டிராஃபிக் கான்ஸ்டபிள்
பால்யத்தில்
மந்தை அணைத்துக் கூட்டிவரும்
மேய்ப்பனைவிட
ஆயிரக்கணக்கானோர்க்கு
வழிகாட்டுவான் போல்
மேடையேறி முழங்குகிறவனைவிட
இவனே ஆதர்ஸமாய் நின்றதைக்
காலமற்றுப் பார்த்தபடி
வெறித்து நின்ற என்னை உலுக்கி
மெல்லச் சிரித்தது
ஆடோமாடிக் சிக்னல் இயந்திரம்
மஞ்சள் ஒளிகாட்டி, அடுத்து
பச்சை வரப் புறப்பட்டேன்.
இவ்விதமாய்ச் சென்று
இன்று திகைக்கிறேன்
முடிவில்லாப் பாதை ஒன்றில்
II
மக்கள் மக்கள்
மக்களேயாய்க் கசங்குகிற
அவசரமான சாலைகளில்
நொந்துபோய் நின்றுவிடுகிற
நண்பா!
அவர்கள் எத்தனையோ
அத்தனை கூறுகளாய்
உடைந்து துன்புறும் உன் உளளத்தில்
என்று நிகழப் போகிறது
அந்த மாபெரும் ஒருமிப்பு?
பரிச்சயப்பட்டவர்களோடு எல்லாம்
உறவாடிப் பார்த்ததில்
கை குலுக்கி விசாரித்த அக்கறைகளில்
குற்றவுணர்வுகளில்
எதிரொளிக்கும் புன்னகைகளில்
காபி ஹவுஸ்களில் நம்மை இணைக்கிற
டேபிள்களில்
உன்னைத் தொட்டு என்னைத் தொட்டு
நம் கதைகளை விண்ணில்
கிறுக்கிப் பறக்கிற ஈக்களில்
ஒரே படுக்கை சமைத்து
உடலையும் வருத்திப் பார்த்த
தாம்பத்யங்களில் – என்று
எப்போதோ கிடைத்த
ஒரு கணச் சந்திப்பை
நீட்டிக்க அவாவுகிற
உன் எல்லாப் பிரயத்தனங்களிலும்
லபிக்காத அம் மாபெரும் சந்திப்புக்காய்
என்ன செய்யப் போகிறாய்?
இனி என்ன செய்யப் போகிறாய்?
நிறுத்து!
நிறுத்து! என்றான்
டிராஃபிக் கான்ஸ்டபிள்
அன்று முதல்
என் எல்லாப் பிரயத்தனங்களும்
ஒழிந்து
குறியற்றது எனது பயணம்
III
சலவைசெய் துணியாய்
முன்னும் பின்னும்
போவோர் வருவோர் என
கசங்கிக் கசங்கி
நீ உன் அழுக்கைக் கக்குகிற
இந் நீள் சாலையில்
ஒவ்வொரு முகமும்
தன் நிழல் வீசி
உன்னைக் கடந்து செல்ல
நீ அவற்றைக் கடந்து செல்ல
என்றைக்கு நீ
இவ்வேதனையைக் கடந்து செல்லப் போகிறாய்?
என்றாலும்
என்ன ஆச்சர்யம்!
உன் வழியே நீ செல்லும்
இவ்வுறுதியை உனக்கு யார் தந்தது?
அவர்களை அவரவர் வழி விட்டுவிட
யார் உனக்குக் கற்றுக் கொடுத்தது?
இதுதான் அம் மாபெரும் சந்திப்புக்கான
ஒருமிப்புக்கான
பாதையாயிருக்குமென
யார் உனக்குக் காட்டித்தந்தது?
தார்ச் சாலையில் உதிர்ந்த பூவை
மிதித்துவிடாமல் விலகியபடியே
அண்ணாந்த விழிகளால்
உயரே மொட்டை மாடியில்
கூந்தலுலர்த்தும் பெண்ணை
(புணர்ச்சியின் பவித்ரத்துக்கான தூய்மை)
காற்றாகித் தழுவியபடியே
முன் நடக்கும் தோள்க் குழந்தையின்
பூஞ்சிரிப்பில் கரைந்தபடி
எங்கேயும் மோதிக்கொண்டுவிடாமல்
அற்புதமாய்
சைக்கிள் விடப் பழகியிருக்கிறேன்.
அடிக்கடி குறுக்கிடும்
டிராஃபிக் கான்ஸ்டபிள்
சமிக்ஞையின் முன்
ஒரே கணத்தில்
அலறாமல் அதிசயிக்காமல்
மரித்து உயிர்த்து
செல்லும் வாகனங்களிலே
என் குருதி ஓட்டத்திலே
ஓர் ஒழுங்கியலைத் தரிசித்திருக்கிறேன்