குப்பைத் தொட்டி
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கவிஞன் அவன்
ஆகவே மிகப்பெரிய கவிதையும் அவனே
மனிதர்களின், உபயோகித்துக் கழிக்கப்பட்ட
பல்வேறு பொருள்களையும், அதன் மூலம்
பல்துறை அறிவுகளையும் அவன் ஏற்கிறான்,
யாதொரு உணர்ச்சியுமற்று
(மனித உணர்ச்சிகளின் அபத்தம் அவனுக்குத் தெரியும்!)
நவீன உலகைப்பற்றிய
ஒரு புத்தம் புதிய கொலாஜ் கவிதையை
அவன் ’தன்னியல்பா’கவே சமைக்கிறான்
(மூக்கைத் துளைக்கவில்லையா அதன் வாசனை?)
அவன் செய்ததெல்லாம் என்ன?
மனிதப் பிரயத்தனத்தின் அபத்தத்தை அறிந்து
ஒரு குப்பைத் தொட்டியாக மாறி நின்றது ஒன்றுதான்
ஆனால் அந்த நிகழ்வின் அசாதாரணம்
அவனை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கவியாக்குகிறது
’என்னைப் பயன்படுத்திக்கொள்’ என்று
தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும்
ஒரு பெருங் கருங்குழியாக்கிக் கொண்டு
திறந்து நின்ற அந்த முதல் நாளை
அதன்பிறகு ஒரு நாளும் அதற்குத் தெரியாது.
அது தான் உட்கொண்ட பொருளை
ஜீரணிப்பதுமில்லை; வாந்தியெடுப்பதுமில்லை.
(இரண்டுமே ஆரோக்யம் சம்பந்தப்பட்டவையல்லவா?)
மனிதார்த்தத்தை மீறிய
மனிதனைப் பற்றிய, உன்னத கவிதை அது
தரித்திரத்தோடு, இவ்வுலகப் பொருள்கள் மீதே
வெறிமிகுந்த பஞ்சைகளும் பரதேசிகளும்
அக் குப்பைத் தொட்டியில் பாய்ந்து
முக்குளித்து எழுகிறார்கள்.
குப்பைத் தொட்டியின் மூர்த்திகரத்தைப் புரிந்துகொண்ட
பாக்யவான் விமர்சகர்கள் அவர்கள்