காடு
தனியாகச் செல்லும் மனிதனைப் பிடித்துக்கொண்டு
கானகம் அச்சுறுத்தத் தொடங்குகிறது
அடர்ந்த புதர் ஓரக் கொடிகள்
ஆடைபிடித்து இழுக்கின்றன
ஓயாது ஒலிக்கும் அதன் நிழலிருளில்
உறுமிக் கொண்டிருக்கின்றன சிறுத்தைகள்
சருகுநிலம் சரசரக்க வந்து
பாம்புகள் அவன் கால்களைச் சுற்றிக்கொள்ளக்
காத்திருக்கின்றன
நினைவுகள் மறக்காத யானைகள்
துரோகி துரோகி எனக் கோபத்துடன்
சவட்டி நசுக்கத் துடித்துக்கொண்டிருக்கின்றன
அத்துணை பயங்கரக் கானகத்துள்தாமோ
இத்துணை எழிலார்ந்த வனதேவதைகளின் நடமாட்டங்களும்!
இன்பமாய்ப் பாடிக்கொண்டிருக்கும்
எத்தனை மலர்கள்! எத்தனை சிற்றுயிர்கள்!
எத்தனை பறவைகள்!
தித்திக்கும் சூரிய ஒளிக் கதிர்களணிந்து
ஜொலிக்கும் நீர்நிலைகள்
காண்பார் தழுவிக் களிக்கும் தேன் காற்று!
கானுயிர்கள்
ஒன்றையொன்று சற்றே வெட்டியும் ஒட்டியும்
அனுசரித்து வாழும் வாழ்வில்
மானுடக் கொடூரங்களே உள்ளனவோ?
களங்கமின்மையும் மிரண்ட கண்களின்
உயிர்ப் பொலிவும் கொண்டு
துள்ளித் திரியும் மான்கள்
புதர்களிலிருந்து புதர்களுக்குப்
பாய்ச்சலும் பரபரப்புமே நடையாய்
ஒளிரும் வெண்முயல்கள்
நெருக்கியடித்துக்கொண்டு நிற்கும் மரங்கள்
பெருமரங்களின் கீழ்
திணறி நிற்கும் சிறு மரங்கள்
செடிகொடிகள் புல்பூண்டுகள்
புழுக்கள் வண்டுகள் பறவைகள்-
என்றாலும்
கானகத்தின் எந்த ஓர் உயிரினம்
மனிதனைப் போல்
பெருங் காமமும் சிறு புத்தியும் கொண்டுள்ளது?