பூந்தொட்டியும் காற்றும்
ஒரே ஒரு பூமி – அதில்
ஒரே ஒரு விருட்சம்
நானோ அந்த பூமிக்கு வெளியே
ஆகவே, அந்த பூமியின்
அந்த விருட்சத்தின்
கடவுள் நான்
தாய் பூமியின் ஈர்ப்பு மடியில்
இந்த பூமி அமர்ந்திருக்கிறது
அங்கிருந்து இதற்கு
உணவும் நீரும் எடுத்துக் கொடுப்பது நான்தான்.
கடவுளல்லவா?
இவ்வளவும் எதுக்கு?
விருட்சம் தரும் ஒரே ஒரு பூவுக்கு
ஒரே ஒரு விருட்சத்தின்
வேர் முழுக்கத் தாங்கிய
ஒரே ஒரு பூமியின்
ஒரே ஒரு பரிசு இந்தப் பூ!
பூவின் சுகந்தமோ
பேரண்டமெங்குமிருக்கும்
எல்லாக் கோள்களையும்
கிளுகிளுக்கச் செய்கிறது
மாலையில் பூ மடிகிறது
கடவுளும் மடிந்து விடுகிறான்
இன்னொரு பூ மலரும்போது
கடவுள் உயிர்த்தெழுகிறான்
பூவின் சுகந்தமோ மடிகிறதேயில்லை
அவன் அடிக்கடி இதை மறந்து விடுகிறான்
அப்போதெல்லாம் மரிக்கிறான்
ஏதோ ஒரு ஆனந்தத்தின் சிலிர்ப்பில்
சலனத்துக்காளான வெளியின் வஸ்துகள்…
ஹே! இந்த சுகந்தத்தைக் கூடியும் கூட
அதைப் பொருட்படுத்தாது போவதெங்கே?
ஓடிப்போய்ப் பார்த்தேன்:
வாயிலும் ஜன்னல்களும் வரவேற்றன
நுழைந்தது காற்று. நுழைந்த கணமே
விரட்டுகின்றன வாயிலும் ஜன்னல்களும்
என் வீடு விரும்புவதென்ன?
உறைந்து நிற்கும் அம்மாவின்
புகைப்படத்தையும் மேஜை மீதிருக்கும்
காதலியின் புகைப்படத்தையும்
ஒரே கோட்டில் இணைத்தவாறு
தொட்டு விசாரமின்றிச் செல்கிற காற்றில்
இருவரும் புன்னகைத்து நிற்கின்றனர்!
காற்று சதா கடந்து செல்கிறது
தனது நிச்சலன முற்பிறப்பைத் தேடியா அது போகிறது?
அல்ல அல்ல
தன்னை உயிர்ப்பித்த ஆனந்தத்தின் சிலிர்ப்பை
எங்கும் உண்டாக்கியபடி
ஆனந்தமாய்ச் சென்றுகொண்டிருக்கிறது