சின்னஞ் சிறிய சோகம்
சாந்தி என்பதும் அமிர்தம் என்பதும் அரவிந்தன் என்பதும்
வெறும் பெயர்கள்தாமே
துயிலும் இம் முகங்களில் வெளிப்படுவதும்
சின்னஞ் சிறிய வாழ்க்கையின் சின்னஞ்சிறிய சோகமே
விழித்திருந்தலே
என்னை வெளிப்படுத்துகிறது
இரவின் மயான அமைதி
என் தனிமையைப் போக்கும் புத்தகங்கள்
கடிகாரத்தின் டிக்டிக்கில்
காலக் குழந்தையின் தேம்பல்
ஆனால்
என் முன் வந்து
குறும்புடன்
(என்னை விழித்தவாறே கனவுகாண்பவனாக்கியபடி)
என் விழிப்பையே வேடிக்கை பார்க்கும் மௌனம்
அந்த மௌனத்தோடு
நான் மௌனமாய் இணைகையில்
வெளிப்பதுவது; மௌனம் மற்றும்
அதில் ஒரு பேருயிராய்க் ததும்பும் இறவாமை
படுக்கையில் எனது குழந்தை நெளிந்தது
இறவாமை(அம்ருதா) என்பது அதன் பெயர்
ஒரு கொசு அவள் மேலிருந்து எழுந்து விலகி
அவளைச் சுற்றி வட்டமிடுகிறது
அதன் ரீங்காரத்தில்
வெறிமிகுந்த ஒரு போர் விமானம்.
கையிலுள்ள புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு
அக் கொசுவை அடிக்க முயலுகிறேன்
தோற்றுத் தோற்று அலைகிறேன்
பத்து விரல்களும் கூடிய எனது கைகளால்
அதை அடித்துக் கொல்ல
இதுவே எனது வேலை எனும்படி முழுக்கவனமாக
கடைசிவரை அதை விரட்டிக்கொண்டே இருக்கிறேன்
துயிலும் எனது குடும்பத்தின் நடுவே
சாந்தி என்பதும் அமிர்தம் என்பதும் அரவிந்தன் என்பதும்
வெறும் பெயர்கள்தாமே
துயிலும் இம்முகங்களில் வெளிப்படுவதும்
சின்னஞ் சிறிய வாழ்க்கையின் சின்னஞ்சிறிய சோகமே