இது யாருடைய குழந்தை?
முட்டிகளாலும் கைகளாலும் ஊன்றியபடி
தலைதூக்கிப் பூஞ்சிரிக்கும் இந்தக் குழந்தை
ஒரு பெண்ணுடையதாகத்தான் இருக்க வேண்டும்
அந்தப் பெண்
கனிகளும் பறவைகளும் காற்றில் சிலிர்க்கும்
ஒரு மரநிழலில்தான் இருக்க வேண்டும்
அந்த மரம்
கருணையே உருவாய்க் கவிந்த
ஒரு விசும்பின் கீழ்தானே இருக்க வேண்டும்?
அந்த விசும்பும்
விசும்பு கடந்த பெருங்கருணைப்
பெருவெளியில்தானே இருக்க வேண்டும்?
பொக்கை வாயால் எங்கும்
பூஞ்சிரிப்பைத் தூவிக்கொண்டு
வாழ்வின் பொருளை மீட்டும் குழந்தைக்கு
தவறினால்
மீட்கத் தெரியாமலா போய்விடும்?
பற்றிக்கொள்ளத் தெரியாமலா போய்விடும்
பற்றற்றதோர் பேரிறைப் பெரும்பற்றை,
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தை?