கண்டவை
எனது அறையின் கீழே
ஒரு பலசரக்கு மளிகை.
ஆதலால் எலி நடமாட்டம்
தாராளம் உண்டு
நான் ஒழிந்த வேளைகளில்
என் அறைக்குள்ளே நிகழும்
அந்தப் பேரானந்தப் பெருங்கூத்து
எனக்குத் தெரியும்; ஆனால்
கதவு திறந்து நான் தோன்றுகையில்
அலங்கோலமாய்த்தான் கிடக்குது
என் அறை
O
வாசற்படியில் அமர்ந்து
தலை வாரும் ஒரு பெண்
வெளிப் பார்வையிழந்த விழிகள்,
சீப்பு பற்றிய விரல்களில்
சக்தியின் துடிப்பு, சிரசின்
கூந்தல் சிடுக்குகள் இளகி இளகி
விழுந்த மடியில் விழித்த ஒரு சிசு-
மடிவிட்டுத் தவழ்ந்து
முற்றத்து மையத்தில்
கண்டுவிட்டது தனது இடத்தை!
வியப்பில் எழுந்து நின்று
கைகொட்டிச் சிரித்தது
O
உரத்த காற்றில்
கொடியிலாடும் ஆடைகள்
உடல்கள் வேண்டி
ஆர்ப்பரிக்கும் விகாரங்களா?
அல்ல,
உடல்கள் துறந்த பரவசங்கள்!
ஆடை கழற்றி
வேறுவேறு ஆடை அணிந்துகொள்ளும்
மனிதனை நோக்கி
நிர்வாணம் கூறும் ஞானக்குரல்கள்!
அம்மணமான சிலரும்
தம் தோலையே தடித்து மரக்கவிட்டு
ஆடையாக்கிக் கொண்டது கண்டு
வீசும் எதிர்ப்புக் குரல்கள்!
O
மலர் மேய்தல் விட்டு
இணை துரத்தியது
ஒரு வண்ணத்துப் பூச்சி.
மலர் மொய்க்கச் சென்ற
இணைமேல் ஏறித்
தரையில் உருண்டன இரண்டும்
உருண்ட வேகத்தில்
மலர் அதிர்ந்தது
தரையில் சிந்திற்று ஒரு துளித் தேன்
உடன் எழுந்து பறந்தன இரண்டும்
அதனதன் மலர் தேடி
மண்ணில் சிந்திய தேன் நினைவு உறுத்தும்
ஒரு வண்ணத்துப் பூச்சிக்கு மாத்ரம்
மலரெல்லாம் நாறிற்று
தேனெல்லாம் புளித்தது
O
ஜுவாலை வி்ட்டு எரிந்தது செங்கொடி…
சாலை தடை ஆகி
பழுது பார்க்கப்பட்டது
பாடுபடும் பாட்டாளிகள் பாடு முடிந்தது…
எங்கே போச்சு செங்கொடி?
குருதியில் கலந்து போச்சு!
O
கூட்டிக் குவித்த சருகுகள்
எதிரே-
ஒரு குவிலென்ஸ்
பார்வை தரும் வெளிச்சம்
எனினும்
வீரியமற்றுப் பரந்திருந்த
சூர்யக் கதிர்கள் அவை-
குவியவும்
தோன்றுகிறது அந்த நெருப்பு
O