ஒரு மரமும் கூட…
ஒரு மரமும் கூட தன்னைக்
கடவுள் என்றுதானோ சொல்கிறது?
இல்லை, இல்லை.
ஓராயிரம் பூக்களுடன் வசந்தராணியாய்
ஒற்றை மலர் போல ஒரு கோலம்!
ஓராயிரம் பூக்களையும் உதிர்த்துவிட்டு
அத்தனை நாட்டியர்களையும் சவாலுக்கழைக்கும்
ஒளிநர்த்தன அபிநயக் கிளைகளுடன் ஒரு கோலம்!
ஓராயிரம் இலைகள் தனித்தும் கூடியும்
காற்று வெளியில் பொங்கிச் சிறகடித்துக் கொண்டிருக்கும்
போது ஒரு கோலம்!
தனது வாழ்வையே போதனையாயும்
போதனையையே வாழ்வாயும்
தன்னையே அதுவாகவும்
அதனையே தானாகவும்
பெயர் கொண்டும் உருகொண்டும்
சொல்லாகவும் விக்கிரமாகவும் நிற்கும் ஒரு கோலம்!
ஆனால் எந்த கடவுளாலும் விக்கிரகங்களாலும்
ஆவதில்லை
ஒருவன் தன்னைத்தானே உணராத வரை
என்று ஒரு கோலம்!