திரை
1.
அவரை பீர்க்கு புடலை பிடிக்க
வேட்டைச் சிலந்தி வலையாய்ப் பந்தல்
அதில் நிலா விழுந்து சிரிக்குது
கொடிவீசத் தொடங்கியுள்ள புடலை
மஞ்சத்து ராணியைப் போல் தலை தூக்கி
ஒய்யாரமாய்ப் பார்க்குது
மதில் கதவின் தாழ்ப்பாள் நீங்குகிற ஒலியில்
திடுக்கிட்டு எழுந்தாள் ஜானகி
தன் கணவரை வரவேற்க; அப்பொழுதே
வலைவிட்டுக் குதித்து உயரத் தனித்தது நிலா
வயிறுகொண்டு ஊரும் ஜந்துவாயிற்று புடலை
திரையாகக் கணவன் முன் போய் நின்றாள் அவள்
2.
குளித்து அழுக்கு நீங்கி நிற்கின்றன தாவரங்கள்
மேகம் நீங்கி ஓடிவந்து
கண்ணாடி ஜன்னலைத் தழுவிய குளிரைக்
கொஞ்சுகிறது வெயில்
உள்ளே ஜானகி
அவள் கணவன் இன்னும் வரவில்லை
கண்ணாடி ஜன்னல் காட்டுகிறது;
சிட் சிட்டென்று
வெளியை முத்தமிடுகின்றன குருவிகள்