எங்கே? எப்போது?
அத்தனை புன்னகை மலர்களாலும்
இயலாமல் போனது
எத்துணை காதல் மலர்ச்செண்டுகளாலும்
இயலாமல் போனது
சில தாவரங்களின் இலைகளெல்லாம்
வட்டவட்டமாய்க் கூடிக்
குறிப்புணர்த்தியும் இயலாமல் போனது
எத்தகைய மனிதர்களானாலும்
சற்றே இசைந்து கூடி
களிக்கும்போதெல்லாம் நிகழ்ந்ததும்
மலராமல் தனிப்பட்டுத் துண்டுபட்டு
இயலாமல் போனது
எரிந்து எரிந்து அணைந்துவிடும்
நெருப்புக்குச்சிகள்தாமா
நாம் கண்டது?
நாம் கட்டிய உலகின்
சூரியன் எங்கே?
சந்திரன் எங்கே?
உதிராத மத்தாப்பு விண்மீன்கள் எங்கே?
நந்தா ஒளிமலர்கள் எங்கே?
நந்தவனப் பூக்கள் எங்கே?
-துயர்மலி உலகின் பெருவலி (2023) தொகுப்பிலிருந்து.