Wednesday, July 30, 2025

கிச்சு கிச்சு மூட்டினால்…

கிச்சு கிச்சு மூட்டினால்
மலர்களாக உதிர்க்கிறது குழந்தை

இந்த பூ மரத்திடமிருந்துதான்
கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

காற்றின் தீண்டலில், பூத்துப் பூத்துக்
காணுமிடத்தையெல்லாம்
முத்தமிட்டுக் களிக்கும் இந்த மரம்
இந்த வான்மீன்களிடமிருந்துதான்
கற்றுக் கொண்டிருக்க வேண்டும்

பேரொளிரும் ஆனந்தப்
பெருவெளியிடமிருந்துதானே
கற்றிருக்க வேண்டும்
இந்த வான்மீன்களும்?

கிச்சு கிச்சு மூட்டினால்
மலர்களாக உதிர்க்கிறது குழந்தை!

Read more...

Monday, July 28, 2025

இது யாருடைய குழந்தை?














முட்டிகளாலும் கைகளாலும் ஊன்றியபடி
தலைதூக்கிப் பூஞ்சிரிக்கும் இந்தக் குழந்தை

ஒரு பெண்ணுடையதாகத்தான் இருக்க வேண்டும்
அந்தப் பெண்
கனிகளும் பறவைகளும் காற்றில் சிலிர்க்கும்
ஒரு மரநிழலில்தான் இருக்க வேண்டும்
அந்த மரம்
கருணையே உருவாய்க் கவிந்த
ஒரு விசும்பின் கீழ்தானே இருக்க வேண்டும்?
அந்த விசும்பும்
விசும்பு கடந்த பெருங்கருணைப்
பெருவெளியில்தானே இருக்க வேண்டும்?

பொக்கை வாயால் எங்கும்
பூஞ்சிரிப்பைத் தூவிக்கொண்டு
வாழ்வின் பொருளை மீட்டும் குழந்தைக்கு
தவறினால்
மீட்கத் தெரியாமலா போய்விடும்?

பற்றிக்கொள்ளத் தெரியாமலா போய்விடும்
பற்றற்றதோர் பேரிறைப் பெரும்பற்றை,
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தை?

Read more...

Friday, July 25, 2025

கவிஞனின் துயரம்

பயணம் முடிந்து
வீடு வந்து சேர்ந்த
இரண்டு நாட்களாய்க் காய்ச்சல்.

வாட்ஸ்அப்பில் யாரும்
அச்சச்சோ காட்டவில்லையே
எனக் கவலை தெரிவித்ததற்கு
“சார், நீங்கள்
கவிதையல்லவா அனுப்பியதாக
எண்ணினோம்” என்கிறார்கள்!

Read more...

Wednesday, July 23, 2025

காய்ச்சல்-2

மென்மையான சூட்டில்
யாரோ அவனை
வேக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
மானுடப் பசியாற்றும்
அப்பமாகிக் கொண்டிருந்தால், சரிதானே?

சாலச் சமைந்த அப்பம் போலும்
சுட்ட கிழங்கு போலும்
நனி கனிந்த பழம் போலும்
அவர், எத்துணை அழகாய்_
துக்கத்தையும்
துக்க நீக்கத்தையும் கண்டுகொண்ட
தேவதை போலத்தானே காணப்படுகிறார்;
அமைதி கொள்வதற்கன்றி
கவலை கொள்வதற்கோ
களி கொல்வதற்கோ
என்ன இருக்கிறது?

Read more...

Monday, July 21, 2025

காய்ச்சல்-1

அவன் வாணாளில்
தீவிரமான நோய்கள் வந்தபோது
இருந்திருக்கலாம்.
எண்ணங்கள் கைவிட்டுவிடும்
இளம்பருவத்தில்
அவன் அதை அனுபவித்திருக்கலாம்,
ஞாபகமே இல்லை என்றாலும்
வாடும் முகங்கள் மூலம் அதனை
கேள்விப்பட்டிருக்கத்தானே செய்கிறான்?

இன்று இந்த 78ம் வயதின் பயணத்தில்தான்
அவன் அந்த விருந்தாளியைச் சந்திக்கிறான்
ஆண்களானால் தங்கள் காதலியையும்
பெண்களானால் தங்கள் காதலனையும்
கடவுளானால் கடவுளிடமே இளைப்பாறும்
கடவுளின் துயரையும் கண்டதுபோல்
அப்படி ஒரு நெருக்கமான உறவும்
உறவின் இன்பமும் தவிர வேறேது?

Read more...

Friday, July 18, 2025

கண்ட நாள் முதலாய்…

ஒரு கணம்தானா
நாம் அதிசயித்து நின்ற நேரம்?
மின்னலை விளக்காக்கிக் கொள்ளத்
தெரியாத பேதைகளாய்
மீண்டும் மீண்டும் இந்தப் பாழுலகில்
சுருண்டு கிடப்பதுதானா நம் அவலம்?

கண்ட நாள் முதலாய்
அலையும் ஒளிச்சுடராய்
பூமியெங்கும் சுற்றி,
உலவிக் கொண்டிருக்கிறது காண்
ஒரு வண்ணத்துப்பூச்சி!

Read more...

Wednesday, July 16, 2025

இந்த வேற்று வெளியினிலே...

இந்த வேற்று வெளியினிலே
புன்னகைக்கும் எல்லோருமே
என்றும் அறிந்தவர்களாகவே
தெரிகிறார்கள்
நெருங்கிவிட்டவர்களாகவே
தெரிகிறார்கள்

இங்கே எதுவாகவும் நாம் ஆகலாம் என்றிருக்க
எதுவாக விரும்புகிறது நம் உள்ளம்?

Read more...

Tuesday, July 15, 2025

முதல் ஒன்று

ஒன்றிலிருந்து பிரிந்து பிரிந்து பிரிந்து
பலவாகியதென்றாலும்
அந்த ஒவ்வொன்றிலும்
முதல் ஒன்று இருந்தது.

பலப் பலவாகப் பெருகியவற்றுள்ளும்
பலப் பல இணைந்து இணைந்து
ஒரு ஒரு விதையாக ஆனவற்றுள்ளும்
அந்த முதல் ஒன்று இருந்தது.

விதை எத்துணை முக்கியமோ
விருட்சம் அத்துணை முக்கியமாக இருந்தது
அத்தோடு
விருட்சம்தான் விதை
விதைதான் விருட்சம் என்பதும்
ஒவ்வொரு இடத்திலும் அந்த முதல் ஒன்று
தொடர்ந்தே வந்து கொண்டிருக்கிறது என்பதும்
தெளிவாகவே இருந்தது.

மனிதன்தான் மனித சமூகம்
மனித சமூகம்தான் மனிதன் என்பதையும்
ஒவ்வொரு இடத்திலும்
அந்த முதல் ஒன்று தொடர்ந்து வருகிறது என்பதையும்
சொல்லவும் வேண்டுமா?

ஒரே ஒரு வேறுபாடு
நாம் சொல்லியே ஆக வேண்டும்
மனிதன்தான் உண்மை
மனித சமூகம் என்பது
நம் கற்பனை படைப்பு.

ஒரு இலட்சியம், ஒரு கண்டுபிடிப்பு
முதலில்
ஒரு தனி மனிதனிடம்தானே தோன்றுகிறது?

பல்லாயிரம் உயிர்களிடமிருந்து தோன்றியவன்தான்
ஒரு மனிதன் என்றாலும்
பல்லாயிரம் மனிதர்களிடமிருந்தல்லால்
ஒரு மனிதனிடமிருந்துதானே
ஒவ்வொரு காலமும் ஒரு புதிய கண்டுபிடிப்பு
ஒரு பெருவிழிப்பு தோன்றுகிறது?
என்றாலும் அதற்காக அந்த மனிதன்
புகழுக்குரியவனாவானோ?
ஆன்றமைந்த மனிதனே எனில்
மெய்ம்மை அறிந்தவனே எனில்
அவன் அதை விரும்புவானா?
எல்லாப் புகழும் அவனைத் தோற்றுவித்த
பல்லாயிரம் உயிர்களுக்கும்
அவர்கள் உறவாகி வளரும்
மனித சமூக மனங்களுக்குமல்லவா உரியது?

Read more...

Monday, July 7, 2025

இரயில் தண்டவாளம்

நாம் செல்ல வேண்டிய இடத்தைச்
சொல்லிவிடவில்லையா,
கண்ணெதிரே
இரட்டைச் சடையுடன் ஒரு மலர்முகம்?

Read more...

Wednesday, July 2, 2025

ஒளியை மறந்துவிடுவார்களோ?

ஒளியை மறந்துவிடுவார்களோ என்று
திகைக்க வைக்கின்றனர்
கொஞ்சநேரம்
நிழல்களோடே
விளையாடத் தொடங்கிவிட்ட மரங்கள்!

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP