாதா,
விதையும் கனியுமான பாரத்தை
அச் செடி?
நிலவடிக்கையிலும்
நிழலை வீசுகின்றன ஏன் இம்மரங்கள்?
இத் தண்ணொளியும் அமைதியும்
கனவுமில்லை நனவுமில்லையெனில்
வேறென்ன?
கருத்துநிலைகளுக்கெட்டாத
பேருண்மையின் வரைபடமோ?
என் நேசத்திற்குரிய வீட்டிற்கு
ஒரு வருகை அளிக்கவே விரும்பினேன்
அங்கே, துள்ளி மணம் வீசிக்கொண்டிருக்கும்
குழந்தை மலர்களுக்கு
கொஞ்சம் இனிப்புகளோ பொம்மைகளோ
பெரியவர்களுக்கு
வளம் கூட்டும்படியான பொருள்களோ
ஆதரவு வார்த்தைகளோ-
அளிப்பதற்கு ஏதுமில்லாத
ஒரு நிலையும்தான் வந்ததே இன்று
எனக் குழம்பி நிற்கிறேன்
கொடுப்பதற்கு ஏதுமில்லாதது மட்டுமின்றி
பெறுவதற்கே நிற்குமொரு
பிட்சா பாத்திரமேயா நான்?
எனினும் சிறுபசி ஏதுமில்லா இவ்வேளை
அவ்வீட்டினைக் கண்ணுற்றபடியே
கடந்து செல்லவே விரும்புகிறேன்
நான் தாண்டிச் செல்லச் செல்ல
தாண்டிச் சென்ற வீடுகளெங்குமே
வளமும் இன்பமும் பெருநிறைவும்
பொங்கிப் பெருகவேண்டும்
என்பதுபோல் நிலவத் தொடங்கும் ஒரு மவுனத்தை
நப்பாசைக் கனவென்று
எண்ணவே முடியாதவாறு
அங்கே தோன்றி நின்றதே அது!
மரக்கிளையில் துயிலும் மனிதனைப் போலின்றி
எல்லாப் பிடிகளையும் விட்டுவிட்டு
முழுமையாய் என்னை ஒப்படைத்தபடி
துயிலுக்குள் நுழைகிறேன்.
அதனை அங்கே சந்திப்பேன்
என்பதற்கான சூசகமான அகவெளியை
அப்போதே அடைந்தவனாகிறேன். ஆனால்
வேட்டையாடப்பட்ட இரையைத்
தன் இடம் இழுத்துச் செல்லும் மிருகம் போல்
தூக்கம் என்னைக் கொண்டுபோய்விடுகிறது.
விடியலில் நான் காணாத விடியல்
ஏமாற்றத்துடன் திரும்பிப் போகிறது
என் தூக்க போதையில் தெரிகிறது
இரவு தோறும் என் உறக்கத்தின் ஆழத்துள் புகுந்து
அது என்னைத் தேடுகிறது.
இரவில் நான் திடுக்கிட்டு
எழுந்து உட்கார்ந்தபோது
அது அங்கே இருந்ததைப் பார்க்கிறேன்
மேன்மையான ஓர் இதயம்
அதுதான் துயரத்திற்குக் காரணமா?
துயருறுவதும்
அதன் தகுதிக்கு ஏற்றதுதானா?
இல்லை, அதன் தகுதிதான் அத்துயரோ?
மிக எளிதில் துன்புற்றுவிடக்கூடிய
மிக எளிதில் களிப்புற்றுவிடக்கூடிய
மிக எளிதில் கொந்தளித்துவிடக்கூடிய
மிக எளிதில் அமைதியடைந்துவிடக்கூடிய
இந்த இதயத்தின் பொதுத்தன்மைதான் என்ன?
படிம்மும் துயருமில்லாத ஓர் இதயத்தின்
சாத்யதை மற்றும் சாத்யமின்மையைத்தான்
படிமமும் துயருமில்லாத
இக்கவிதை பகிர்ந்து கொள்ள நினைக்கிறதா?
படிமத் துயர் துறந்த இதயங்கள்தாமோ
வானில் சிறகடித்துச் செல்லும் பறவைகள்?
ஆவலோடுதான் தபால்காரரை நெருங்குகிறான்.
தபால்கள் பெற்று வாசித்து முடிக்கும் போதெல்லாம்
தவறாமல் எரியும் ஓர் உணர்வு
ஏமாற்றம் என்பது இல்லை எனில்...
அன்றாடம்
காண்கிறதும் கேட்கிறதும் வாசிக்கிறதுமான
மேல் விபரங்கள் எல்லாம்
வெகுவிரைவில் மறைந்துவிடும் மாயமும்
அக்கறையிழந்துவரும்
சுரணை நலிவினால் என்றில்லையெனில்...
அணையாது வேகும் காத்திருப்பே இது எனில்
தவிர்க்கமுடியாமல் விளையப்போகும்
என்ன் விபரீத்த்திற்காக? அல்லது நற்சமிக்ஞைக்காக?
இவை ஒன்றுமேயில்லையெனில்
எதை உட்கொள்வதற்கான பசி இது?
எதைச் சமைப்பதற்கான தழல்?
புதிய பாதையில் முதலடி வைத்தவள்
கால காலங்களாய்த்
தன் பாதங்கள் நடந்து வந்த
பாதையைத் திரும்பிப் பார்க்கிறாள்.
எத்தனை தவறான பாதையில்
எத்தனை காலங்கள்! எத்தனை துயர்க் கதைகள்!
ஆழ்ந்த பெருமூச்சுப் புயல் ஒன்றில்
எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு விட்டனவா?
இழப்புகளின் துயரமாரமில்லை இது.
புதிய பாதை அவளிடம் கேட்டு நிற்கும்
இன்மை, முழுமை, தூய்மை, புனிதம் பற்றிய
பதற்றமுமில்லை
அச்சமுமில்லை
திரும்பிப் பழைய பாதைக்குத்
திரும்பிவிடாதிருக்கும் உறுதி மீதாடும்
இரகசியக் கொண்டாட்டம்!
ஆமாம் இரகசியக் கொண்டாட்டம்!
அவள் தன் அடிவயிற்றைத் தடவிப் பார்க்கிறாள்
அவள் இதழ்களிலும் விழிகளிலும்
மறைக்க முடியாத அதன் எதிரொலிகள் கேட்கின்றன
துயர்மிகுதியால்
விழிப்பு தகித்துக்கொண்டிருக்கும் இந்த இரவில்
நான் உன்னை நினைத்துக்கொள்வது-
ஓ, கிறிஸ்துவே, எனது அன்பனே!
என்னையும சிறிதளவு
தனிமைத் துயர் தீண்டுவதாலா?
நண்பனே, உன்னைப் பற்றிய ஓர் அரிய உண்மையை
மிகத் தெளிவாக நான் அறிவேன்:
தனிமை நோய் உனது துயருக்குக் காரணமாய்
ஒருநாளும் இருந்ததில்லை.
வாழ்வைத் தீவிரமாய் விசாரிக்கவல்ல
மனிதர்களைத் தேடித் தேடி நீ ஓடியதும்
மக்களைக் கூட்டிக் கூட்டி நீ பேசியதும்
உன்னைப் பற்றி நீயே சிறு பிள்ளைத்தனமாக
பேசிய பேச்சுக்களையும் நீயே கடந்து
இறுதியில்
ஆறாத பெருந்துயராக நிலைத்ததும்
எதனால் என்பதை நன்கு அறிவேன்.
துயரத்தின் சுமை மேலும் அதிகரிக்கும்படியாகியே
இன்று தோற்று நிற்கிறாயே என் இனியவனே,
மீப்பெரும் துயரொன்றே
கருணையாகப் பொழியக் கூடியதென்பதையும்
பெருவாளாய்ப் போராடக் கூடியதென்பதையும்
உன் முன் முழந்தாளிட்டு உருகுபவர்களிடம்
உணர்த்த இயலாது!
எவ்வளவு காலமாய்
அவள் அவனிடம்
இப்படியே வாழ்ந்து கொண்டிருப்பது?
தப்பிக்கும் வழி துழாவிக்கொண்டேயிருக்கும்
அவள் விழிகளைத்தான்
அவன் கண்டுவிட்டானோ?
திடீர் திடீரென அவளைச் சுற்றி
ஒவ்வொன்றாய்
எத்தனை எத்தனை தடுப்பரண்கள்
சூழ்ந்துவிட்டன?
எல்லாவற்றையும்
அவள் தாண்டிவந்து நிற்கையில்
காட்டுவெளியின் மலையடுக்குகளிடையே
காற்றுமட்டுமே சீறிக்கொண்டிருந்த
இடிபாடடைந்த கட்டடங்கள் நடுவே
அவனது பிடியின் துப்பாக்கி முனையில்
திகிலுண்டு நிற்கும் அவளது குழந்தைகள்!
எவ்வளவு காலமாய்
அவள் அவனிடம்
இப்படியே வாழ்ந்துகொண்டிருப்பது?
வேண்டாம் காதல,
காதலின் சின்னமாய்
நீ தரும் வைரமோதிரம்!
அது நம் பிரிவைச் சுட்டுகிறது
ஆகவே அது ஒரு பொய்
அதன் ஒளியில்
மறைகிறது அதன் பொருண்மை என்னும்
அதன் பொருண்மதிப்பில்
ஒளி மறைந்து
பேரழிவின்
கொலைக் கருவி நெடியே அடிக்கிறது
வேண்டாம், காதல,
வேண்டாம்! வேண்டாம்!
(தோல்விகளாற் சற்றும் துவழாது
காலங் காலமாய்க்
கவிகளும் புத்தர்களும்
தோன்றிச் தோன்றிச்
சுட்டிக் கொண்டேயிருந்தும்)
கூடிவரவில்லையே இன்னும்
சொல்லொணாத் துயரங்களின்றும்
விடுதலை!
பூர்வகுடி இனக்குழுவிலிருந்து இன்றுவரை
மனிதன் சுமந்துகொண்டுவரும்
சுமையெதுவும் அழுந்திப்
பொசுக்காமையினாலன்றோ
பூத்துள்ளது இத்துணை
மென்மையும் அழகும் இனிமையும்,
அண்டசராசரங்களையும் அணைத்து
விரியும் காதலும் கொண்ட
ஒரு கன்னிப் பெண்ணின் இதயம்!
மானுட விஷங்களைத் தன்
கண்டுகொள்ளாமையினாலும்
நிர்த்தாட்சண்யத்தாலும்
தூய்மையாலுமே
கொன்றொழித்துவிட்ட
பேரற்புதத்தை, இரகசியத்தை
அவள் கண்ணின் மின்னொளியில்
கண்டதில்லையோ மானுடர்கள்?
திடீரென்று
அவள் வீடே ஓர் அறையாகத் தோன்றியது,
வெகுகாலம் அறைவாசியாய் வாழ்ந்துவந்த
பழக்கத்தினாலா?
தீரத் தீரத் தன்னுள் மூழ்கி
உண்மையினைத் தீண்டியதினாலா?
ஐன்னலருகே வந்து நின்றவள் கண்டாள்
இப் பூமிதான்-தன் மறதி உதறி-
ஒரு புதிய வீடாய்ப் பொலிந்து நின்றதை!
அவ்வண்ணமே வாசலுக்கு வந்து நின்றபோது-
ஆ, கடவுளே!
கால் தரிக்கத் தரையேயில்லாத வெளி!
கண்ட மாத்திரத்தில் அவள் விலாவில்
அடிவயிற்றை உறிஞ்சிக்கொண்டு
குறுகுறுத்து அசையத் துடித்த சிறகுகள்!
ஆனால், கறுத்த வானத்தில்
ஒரு கரும் பறவையாய்
தனது துயர்ப் பாடலால்
ஒரு துயர்ப்பாடலாக மட்டுமே
அறியப்படுகிறாள் அவள்
வியர்த்தமாகிக் கரைகின்றன வெளியெங்கும்
யாரோ அழுதழுது புலம்பும் பிரார்தனைகள்
பட்டம் விடும் சிறுவனைப்போல்
யாரோ இந்த அகால வேளையில்
விண்ணை அளாவிக் கொண்டிருக்கிறார்கள்?
இல்லை,
விண்ணோடு விண்ணாய்
விண்ணிற் கலந்து நிற்கிறது எதுவோ
விழித்திருக்கும் ஒரு படுக்கை
அகலத் திறந்த சாளரம் வழியாய்
தன் பிரக்ஞை வீசிப் பிடிக்க
முயன்று முயன்று தோற்கிறது அதனை
விண்ணில் மிதக்கும் அழியாத இன்மையோ
சாளரங்கள் வழியே
புயலாய்ப் பாய்ந்து சென்று
விழித்திருக்கும் வெற்றுப்
படுக்கைமீது படுக்கையாய்ப்
புல்லிக்கொள்ள விழைகின்றது
வாழ்வின் பெரும் பகுதியும்
பொருளீட்டுவதிலும்
கேளிக்கைகளிலுமே கழிந்துவிட,
எஞ்சிய சொற்பப் பொழுதுகளின்
குழந்தைத்தனமான சந்தோஷங்களினின்றும்
யாரோ அலட்சியப்படுத்தப்பட்டுக் கிடக்கும்
சில்லறைகளைச் சேகரித்துச் சேகரித்துத்தான்
இன்னும் அழிந்துபோய்விடாத இன்பஉலகின்
நோய்க் குழந்தையைக் காப்பாற்றிவருகிறார்கள்.
களைத்த உடலுக்கடியே
தூக்கம் விரிக்கும் மஞ்சத்தைப் போல
மனிதர்களை இளைப்பாற்றி வருகிறாரகள்
பதறிப் பதறித் தங்கள் குழந்தைகளைப்
பேணுதற்கே மனிதர்கள் துடித்துக்கொண்டிருக்க
அந்த யாரோதான் இரக்கம்கொண்டு
அவர்களையும்சேர்த்துக்
காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்
நமது தனிமைகளிலெல்லாம்
தவறாது காட்சி தருகிறது
கண்ணீர் ததும்பும்
அந்த யாரோவின் முகம்
விடுதலையானாற் போல் சிறகடித்தாள்
விதவையான பிறகும் மல்லிகா
எழுதுவது அதிகமானது மட்டுமின்றி
கருத்தரங்குகளிலும் மனிதரிடையே ஜொலித்தாள்
ஆண்கள் ஜொலித்தால்
அது அவர்கள் ஆற்றலின் விகசிப்பு
பெண்கள்தாம் முன்வந்தால்
அது காமத்தின் தந்திரப் பரிதவிப்பா?
ஃபிராய்டியம் நாறும்
சில ஊத்தை வாய்களை மூடியபின்தான்
மல்லிகாதன் கட்டுரையை வாசித்தாள்:
மனிதர்களாகிய நாம்
இன்னும் எந்த ஒன்றையும்
சரியாகக் கற்றுக்கொள்ளத் தொடங்கவில்லை
முதலில் நம்மைநாம் அறிந்து கொள்ளவில்லை
பெண்கள் முன்னே ஒரு ஆணும்
ஆண்களிடையே ஒரு பெண்ணும்
ரொம்ப அலட்டிக் கொள்வதைப் போலவே
ஆழமற்றிருக்கின்றன நமது தாபங்கள்.
பொழுது போகின்றது காலம் காலமாக
ஆழமற்ற வேட்கைகளும் வேட்கையடங்கல்களுமாக.
வலியும் துயரும் உணராக்
கேளிக்கைகளும் துய்ப்புகளுமாக
இப்போதும் மல்லிகாவை
ரொம்ப அலட்டிக் கொள்வதாகச் சொல்பவர்கள்
யாரிடையே எவ்வேட்கை கொண்டென்ற
விசாரணையினைத் தொடர்கிறார்களா?
அவளோடு அவளாகி
அவன் முகம் பார்க்கவா,
அவளைப் பார்க்கையில்
சுடரும்
அவன் முகம் பார்க்கவா,
அவளை முன்தள்ளிப்
பின்னிற்கும்
பக்கத்துணையாகவா,
அவள்முகம்
வாடிவிடக் கருத்து நோக்காதவாறு
அவனை
எச்சரிக்கவா, வேண்டிக்கொள்ளவா,
உச்சமானதொரு
சிபாரிசின்
அகலாது
உடன் வரும்
ஆர்வமாகவா, உறவாகவா,
அவள் தோளோரக் கூந்தல் சரிவில்
தொற்றிக் கொண்டிருந்தது
ரோஜா?
உலகத் துயர் களைய
தன் ராஜ்யம் துறந்து
மணிமேகலையையும்
அமுதசுரபியையும்
உலகுக்களித்தான்,
தெய்வீகமும்
நான் எனும் பிரக்ஞைத் துயர்வலியும்
அடிபட்ட புள்வலியுமாய்ப்
பிறந்த சித்தார்த்தன்.
கண்ணன் எனும்
போதையை ஏழைகளுக்கும்
போகத்தினதும் அதிகாரத்தினதும்
லீலா வாழ்வைத்
தங்களுக்குமாக்கிக் கொண்டது,
செல்வக் குறுங்குழுவின்
ராஜ்ய பரிபாலன
பக்திக் கலாச்சாரம்.
நேற்றின் தொடர்ச்சியில் விழிமூடி
வழுக்கிச் செல்வதா?
அப்பொழுதை அப்பொழுதே அறியும்
அனலில் கால்வைப்பதா?
மஞ்சள் காட்டிடையே
எப்போதும் திகழ்கின்றன,
நம் பாத முனையிலிருந்து
பிரியும் இரண்டு பாதைகள்.
உழக்குக்குள் கிழக்கு மேற்காய்
என்னென்ன பேதங்கள், பிரிவினைகள்?
எல்லையற்ற பெருவெளியில்
கிழக்குமில்லை மேற்குமில்லை.
உள்ளதெதையுமே
உணரவியலாத அசமந்தம்.
கானகத்தின் எழிலுக்குச்
சற்றும் இசைவிலாத விபரீதம் போல்
கோவில்நோக்கி ஊடறுத்துச் செல்லும்
அக் கானகப் பாதையில்
சிரிப்பும் கும்மாளமும் பகட்டும் கோலாகலமுமாய்
ஒரு கும்பல்.
நீர் நீந்தும் மீன்கள் போலும்
அன்பில்மாத்ரமே திளைத்துக் கிடக்கும்
ஆருயிர்களே இல்லையோ?
கறைபடாத தூய்மையுடன்
சேறு கடக்கும் மெல்லிய கால்களும்
சிறகு பொருந்திய வெண்ணுடலுமாய்
அன்பின் ஆனந்தம் மாத்திரமே
அறிந்தியங்கும்
பொன்னுயிர்களே இல்லையோ?
எத் தீவினைகட்கும் இடமில்லாது
கழுத்தளவும் நீரில் மூழ்கி
காலமும்
பரிதி நோக்கியே கனன்று நிற்கும்
பூமுகங்களே இல்லையோ?
அந்திச் சூரியனின் இரத்தச் சிவப்பில்
ஏரியெங்கும் கனன்ற மனத் தளர்ச்சியின்
சொல்லொணாத் துயர்.
காணும் பொருள்கள் யாவுமே
வாயும் வார்த்தைகளுமற்றதுகளாய்
அன்றைய பகல் முழுதுமே
துயரத்தின் கனலானது ஏன்?
வானம்தன் முடிவின்மையில்
விண்மீன்கள் தத்தம் தனிமையில்
மலைகள் தம் அசைவின்மையில்
மனிதனும் தன் ஆளுமையில்
எங்கும் நிலை கொண்டுள்ளது
துயரமே தானோ?
நீரைக் கிள்ளி உசுப்பி எழுப்பி
யாவும் இன்பத்தில் நனைந்து சிலிர்க்க
அள்ளி வீசிப்
பாடி ஆடிவரும் தேவதைகள்
எங்கு மறைந்து போனார்கள் இப்பூமியில்?
ஒரு பேருவகைக்காய்
தொடங்கியிருக்கின்றனவோ,
மலர்கள் கனிகள் தாவரங்களெங்கும்
ஒளியும் மணமும் வண்ணங்களும்?
ஆறாத் துயருக்கும் போருக்கும்
அமைதியின்மைக்குமாய்த்
தொடங்கியிருக்கின்றனவோ,
வியர்வை நாறும் கட்டடங்களெங்கும்
பழியும் பாவமும் மூடத்தனங்களும்?
சிவந்து இருண்டுநிற்கும் நீர் நடுவே
கருப்பும் வெள்ளையுமாய் நீந்தும் சில பறவைகள்.
நம்மைப் பிணித்திருக்கும்
அனைத்தையும் துறந்து
தன்னந்தனியாய் நிற்பதுபோல;
எவரையும் பின்பற்றாமல்
தனக்கான வாழ்வைத்
தானே கண்டடைந்து தொடர்வதுபோல;
கிரகிக்க வொண்ணா மனிதர்கள் நடுவே
சொல்லொணாப் பொருள் பற்றிச்
சோர்வின்றிப் பேசுவது போல;
ஆற்றுவெள்ளத்தோடு அடித்துப்போய்விடாத
ஆற்றோரத் தாவரம்போல; பாறைபோல;
பறவை போல;
தன்னந் தனியாய் மலையேறித்
திரும்ப இயலாது
மறைவது போல;
துயரங்களினின்றும் தோல்விகளினின்றும்
வேதனைகளினின்றும்
விலகிக் கொள்ளவே முடியாதது போலவும்;
இவை யாவுமறியாத
தாவர இயற்கையின்
மலர்களைப் போலவும்;
ஒவ்வொரு வைகறையிலும்
வாசற் பையில் வந்து கிடக்கிறது
ஒளிவீசும் பரிசுப் பொருள்.
வியர்வையும் இரத்தமும் கண்ணீருமாலான
கடின உறை சுற்றி
காதலால்
நெகிழப் பொதிந்து
கட்டப்பெற்ற பொட்டலம்.
யாண்டும்
மனிதர்கள் தம் வீட்டிற்குள்
விழிமலர்ந்து நிற்கும்தம் குழந்தைகளுக்கு
கனிகளைப் போலும்
கடின உறை சுற்றியிருக்காத
தூய பரிசுப் பொருள்களையே நல்கலாகாதா?
பிரித்த உறை ஒளித்து எறிந்து
எத்தனை மறைத்தும்
வீதிவழி செல்கையில்
அக் கடின உளைகளைக் கண்டு
கசியும் குருதிக் காயங்களுடைய
பெரியவர்களாகி விடுகின்றனரே
குழந்தைகள்!
தன் உயிர்க்கே ஆதாரம்போல்
எதையாவது பற்றிக் கொண்டிருக்காத
மனிதனே இல்லையோ இப் பூமியில்?
தனது ஊன்றுகோல்களே
கொலைக் கருவிகளாய் மாறும்
இரசவாதம் அறியாத
மூடமும் வல்லாண்மையும்தான் மனிதனா?
தருணம் ஒவ்வொன்றிலும்
தன் மாண்பினை வெளிப்படுத்தும்
ஆதாரமற்ற வெளியின்
அமைதியும் தனிமையும் எங்கே?
தனது பற்றுப் புள்ளியை மய்யமாக்கியே
தனது நா அலமாரியில்
வரிசை கொண்டிருக்கும் ஓராயிரம்
நூலறிஞர்களின் கட்டுரைகளால்
என்றாவது நிலைநிறுத்தப்பட்டிருக்கிறதா
அமைதி, இப்பூமியில்?
துயர்வலி மட்டுமேதானோ
என் தேன்சிட்டே
உயிர்வாழ்வின் ஆனந்தம் அறிந்த
மனிதனின் பிரக்ஞை?
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP