முதல் ஒன்று
ஒன்றிலிருந்து பிரிந்து பிரிந்து பிரிந்து
பலவாகியதென்றாலும்
அந்த ஒவ்வொன்றிலும்
முதல் ஒன்று இருந்தது.
பலப் பலவாகப் பெருகியவற்றுள்ளும்
பலப் பல இணைந்து இணைந்து
ஒரு ஒரு விதையாக ஆனவற்றுள்ளும்
அந்த முதல் ஒன்று இருந்தது.
விதை எத்துணை முக்கியமோ
விருட்சம் அத்துணை முக்கியமாக இருந்தது
அத்தோடு
விருட்சம்தான் விதை
விதைதான் விருட்சம் என்பதும்
ஒவ்வொரு இடத்திலும் அந்த முதல் ஒன்று
தொடர்ந்தே வந்து கொண்டிருக்கிறது என்பதும்
தெளிவாகவே இருந்தது.
மனிதன்தான் மனித சமூகம்
மனித சமூகம்தான் மனிதன் என்பதையும்
ஒவ்வொரு இடத்திலும்
அந்த முதல் ஒன்று தொடர்ந்து வருகிறது என்பதையும்
சொல்லவும் வேண்டுமா?
ஒரே ஒரு வேறுபாடு
நாம் சொல்லியே ஆக வேண்டும்
மனிதன்தான் உண்மை
மனித சமூகம் என்பது
நம் கற்பனை படைப்பு.
ஒரு இலட்சியம், ஒரு கண்டுபிடிப்பு
முதலில்
ஒரு தனி மனிதனிடம்தானே தோன்றுகிறது?
பல்லாயிரம் உயிர்களிடமிருந்து தோன்றியவன்தான்
ஒரு மனிதன் என்றாலும்
பல்லாயிரம் மனிதர்களிடமிருந்தல்லால்
ஒரு மனிதனிடமிருந்துதானே
ஒவ்வொரு காலமும் ஒரு புதிய கண்டுபிடிப்பு
ஒரு பெருவிழிப்பு தோன்றுகிறது?
என்றாலும் அதற்காக அந்த மனிதன்
புகழுக்குரியவனாவானோ?
ஆன்றமைந்த மனிதனே எனில்
மெய்ம்மை அறிந்தவனே எனில்
அவன் அதை விரும்புவானா?
எல்லாப் புகழும் அவனைத் தோற்றுவித்த
பல்லாயிரம் உயிர்களுக்கும்
அவர்கள் உறவாகி வளரும்
மனித சமூக மனங்களுக்குமல்லவா உரியது?