எழுதி முடிக்கப் பட்டிருந்த கவிதை
செயல்பட்ட போதிருந்ததல்ல
எழுதி முடிக்கப் பட்டிருந்த கவிதை
கவித்துவமானவைகளெல்லாம்
சடங்குகளாகவும் கோவில்களாகவும்
சிலைகளாகவும் கடவுள்களாகவும்
ஆகலாம் எனில்
மனிதனைச்
சுரணையற்றவர்களாகவும் மூடர்களாகவும்
ஆக்கும் எத்தனை ஆயிரம்
சடங்கு வகையறாக்களை நாம்
இயற்ற வேண்டியிருக்கும்?
செயல்படாத கவிதை
உயிரற்றதாய்
மக்கு மங்குனியாய் இருக்கிறது மட்டுமல்ல
எல்லாத் தீமைகளையும் விளைவிக்கிறது
அதுவே அல்லவா?
மனிதனைக் கவிதைக்கு அழைத்து நிறுத்துவது
காதல் மட்டுமே அல்லவா?
லட்டு, புட்டு என்னும் சொற்கள்
லட்டு, புட்டு ஆகாது மட்டுமன்றி
பசித்தவன் வாய்க்குள் அதனை
இதுதான் இதனை உண்ணு உண்ணு
எனத் திணிப்பதும் நம்ப வைப்பதும்தான்
எத்தனை கொடுமை, மடமை, அறமின்மை!