காதலின் இலட்சியம்
ஊரார் கண்ணுக்குச் சற்று ஒதுக்குப்புறமாய் அமைந்த
என் வீட்டு எதிர்ச்சுவர் மரநிழலிருளில் சற்றே மறைந்தபடி
நண்பகலிலிருந்தே அந்த இளம் ஜோடி நிற்கிறது
வெயில் சாய்ந்து மாலை மங்கி அந்தியும் இருண்டு
தெருவிளக்கும் எரியத் தொடங்கிவிட்டது
“கால்களும் நோகாதோ, என் கண்மணிகாள்!
நேரத்தோடே வீடுபோய்ச் சேரவும் வேண்டாமோ?“
கால காலங்கள் தாண்டி
நிலைத்து நிற்க விழையுமொரு வேட்கையோ
அவர்களை இன்னும் பேசிக்கொண்டே நிற்கவைப்பது?
மறைய விரும்பாத ஓர் ஓவியம் போல் அவர்கள் நிற்பதை
என் ஜன்னல் வழியே பார்த்தபடியே இருக்கிறேன்
திடீரென்று அவ்விடத்தில் அவர்களைக் காணாதது கண்டு
பதைத்துப் போனேன்
எவ்வாறு எப்போது அவர்கள் விடைபெற்றுப் பிரிந்தார்கள்?
தனிமை கொண்டு இனி
எவ்வாறு இந்த இரவை அவர்கள் கழிப்பார்கள்?
என்னைப் போலவேயா, கண்துஞ்சாது?
நாளையும் நண்பகலில் இவ்விடத்தில்
அவர்கள் சந்திப்பார்களில்லையா?
“ஆம், நிச்சயமாக“- என என்னுள் தோன்றும்
இந்த எண்ணத்தைத் தோற்றுவிப்பது யார்? எது?
ஏதொன்றைச் சாதிப்பதற்காக இந்த இளம் ஜோடி
என் முன்னே அவ்விடத்தில் திரும்பத் திரும்ப வந்து நின்று
தவிர்க்க இயலாத் துயருடன் பிரிந்துகொண்டேயிருக்கிறது
காண்பார் நெஞ்சில்
அழியாத ஓவியமொன்றைத் தீட்டிவிடுவதுதானோ
காதலின் இலட்சியம்?