சோப்புக்குமிழிகள்
மலைப் பிரசங்கமோ
அண்டத்தில் ஆயிரம் கோள்களைச்
சுழல விடும் வித்தையோ
ஜீவதாதுவினின்று உயிர்கள்
ஜனித்து உலவும் காட்சியோ
கூரை மேலமர்ந்து கொண்டு இச்சிறுவன்
விடும் சோப்புக் குமிழிகள்?
எல்லோரும் காணும்படிக்கு
தனது நீண்ட தொண்டைக் குழாயில்
காலம் கட்டி நின்ற அறிவுக்கரைசலை
உந்தியது
மெசாயா ஒருவரது
சுவாச கோசத்திலிருந்து மேலெழுந்த காற்று
அச்சு – வளையாய்க் குவிந்த
அவரது உதடுகள் வழியாய்
குமிழ் குமிழாய் வெளியேறிற்று
அவரின் அறிவுக் கரைசல்
அவரின் அச்சு – வளை உதடுகள்
குற்றமற்ற சூன்யவளையமாய் இருந்ததனால்
ஒளியின் ஏழு வண்ணங்களையும்
சற்றுநேரம் தாங்கியபடி
அழகழகாய் வானில் அலைந்தன
அவரது சொற்கள்!
சீக்கிரமே ஒளி தன் வெப்பத்தால் அவைகளை
உடைத்து உடைத்து முழுங்கிற்று
ஆ! அந்த ஒளிதான் என்றும்
பார்வைக்குக் கிட்டி
சொல்லில் அகப்படாதேயல்லவா இருக்கிறது!