அன்பு எனும் பெயரால்…
துயருடையவனால்
எப்படி அன்பு செலுத்த முடியும்?
ஆழமற்றதும் ஆபத்தானதும்
தந்திரங்களாலானதுமான
பற்று, பிரியம், பாசம், ஒற்றுமை, நட்பு
என்பவற்றால்
அன்பு எனும் பெயராலே
காலம் காலமாக
நம்மையும் உலகையும்
ஏமாற்றிக் கொண்டேயிருப்பவர்கள்தாமே, நாம்?
துயருடையவனால்
எப்படி அன்பு செலுத்த முடியும்?
புண்பட்ட கோணல் மனிதர்களால்
உருவானதல்லவா
போரும் குழப்பமும் வலிகளுமான
இந்த உலகம்?
ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை
ஒரு மனிதனைக்கூட காண முடியவில்லை
என்ற மனிதன்
தனக்குள்ளாவது
ஒரு மரத்தையோ மனிதனையோ
கண்டிருக்க மாட்டானா?
தன் துயர் என்பதே இல்லாதிருந்ததால்தானே
அன்புடையவனாயிருந்தான் அவன்?
தன் துயர் அல்ல
துயர்மலி உலகின்
பெருந்துயர்தானே
பரிவு என்றும் பேரன்பு என்றும்
அவனிடம் இருந்தது?