ஒரு பேராளுமைபற்றி
அறியாமை மற்றும்
அறிய முடியாமையையும்
அறிதல்தானே
அறிகிறது?
அறிவாகி
தன்பெயரையே கெடுக்கிறதையும்
அனைத்து துயர்களுக்கும்
பெருந் தீமைகளுக்கும்
காரணமாகிவிடுகிறதையும்
அவன் (அறிவு) வேறு
இவன் (அறிதல்) வேறு என்பதையும்
அறிதல் தானே அறிகிறது?
எவ்வளவுதான் பெரியவனானாலும்
அவனை, தனக்குரிய இடத்தை விட்டு
எங்கும் நகராதபடி கட்டிப்போட்டுவிட்டு
அவனோடு நாம் எவ்வளவு எச்சரிக்கையோடு
இருக்க வேண்டும் என்பதை
அறிதல்தானே சுட்டுகிறது?
நம்பிக்கை, நம்பிக்கையின்மை
இரண்டுமே அறிவாகி
முடமாகி விட்டிருக்கிற உலகில்
அறிதல்தானே எதுவாகவும் மாறாத
ஆற்றலாக இருக்கிறது?
அனைத்து துயர் இருளையும்
விரட்டியடித்துவிடத்தக்க
ஒளியாக இருக்கிறது?
அறிதல்தானே
பார்க்கவும் கேட்கவும் கவனிக்கவும் சொல்கிற
வழிகாட்டியாக இருக்கிறது?
மனிதனல்ல,
எந்த மனிதனுமில்லாத
ஆளுமைப் பண்புகள் என்றேதுமில்லாத
அறிதல்தானே மகாஞானியாக-
பேராளுமையாக இருக்கிறது?