ஓரு கட்டடத்தைப் பாதுகாப்பது எப்படி?
கட்டி முடித்த மனிதன்
இல்லை அந்த கட்டடத்துள்
கதவுகளும் ஜன்னல்களும்
தங்கள் அர்த்தங்களை இழந்து மூடிக்கிடந்தன.
ஓர் உடைப்புவழி உட்சென்ற
திருடர்களும் வேசிகளும்
கள்ளப்புணர்ச்சிக்காரர்களும்
இருந்து புழங்கக் கூசும்
அசுத்தப் பெரும்பாழாய் நாறியது அந்தக் கட்டடம்.
செத்த எலிகளைத் தொடர்ந்து
புழு பூச்சி ஜீவராசிகளும்
பெருச்சாளிகளும் பொந்துகளும் பாம்புகளும்
இருள்தேடி வவ்வால்களுமாய்
செழிப்புடன்
ஜே ஜே என நிறைந்துதானிருந்தது அந்தக் கட்டிடம்.
ஒரு கட்டடத்தைப் பாதுகாப்பது எப்படி என்பதை
ஒரு சாதாரண மனிதன் அறிவான்.
நாம் அறியவில்லை
துயரகரமானது நமது சித்திரம்.
புல்வெளியில் ஒரு கல் (1998) தொகுப்பிலிருந்து.