Friday, November 29, 2024

பெருமழை

எவருடைய பெருவிருப்பமாக -?

நம் எல்லோருடைய பெருவிருப்பமமுமாகவா
பெய்கிறது இந்த மழை?

விண்ணில் கார்முகில்களாகக் கூடிய
கதையினைச் சொல்கின்றன
முத்து முத்தாய்
மேட்டு நிலங்களில்
மலைச் சரிவுகளில்
கண்ணாடிகளில்
மழைத் துளிகள் இணைந்து இணைந்து
வழியும் கண்ணீர்க் கோடுகள்

துயர் நீங்கிய காட்சியா
இந்தப் பெருமழை?

துயரகரமான நினைவுகளேதானா
கார்மேகங்களாய்த் திரண்டு
துயர் நீங்கும் பெருமழையாகவும்
பொழிகின்றன?

Wednesday, November 27, 2024

காந்தியின் பொம்மை

காதுகளைப் பொத்திக்கொண்டு ஒரு குரங்கு
கண்களைப் பொத்திக்கொண்டு ஒரு குரங்கு
வாயைப் பொத்திக்கொண்டு ஒரு குரங்கு

சும்மா சும்மா ஓடிப்போய் நின்றா
நாம் எதையாவது
பார்க்கவும் கேட்கவும் பேசவும் செய்கிறோம்?

காண்பதற்குத்தானே அய்யா
இந்தப் பொம்மைகளையும் வைத்திருக்கிறீர்கள்?

இவைகள் நல்லவைகளா? கெட்டவைகளா?

முன்னறிவில்லாத காணுகையிலிருந்துதானே
மனிதனால் படைக்கப்பட்டிராத
ஒளியின் பாதை
ஓடி வந்து நடத்துகிறது நம்மை?

Monday, November 25, 2024

!?

வியப்புக் குறி என்றும்
அழைக்கப்படும் உணர்ச்சிக்குறியைத்தான்
கொஞ்சம் நீட்டி, சுளித்து, வளைத்து
கேள்விக் குறியாக்கியிருக்கிறோம்.

அதாவது அன்பர்களே
நாம்தான் கேள்விக் குறியாக்கியிருக்கிறோம்
அந்த ஆதிக் குறியை!

ஆகவே அன்பர்களே
அந்தக் கேள்வியை
நாமே தட்டி நிமிர்த்தி
உண்மையைப்
பார்த்துவிட முடிகிறது அல்லவா?

Friday, November 22, 2024

நான்நீ

நான் வேறு நீ வேறின்றி
இருக்கும்போதுதான்
எத்துணை அமைதி!
அமைதி மட்டுமே!

“நானா”க இருக்கும்போது மட்டுமே
உன்மீது பரிவுகொண்ட உறவாக, செயலாக
எந்தத் துயர்களுக்கிடையிலும் ஒளிரும்
பெரும்களிகள்! பெருநிறைகள்!

“நீ”யாக்கி உன்னைப் பிரிந்திருக்கையில்தானே
இவ்வுலகத் துயர்களையெல்லாம் தாங்கி
தவிப்பவனாக இருக்கிறேன், என் அன்பனே?

Wednesday, November 20, 2024

கோயில் திருவிழாக்களும் குழந்தைகளை வசீகரிக்கும் பொம்மைகளும்

கோயில் திருவிழாப் பொருட்காட்சிகளில்தான்
பெண்களுக்கான அணிகளுக்கும்
யாவருக்குமான உணவுப்பண்டங்களுக்கும்
மேலாக ஒளிர்வது
குழந்தைகளுக்காகக் குவிந்து கிடக்கும்
பொம்மைகள்தான் அல்லவா?

குழந்தைகளின் விழிகளிலும்
அவர்கள் விரும்பும்
பொம்மைகளின் விழிகளிலும்
ஒன்றை ஒன்று ஈர்ப்பதுபோல்
ஒன்றுபோல் சுடர்வது என்ன?

மெய்ம்மையான மதத்தையும்
அதன் தெய்வீகத்தையும்
நாம் பார்த்து விட்டோமா?

பெரியவர்களின் கடவுள் சிலைகளுக்கும்
மதத்திற்கும் நம்பிக்கைகளுக்கும் வெளியே
போட்டியோ தொடர்போ இல்லாத விளக்கமாக
ஒரு பெருஞ் சொல்லாக
கூட்டமும் கொண்டாட்டமும் குதூகலமுமாக
மனிதனுக்குத் தேவையானதெல்லாம் இருக்கிறதல்லவா?
பின் ஏன் இப்படி இந்தத் திருவிழா
கலைந்து போகிறது?

துயர இருள் மீண்டும் மீண்டும் இவ்வுலகைக் கவ்வ
கூடிக் கூடிக் கலையும்
இத் திருவிழாக்களின் இரகசியமும்
ஒருநாளும் மனிதர்கள் இதனை கண்டுகொள்ளாததின்
கொடுமையும்தான் என்ன?

Monday, November 18, 2024

வேறு யாருமே இல்லாத பூமி

உபவனத்து நடைபாதை ஒன்றில்
தொட்டில் வண்டியுடன் ஒரு பெண்
அவனைத் தள்ளிக்கொண்டுபோவதுபோலிருந்தது

அப்புறம்,
அய்ந்தாறு பெண்கள் சிரித்துப் பேசியபடியே
அய்ந்தாறு தொட்டி வண்டிக் குழந்தைகளுடன்

அப்புறம்,
அன்னையர்கள் தள்ளித் தள்ளி அமர்ந்து
எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் பூங்கா

குழந்தைகள் மட்டுமே
கால் நனைத்து விளையாடிக்கொண்டிருக்கும்
கடற்கரை

தள்ளித் தள்ளி நின்றே
எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும்
அன்னை/தந்தையர்கள் தவிர
யாருமே இல்லாத பூமி…

வேறு யாருமே இல்லாத பூமி…

Friday, November 15, 2024

பொதுவெளியெங்கும்…

தீராத அச்சத்தின்
விளைபொருள்களான
சாதி சமயங்களாலும்
பேராசை, போட்டி, பொறாமைகளாலும்
ஏழைகளை உறவுகளல்லர் என
ஒதுக்கி ஒதுக்கி வளரும் செல்வங்களாலும்-
நோய்பரப்பும்
நமது செயல்களும் செயலின்மைகளாலும்தானே-
பொதுவெளியெங்கும் விரிந்து கிடக்கின்றன
குப்பைகளும் நாற்றக் கழிநீர்களும்!

நமது உணவுப் பொட்டலங்களை
உண்டாக்கி காத்து வழங்கிவரும்
அன்னை இயற்கையையும் சகோதர மனிதர்களையும்தானே
பொதுவெளியெங்கும்
இப்படி கைவிட்டு எறிந்திருக்கிறோம்?

Wednesday, November 13, 2024

இரவு

அவனுக்காகவேதான்
எத்துணை பெருங்காதலுடன்
விழித்திருக்கிறது இரவு!
அன்பு என்னும் பெயரில்
எந்த ஒரு தொந்தரவும் செய்துவிடாமல்!

அவன் விழித்திருந்தால்
அதுவும் விழித்திருக்கிறது
அவன் துயின்றால்தான்
அதுவும் துயில்கிறது!

அவன் பகல்களையெல்லாம்
இளைப்பாற்ற –
பணிகள் நிறைந்த
அவன் பகல்க்ளிலும்கூட
எத்துணை எத்துணை நிழல்களாய் வந்து
பிரியமனமில்லாப் பிரியத்துடன்
எட்டி எட்டி நின்றபடியே
பரிவு கொண்டு அவனைப்
பார்த்துக்கொண்டே இருக்கிறது!

Monday, November 11, 2024

மதங்கள்

அமைதிப் பெருங்கடலைப் போய்ச்
சேர்வதற்கான ஆறுகளா
இந்த மதங்கள்?
மதங்கள் இனங்கள் நாடுகள் என
சிதறிக் கிடக்கும்
இந்தப் படுகளங்களா…?

பாதைகளில்லாப்
பெருவெளியல்லவா
அமைதிப் பெருங்கடல்?

நமது பார்வையும் ஒளியுமல்லவா
பாதைகள்! மதங்கள்!
அல்லது
எந்தப் பெயர்களாலும்
அழைக்க முடியாதவை?

Friday, November 8, 2024

நோயாளி

உடலை வதைத்த
மூச்சிளைப்பும்
சற்றே ஒரு தாளம்போல்
அமைதியாகிவிட்டது!

ஆனாலும்
புன்னகை இல்லாத அவர் முகத்தில்
மரணக்களை தீட்டிய
சோகம்
ஒரு பேரழகின்
உச்சத்தையல்லவா தொட்டுள்ளது!

காதலையும்
கருணையையும்
ஆன்றமைந்த முதிர்ச்சியையும்
திடீரென ஓர் ஒப்பனையால்
சூடிக்கொண்டது போல்
சிலரை திடுக்கிட வைக்கிறது அது

உண்மையானதென்றால்
மனிதர்கள் ஏன் அதைக் கண்டு
பயப்பட வேண்டும்?

சொல்லொணாத சோர்வுதான்
இப்படி நடிக்கிறதெனக்
கண்டு கொண்டவர்களாய்
அதை இதைக் கொடுத்து
உரம் ஊட்டப் பார்க்கிறார்கள்!

கைவிடப்பட்டவர்களாய் மட்டும்
அவர்கள் அறியப்படாதவரையில்
நடமாடுபவர்களைப்போலவே
நோயாளிகளும் அழகுதான் என்பதை
யாரால் மறுக்க முடியும்?

Wednesday, November 6, 2024

நம்ம பண்பாடு

பள்ளி இறுதியிலிருந்த அவர் பையன்
ஓடி வந்து, அப்பா, அப்பா
சாதி சாதி என்கிறார்களே
அப்படி என்றால் என்ன?
நாம என்ன சாதி? என்று கேட்டான்

பதில் சொல்ல மனம் உடைந்து நின்ற அப்பா
அதெல்லாம் ஒன்றுமில்லைடா, நீ போய் விளையாடு
என்று அவனை விரட்டிவிட்டார்.

உடன் பணி செய்யும் நண்பர் ஒருவர்
தேநீர் வேளையின் போது கேட்டார்:
சார், மானுட விழுமியங்களைத்தானே
பண்பாடு என்கிறோம்?
மானுடப் பண்பாடு என்ற ஒன்றுதானே
இருக்க முடியும்?
நம்ம பண்பாடு நம்ம பண்பாடு
என்று சிலர் சொல்வது எதை
என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

புரியவில்லையா?
மனிதனைக் கொன்று குவித்துவிடக்கூடிய
சாதியைத்தான்
அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்று?

Monday, November 4, 2024

மாற்றம்

அய்ம்பது ஆண்டுகள்தானே கழிந்திருக்கும்?
நூறு ஆண்டுகள்?
உலகம் எவ்வளவு மாறிவிட்டது!
எவர் மனமும் நோகாமலே
எதுவும் அகற்றப்படாமலே
எல்லாம் மாறிவிட்டது!

ஒரு மின்னற் பொழுதில்!

ஒரு மயிலிறகுத் தொடுகையில்!

அழகழகான
பூங்காவனங்களுக்கு நடுவே உள்ள
நூலகங்கள்தாம் இப்போது கோயில்கள்!

தொன்மையான கோயில்கள் எல்லாம்
வரலாற்றை உணர்த்தும்
அழகிய கண்காட்சி தலங்களாகவும்
குழந்தைகள் ஓடி விளையாடக்கூடிய
மண்டபங்களாகவும் மாறிவிட்டன!

அடையாளங்களற்ற மேகங்களைப்போல்
மனிதர்கள் எங்கும் மிதந்து கொண்டிருந்தனர்

கவிதையின் மதம் மட்டுமே
கோலோச்சிக் கொண்டிருந்தது காண்!

அனைத்து மனிதர்களாலும் கொண்டாடப்படுபவையே
திருவிழாக்களாயிருந்தன.
ஒரு காலத்தில்
வேறுபடுத்தும் அடையாளங்களாய் இருந்தவை எல்லாம்
அழகை விரும்புவோர் எவராலும்
மாறி மாறி அணியக் கூடிய
வண்ண ஆடைகள் போல் மட்டுமே ஆகின.

எண்ணத் தொடர்களாலும் அச்சத்தாலும்
காலம் காலமாய் வந்த நினைவுகள் எல்லாம்
நூல்களுக்குள்ளும் மின் அணுத் தகடுகளுக்குள்ளும்
வெகு நிம்மதியாய் ஓய்வு கொண்டுவிட்டன!

அறிவியல் வளர்ச்சியின் கருணையினால்
சமூக அலுவல் நேரமும்
வெகு சிறியதாய் சுருங்கிவிட்டது!

எப்போதும் காலாதீதப் பெருவெளியில் பூக்கும்
காமலர்த் தோட்டத்து
வண்ணத்துப் பூச்சிகளே ஆயினர் காண்
மனிதர்கள்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP