Sunday, December 31, 2023

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் – 3: குழந்தைமையும் மேதைமையும்

எனது வாசிப்பின் துவக்ககாலத்தில் William Blake-இன் கவிதை நூலைப் புரட்டியபோது காணப்பட்ட ‘Songs of innocence’, ‘Songs of experience’ என்று அவர் தம் கவிதைகளைப் பாகுபடுத்தியுள்ள அந்த வரிகளைப் பார்த்தவுடனே நான் அசந்துவிட்டேன். அதற்குப் பிறகுதான் அவர் கவிதைகளுக்குள் நுழைந்ததும், பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த அந்த வரிகளின் பொருளாழத்தை நான் அறிந்துகொண்டதும். என்னை ஈர்த்த கவிகளுள் மிக முக்கியமான ஒருவராக அவர் ஆகியிருந்ததன் காரணமும் இதுதான்.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Read more...

Friday, December 29, 2023

தென்னைகள்

எத்தனை எத்தனை கைகளின்
காதல் மலர்ச் செண்டுகள் போல்
தென்னைகள்!

Read more...

Thursday, December 28, 2023

5 கவிதைத் தொகுப்புகள் பெங்களூரில் வெளியீடு - 30 டிசம்பர் 2023

கவிஞர் தேவதேவனின் 5 கவிதைத் தொகுப்புகள் (ஆட்டோநேரட்டிவ் பதிப்பகம்) 30 டிசம்பர் 2023 அன்று பெங்களூரில் வெளியிடப் படுகின்றன.

கவிதைத் தொகுப்பு - 78 - காண்பதும் காணாததும்
கவிதைத் தொகுப்பு - 77 - நடைமண்டலம்
கவிதைத் தொகுப்பு - 76 - மெதுவிஷமும் பற்ற இயலாப் புதுமனிதன்
கவிதைத் தொகுப்பு - 75 - வேணுவனம்
கவிதைத் தொகுப்பு - 74 - விண்மாடம்

அன்பர்களுக்கு அன்பு அழைப்புகள். விவரங்கள் கீழே.


Read more...

Wednesday, December 27, 2023

இதுவே பேருண்மை

ஒவ்வொரு புள்ளி மழைத்துளியிலும்
உள்ளது நமது பெருங்கடல்
(என்றாலும்)

இதுவே பேருண்மை என்றபடி
இணைந்த பல்லாயிரம் கோடிப்
புள்ளிப் புள்ளித் துளிகளால்தான்
பூமி மொத்தமும் நனைந்தது காண்!

Read more...

Monday, December 25, 2023

சிட்டுக்குருவிகள்

நீரில் குளித்துவிட்டு
நீர் ஒட்டா தாமரை இலை உடம்பைச்
சிலுப்பி நீர் உதிர்த்துவிட்டுப்
பறந்து செல்கிறது பறவை,
உள்ளுக்குள் மட்டும்
தணியாத தாகக் குவளைக்குள்
தண்ணீரையும் விசும்பையும்
நிறைத்துக் கொண்டு!

சூழல் எதனாலும் பாதிக்கப்படாத உன்னையும்
தங்கள் சூழலால் அழித்துவிடக் கூடுமோ
இந்த மனிதர்கள்?

”உடலைத்தானே அழிக்கமுடியும்” என்றே
அது அப்போதும் பறந்து கொண்டிருந்தது.


- துயர்மலி உலகின் பெருவலி (காவியம்) - 2023 தொகுப்பிலிருந்து

Read more...

Saturday, December 23, 2023

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் – 2: ஆளுமையும் குழந்தைமையும்

இன்று நான் இந்த உலகைப் பார்ப்பதுபோலத்தான் குழந்தைப் பருவத்திலும் பார்த்துக்கொண்டிருந்தேன். கொஞ்ச காலத்திலேயே மனிதர்கள் இந்த உலகிற்கு நன்கு பழக்கப்பட்டுவிட்டவர்கள் போலிருப்பதை அறிந்துகொண்டேன். காண்பதற்கும் சிந்திப்பதற்கும் எவ்வளவோ இருப்பதாகப்பட்டது. எந்த வயதிலும் மனிதர்களுக்கே உரிய அச்சம் தவிர்த்த வியப்பும் களிப்பும் எல்லோர்க்குமே இயல்பானது என்பது அறிவோம். வியப்புக்கும் களிப்புக்கும் அப்பால், மிக அதிகமான ஓர் அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் ஆளானவன்போலும், தனித்துப்போனவனாய், ஒரு பேரிடியால் அழுத்தப்பட்டவன் போலும் காண்போர்க்கு விசித்திரமானவனாய் இருந்திருக்கிறேன்.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Read more...

Friday, December 22, 2023

கவிதைகளின் வாசிப்பனுபவம் #1

இந்தக் காணொளியில் ரசிகர் ஆதி, ”சூர்ய மறைவுப் பிரதேசம்”, ”ஒரு மரத்தைக் கூட காணவில்லை” கவிதைகள் தமக்கு எப்படி தெம்பூட்டுவதையும் வாழ்வின் இனிமைகள் எளிய விசயங்களில் இருந்தும் கிடைக்கலாம் என உணர்த்துவதையும் பகிர்கிறார்.


ரசிகர் ஆதியின் காணொளி

சூர்ய மறைவுப் பிரதேசம் கவிதை இங்கே .....

ஒரு மரத்தைக் கூட காணவில்லை கவிதை இங்கே.....

Read more...

Wednesday, December 20, 2023

ஒகேனக்கல் சுற்றுலா மய்யத்தில்

பாறைகள் பொடிந்து
மணற்படுகையான காலமும்…
ஆகிக்கொண்டேயிருக்கும் காலமும்…
நெருப்பு கனிந்து (மணற்கம்பளத்தில்)
நீராகிக் குதித்தோடிக் கொண்டேயிருக்கும் காலமும்…
எத்துணை இளமையோடு! இன்பத்தோடு!

பிழைப்புத் தேடி அமர்ந்த ஏழைகளும்
உல்லாசம் தேடி உலவும் செல்வர்களும்
ஒரு கணம், ஒரோர் கணம்
ஒரு சேர்ந்து கண்டடைந்துவிடத்தானே செய்கிறார்கள்,
எளிமையின் பேரனுபவத்தை? வானரசை?

இங்கே குப்பைகள் குவியாது
தூய்மைகாக்கத் தெரிந்து கொண்டோமானால்
படைத்து விடலாம் தானே
கவிதை உலாவும் கடவுளின் ராஜ்ஜியத்தை?

Read more...

Monday, December 18, 2023

எழுதி முடிக்கப் பட்டிருந்த கவிதை

செயல்பட்ட போதிருந்ததல்ல
எழுதி முடிக்கப் பட்டிருந்த கவிதை

கவித்துவமானவைகளெல்லாம்
சடங்குகளாகவும் கோவில்களாகவும்
சிலைகளாகவும் கடவுள்களாகவும்
ஆகலாம் எனில்
மனிதனைச்
சுரணையற்றவர்களாகவும் மூடர்களாகவும்
ஆக்கும் எத்தனை ஆயிரம்
சடங்கு வகையறாக்களை நாம்
இயற்ற வேண்டியிருக்கும்?

செயல்படாத கவிதை
உயிரற்றதாய்
மக்கு மங்குனியாய் இருக்கிறது மட்டுமல்ல
எல்லாத் தீமைகளையும் விளைவிக்கிறது
அதுவே அல்லவா?

மனிதனைக் கவிதைக்கு அழைத்து நிறுத்துவது
காதல் மட்டுமே அல்லவா?

லட்டு, புட்டு என்னும் சொற்கள்
லட்டு, புட்டு ஆகாது மட்டுமன்றி
பசித்தவன் வாய்க்குள் அதனை
இதுதான் இதனை உண்ணு உண்ணு
எனத் திணிப்பதும் நம்ப வைப்பதும்தான்
எத்தனை கொடுமை, மடமை, அறமின்மை!

Read more...

Saturday, December 16, 2023

கட்டுரைத் தொடர் - கவிதையின் மதம் – 1: மகாநதியும் கடலும்

கவிதையைப் பற்றி நாம் பேச நினைக்கிறோம். கவிதையைப் பற்றிப் பேசத் தகுதியான ஒரே நபர் கவிதைதான். கவிஞன் தன் கவிதையைக் குறித்துப் பேச விரும்பாமல் போகலாம். ஆனால் அந்த மனம் தன் கவிதையை ஆய்வது நல்லது. தேவையானதும் கூட.

முதலில் கவிதை நிகழ்கிறது. அதன்பிறகுதான் அது தன்னை ஆய்வு செய்கிறது. ஆய்வோ கவிதைக்கு அகப்படாமல் போகிறபோக்கில் அது சொல்லிவிட்டுப்போகும் குறிப்புக்களை நமக்குச் செல்வமாகத் தந்துவிட்டுப் போகிறது. கவிதை குறித்த பேச்சோ வேறுகதை. கவிதையைக் கண்டவர்களுக்கு கவிதையைக் குறித்த பேச்சு ஒரு விளக்கம்தானே ஒழிய கவிதை இல்லை. ஆனாலும் விளக்கமும் ஒரு பொருள்தானே. சிலருக்கு இந்த விளக்கம் போதாமல் ஆகிவிடுகிறது. சிலருக்கு அனுபவித்தவர்களின் விளக்கம் இனிமை தருகிறது. என்றாலும் காண்பதே பேரனுபவம்! கவிதை! விளக்கமும் கூட அனுபவத்தை அடைகிற மனதிற்குள் கவிதையைப் பெய்துவிடத்தான் செய்கிறது. அப்போது அதுவும் ஒரு காணல்தான். ஏதானாலும் சரி. கவிதை எப்போதுமே காண்பதற்கான தகுதியையே இறைஞ்சி நிற்கிறது. சரியான விளக்கத்தின் நோக்கமும்கூட அதுதான். ஆனாலும் விளக்கங்கள் கவிதையனுபவத்தைக் கொடுப்பதில்லை என்பதுதான் கண்கூடான உண்மையும் மானுட அனுபவமும்.

முழுக் கட்டுரையும் இங்கே வாசிக்கலாம்.....

Read more...

Thursday, December 14, 2023

கவிதைத் தொகுப்பு - 88, இனி ஒரு விதி செய்வோம் - 2023

கவிதை 1 - பாதை.....

கவிதை 2 - அசைந்தாடும் நீரில்.....

கவிதை 3 - வண்ணத்துப் பூச்சி அது.....

கவிதை 4 - இனி ஒரு விதி செய்வோம்!.....

கவிதைத் தொகுதியை வாங்க. சீர்மை நூல்வெளியை இங்கே தொடர்பு கொள்ளவும் .....

Read more...

Tuesday, December 12, 2023

சுற்று மதில்

சுற்று மதில் மட்டும் இல்லையெனில்

செங்குத்தாய்
படிகள் இல்லாது ஏறி இறங்கும்
ஏணிகளுடன்
மலைகளில் குடியேறிவிட்டவர்கள் போன்ற
அடுக்ககங்களுடன்
தரைத் தளமெங்கும்
வாடாத இயற்கைவெளிகளுடன்

நாம் கட்டிவிட்டோம்
கடவுளின் ராஜ்ஜியத்தை
என்றுதானே நினைத்திருப்போம்?

Read more...

Sunday, December 10, 2023

வானை நோக்கி ஒரு ரோடு

நகரத்துச் சந்தடி,
நெருக்கி நெருக்கி அடைத்து மறித்து
முறைத்துத் தள்ளும்
கட்டடங்கள், வாகனங்கள்
எல்லாம் கடந்து…
வானக் குடை முழுசாய்
விரிந்த வெளிப் பூமி,
நிலவாகக் காணும் வெயில்,
ஏக மௌனம்,
எங்கிருந்தோ உதித்தவர் போல்
ஆணும் பெண்ணுமாய்ச் சிலர்
சாலை அமைக்கும் காட்சி
எங்கே?
சாலை நேரே கண்ணெட்டும் தூரம் வரை
வீடோ ஊரோ ஏதுமில்லை;
அடிவானம் அன்றி.
அருகே
தூளி ஒன்றைத் தாலாட்டும் தாயாய்
தா(ழ்)வாய்க் கவிந்த கருவைமரத்தில்
கனி கனியாய்க் காய்த்துக் குலுங்கின
கஞ்சி நிறைந்த தூக்குச் சட்டிகள்.


-குளித்துக் கரையேறாத கோபியர்கள்(1976) தொகுப்பிலிருந்து.

Read more...

Friday, December 8, 2023

கயிற்றில் நடப்பவன்

இரண்டு கம்பங்களின்
ஒரு நுனியிலிருந்து ஒரு நுனிக்கு
இழுத்துக் கட்டப்பட்ட கயிற்றில்
ஒரு மனிதன்

வான்வெளியில் ஒரு பாதையைக்
கண்டுகொண்டவனாய்
அந்தரத்திலிருந்தும்
தவறி விழுந்துவிடாதபடி
தன் உடல் பேணும் அபிநய
நடை கண்டு விட்டவனாய்...!

அண்ணாந்து பார்க்கும்
ஞானிகளுக்கு ஞானம்
கவிஞர்களுக்கு ஞானமும் கவிதையும்
அந்த மனிதனுக்கு பிழைப்பு
வறுமையிலாததோர் உலகைப் படைக்க
வக்கில்லாத மனிதத் திரளுக்கு
வித்தையும் பொழுதுபோக்கும்!


-துயர்மலி உலகின் பெருவலி (2023) தொகுப்பிலிருந்து.

Read more...

Wednesday, December 6, 2023

தேவதேவனின் கவிதைகள் - கனவிலிருந்து நனவுக்கு

தேவதேவன் தன்னுடைய கவிதைகளை ரசிகர்கள் எப்படி உள் வாங்கிக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அவரைப் பற்றி ஆங்கிலத்தில் 2015ல் எழுதப் பட்டுள்ள இந்த கட்டுரை, கவிஞராக அவர் மலர்ந்ததையும் அவரது கவிதைகள் எப்படி சிலரின் வாழ்வைத் தொட்டன என்பதையும் பதிவு செய்துள்ளது.

முழுக்கட்டுரையும் இங்கே.....

"அமைதி என்பது” கவிதை இங்கே.....

Read more...

Monday, December 4, 2023

எங்கே? எப்போது?

அத்தனை புன்னகை மலர்களாலும்
இயலாமல் போனது

எத்துணை காதல் மலர்ச்செண்டுகளாலும்
இயலாமல் போனது

சில தாவரங்களின் இலைகளெல்லாம்
வட்டவட்டமாய்க் கூடிக்
குறிப்புணர்த்தியும் இயலாமல் போனது

எத்தகைய மனிதர்களானாலும்
சற்றே இசைந்து கூடி
களிக்கும்போதெல்லாம் நிகழ்ந்ததும்
மலராமல் தனிப்பட்டுத் துண்டுபட்டு
இயலாமல் போனது

எரிந்து எரிந்து அணைந்துவிடும்
நெருப்புக்குச்சிகள்தாமா
நாம் கண்டது?
நாம் கட்டிய உலகின்
சூரியன் எங்கே?
சந்திரன் எங்கே?
உதிராத மத்தாப்பு விண்மீன்கள் எங்கே?
நந்தா ஒளிமலர்கள் எங்கே?
நந்தவனப் பூக்கள் எங்கே?


-துயர்மலி உலகின் பெருவலி (2023) தொகுப்பிலிருந்து.

Read more...

Saturday, December 2, 2023

ஓரு கட்டடத்தைப் பாதுகாப்பது எப்படி?

கட்டி முடித்த மனிதன்
இல்லை அந்த கட்டடத்துள்
கதவுகளும் ஜன்னல்களும்
தங்கள் அர்த்தங்களை இழந்து மூடிக்கிடந்தன.
ஓர் உடைப்புவழி உட்சென்ற
திருடர்களும் வேசிகளும்
கள்ளப்புணர்ச்சிக்காரர்களும்
இருந்து புழங்கக் கூசும்
அசுத்தப் பெரும்பாழாய் நாறியது அந்தக் கட்டடம்.

செத்த எலிகளைத் தொடர்ந்து
புழு பூச்சி ஜீவராசிகளும்
பெருச்சாளிகளும் பொந்துகளும் பாம்புகளும்
இருள்தேடி வவ்வால்களுமாய்
செழிப்புடன்
ஜே ஜே என நிறைந்துதானிருந்தது அந்தக் கட்டிடம்.

ஒரு கட்டடத்தைப் பாதுகாப்பது எப்படி என்பதை
ஒரு சாதாரண மனிதன் அறிவான்.
நாம் அறியவில்லை
துயரகரமானது நமது சித்திரம்.


புல்வெளியில் ஒரு கல் (1998) தொகுப்பிலிருந்து.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP