முதன்மையானது
அழுக்குக் கந்தல் குழந்தை ஒன்று
நடைபாதையில் விழுந்து கிடந்த
குச்சிமிட்டாய் ஒன்றை எடுத்து
மண்ணைத் துடைத்துவிட்டு
சப்பத் தொடங்கியாயிற்று
ஆகா, என்ன சுவை! என்று
சுவையில் கிறங்கின அதன் விழிகள்!
அவன் தன் சிந்தனையில் ஆழ்ந்து போனான்
ரொம்ப சல்லிசான ஆரஞ்சுமிட்டாய்தான்
ஏழைகளுக்கானதாயிருந்தது
செல்வந்தர்களுக்கேயானதாய் ஏழைகளுக்கு
எட்டாததாயிருந்தது சாக்லேட்.
பின்னர் சாக்லேட்டும்
எட்டும்படியானபோது
மேலும் எட்டாததாயின
இன்னும் இன்னும் என பல இனிப்புகள்
ஆனால் எக்காலத்திலும் எவ்விடத்திலும்
குழந்தைகள் நாவில்
அம்ருதமாகத் தித்தித்தது எந்த இனிப்பும்!
வறுமை நம்மைத் தீண்டாமலிருக்க
இரண்டு காரியங்கள்
நாம் செய்தாக வேண்டியுள்ளது
அவற்றுள் முதன்மையானதைத்தானே
நாம் முதன்மையானது என்று சொல்லமுடியும்
பிறிதொன்றை நாம் கண்டுகொள்ளத்தான்
வேண்டுமென்றாலும்..?
முதன்மையாக நாம் குழந்தைகளாவதுவரை
கடவுளின் ராஜ்யத்தை அடைய முடியாது என்று
சொல்லி இருக்கவில்லையா, இயேசு
ஒரு சொற்றொடரில்
உலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான
ஒரே தீர்வாக!