காற்றடிக் காலம்
1.
தும்பிழுத்துக் கதறும் கன்றாய்
பறக்கத் துடித்தன மரங்கள்
பறக்கத் துடிக்கும் கூண்டுப் பறவையாய்
சுவர் ஜன்னலும் படபடக்கிறது
பறக்க இயலாத சோகத்தில்
முறிந்து விழுந்து அழுதது முருங்கைமரம்
விளையாடப் போன தம்பி
வெகுநேரமாய்த் திரும்பாததில் பயந்து
தேடிக்கொண்டு வந்து
நையப் புடைத்தாள் அம்மா
தானும் பறக்கத் தவிக்கும் கூரையைக்
கஷ்டமாய் பார்க்கிறான் குடிசைக்காரன்
2.
ரூபமற்ற சாரமற்ற இங்கிதமற்ற காற்று
எதிரே வருபவர்களையெல்லாம் வீதியில் வைத்து
வெறிகொண்டு தழுவுகிறது
முகஞ்சுளித்துப் பழித்துப்போனாள்
வயசுப்பெண் ஒருத்தி
வெகு உயரத்தில் திரிந்த பறவைகள்
இறக்கைகள் களைத்து, மரக்கிளை
புல்வெளிகளில் இளைப்பாறி நிற்கின்றன.
காற்றில் சுழித்து
மரக்கிளையில் குத்திக்கொண்ட பட்டம்,
நூலில் இழுபட்டுக் கிழிய
கைவிட்டு ஓடிப்போன குழந்தைகள்
நவ்வா மரத்தடியில் பழம் பொறுக்குகின்றன
ஓலை கிழித்துச் செய்த காற்றாடி வட்டங்களில்
காற்று திணறியது
காலம் மறந்தது; வேதனை மறந்தது;
மகிழ்ச்சி விளைந்தது பிள்ளை முகங்களில்
சுழலாது பிணக்கும் காற்றாடி இறக்கையைத் திருகி
’மந்திரம்’ சொல்லிச் சுழல வைப்பான்
அண்ணக்காரச் சிறுவன் தன் தம்பிக்கு
3.
வேரூன்றவே தவிக்கும் விழுதாக
மரக்கிளையில் நாண்டு தொங்கிய
அனாதை ஒருவன்.
ஊன்றி வலுத்த மரத்தடியில்
காற்றடிக்க அடிக்கச்
சுற்றிச் சுற்றிவந்து
கனிகள் பொறுக்கும் குழந்தைகள்