Monday, October 7, 2013

ஜானகியின் அதிகாலை

ஜானகி விழித்தெழுந்தபோது
எதைப் பார்த்திருந்தனவோ நட்சத்ரங்கள்
சொல்ல முடியாத ஒரு வியப்பில் முழித்தன அவை

ஆதரவற்றுத் தன்னந்தனியாக இருந்தது பூமி
சூடான கண்ணீர்த் துளி ஜில் என்று தொடுகையாவது போல்
குளிர்ந்திருந்தது பொழுது
நிலவொளியில் கருகருவென்று மேகங்கள்
பூமியைவிட்டு விலகிச் சென்று கொண்டிருந்தன
பூமியின் மிக மெல்லிதான மூச்சுக் காற்றில்
அதிர்ந்து நடுநடுங்கின
அதன் நாசியில் கூடு கட்டியிருந்த
சிலந்தியின் வலைகள்

மோனத்தைக் கிழித்துப் பயத்தை எழுப்பப் பார்த்தது
தென்னை மரத்தின் மீது துயில் கலைந்து
இடம் மாறிய ஒரு கரிய பறவையின்
ஒற்றைக் குரல் – ’கர்!’

அறியாதவோர் உலகில் நுழைந்து
அறியாதவோர் செயலைச் செய்துவிட்டு
முழிக்கும் சிறுமியைப் போல் ஜானகி
சும்மாவாச்சும் ஆள்காட்டி விரலால் பட்டனை அழுத்தி
இரவு விளக்கை அணைத்தாள்
இரவு முடிந்தது!

தினசரிக் காலண்டரின் மேல்தாளை நீக்கினாள்
நிகழ்ந்தது,
அந்த ஒரே செயலில் ஒரு பேரோசையுடன்
ஒரு நாளின் மரணமும்
பிறிதோர் நாளின் பிறப்பும்!

யாவற்றுக்கும் பின்னாலுள்ளதும்
நட்சத்ரங்கள் பார்த்துக் கொண்டிருந்ததுமான
ஒரு பூதாகரமான வெறுமையைப்போல்
நின்றுகொண்டிருந்தாள் ஜானகி,
ஏதோ ஒன்று அந்த வெறுமையிலிருந்து பொங்கி
அந்த வெறுமைமீதே பொழிவது போல்
திடீரென்று குழாய்நீர் சொரியும் ஓசை

ஒரு குடத்தினுள்ளே அந்நீர் சொரிந்து பெருகுவதுபோல்
கூடிவரும் ஒளி

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP