சட்டை
என்னிடம் கையிருப்பதால்
அதுவும் கை வைத்திருந்தது
என் கழுத்துக்காக அது கழுத்து வைத்திருந்தது
என் உடம்புக்காகவே அது உடம்பு வைத்திருந்தது
(நான் அதற்காக ஏதாவது வைத்திருந்தேனா?)
ஆனாலும்
என்னைத் ’தேவதேவன்’ என்றல்ல,
ஒரு மனித உடல்
என்று மட்டுமே அது எடுத்துக்கொண்டிருந்தது
ஆகவே மனித உடல் எதையுமே
அது ஏற்றுக்கொண்டது
(இதன் பெயர்தான் மனிதாபிமானமா?)
எனக்காக அது பாக்கெட் வைத்திருந்தது
என் பணத்தை அது பாதுகாத்தது
என் உடம்பை அது கவனித்துக்கொண்டது
நான் அதற்காக
ஏதாவது செய்யணுமே எனத் துவங்கி
அதை சோப்புப் போட்டு சுத்தமாக்கினேன்
அதுவும் எனக்காக இருந்ததில் சோர்ந்து போனேன்
தனக்கென ஏதும் கேட்காத சட்டையுடன்
எங்ஙனம் வாழ்வேன்?
அதன் கைகளுக்காகவே என் கைகள்
எனக் கூறிச் சந்தோஷப்பட்டேன்
அதன் கழுத்துக்காகவே நான் என் தலையை
வைத்திருக்கத் துணிந்தேன்
அதன் உடம்புக்காகவே என் உடம்பு
அதைச் சுமந்து செல்லவே என் கால்கள்
இல்லாத அதன் உயிருக்காக
என் உயிர்