Saturday, January 5, 2013

வீடும் யாத்ரீகனும்

எந்தெந்த தேசங்களிலெல்லாமோ
நான் சந்திக்க நேர்ந்த அந்த யாத்ரீகன்
அன்று ஒரு வீட்டின்முன் நின்றுகொண்டு
வீதியையே பார்த்துக்கொண்டிருக்கக் கண்டேன்
நிலையான அச்சித்திரத்தின் முன்னே
வந்து மறைந்துகொண்டிருந்தனர் பயணவழிப்போக்கர்கள்
பயணவழிப்போக்கர் விழியில்
சற்று நேரம் தெரிந்து மறையும் சித்திரம் அது

Read more...

அந்தச் சுவர்க் கடிகாரம்

எப்போதையும்விடத் தீவிரமாய் இப்போது
பொன்மணி போலொரு பொருளை விரும்பினேன்
காலம் இற்றுவிழப் படுக்கையில் விழுந்த என் எதிரே
அதைக் காணவே கண்டு துடிதுடித்தேன்

நண்பனை அழைத்து ஒரு சுவர்க் கடிகாரம்
வாங்கிவரச் செய்து மாட்டினேன் எதிரே.
அய்யோ, அதன் அழகு சொல்லி மாளாது.
அநத் அழகும் வியப்பும் ஒரு வினாடியும் மறையாது.
ஒவ்வொரு வினாடியும்
தன்னைத்தானே புதுக்கிக்கொண்டிருக்கும்
பொன்மணி போலொரு பொருள் அதை –
ஆ, எப்படிச் சொல்வேன் அதன் அழகை!

அதை நான் தேர்ந்தெடுக்கவில்லை;
ஆகவே அது மிக அழகாயிருந்தது.
ஆனாலும் அதன் பொன்மணி வண்ணத்திற்காய்
குறிப்புக் கொடுத்திருந்தேன்.
ஆகவே அது மிகமிக அழகாயிருந்தது.
எவ்வேளையும் என் எதிரே இருந்தபடி
மாறா அழகாய் உயிர்த்துக்கொண்டிருந்தது அது

தூக்கம் விழித்து எழுந்த என் தியானத்திற்குப்
பக்கவாத்தியமாய்
பின்னணி இசையாய்
இல்லை
என்னை அளக்க முயலும் அளவையோ அது?
இல்லை
சாட்சியாய்
ஒரே துணையாய்
தியான மந்திரமாய்
இல்லை
தியானமாகவே
இருந்தது அது

Read more...

Friday, January 4, 2013

கொதித்து ஆறிய நீர்

தண்ணீரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்
தண்ணீர் குறித்து இவ்வாறு பேசுவது உளறல்
எனினும் உளராமல் இருக்க முடியவில்லை

பிடிக்கும் என்றாலும்
ஐஸ்வாட்டரைத் தொடமாட்டேன்
(காரணம் உங்களுக்குத் தெரியாததல்ல)
தாயைக் கழித்தாலும் தண்ணீரைக் கழிக்காதே
என்றொரு பழமொழியுண்டு. இக்காலமோ
நீர்பற்றி எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய காலம்
மண்ணில் விழுந்த நீரைக் கைகளால் அள்ளுவதோ
காலால் அலம்பிக் குதித்து விளையாடுவதோ கூடாது இப்போது
மலைவனப் பிரதேசங்கள் இதற்கு விதிவிலக்கு எனினும்
அங்கும் பாறைகளில் குதித்து ஆடும் நீரையே
ரொம்பவும் பிடிக்கிறது
வானிற்கும் பூமிக்குமிடையே
அது மழைத்துக்கொண்டிருக்கும் கோலத்துக்கு அடுத்தபடி

இரைந்துகொண்டோ அழுதுகொண்டோ
குடத்தில் விழும் குழாய்நீர் –
அதை நாம் நம்புவதில்லை.
நீரையே நம்பாத ஒரு நோய்க்காலம்தான்
வந்துவிட்டதே நமக்கு. எள்றாலும்
தண்ணீரை எனக்கு ரொம்பப் பிடிக்கவே செய்கிறது
டாக்டர்,
உங்கள் அறிவுரையின்படி கொதித்து ஆறிய நீர்
அந்த அருவி நீருக்கு அடுத்தபடி

Read more...

எனக்குப் பழங்களை ரொம்பப் பிடிக்கும்

எனக்குப் பழங்களை ரொம்பப் பிடிக்கும்
காரணம்:
சிசு பற்றும்
தாய் முலைகள்போல அவை இருப்பதால்

எனக்குப் பழங்களை ரொம்பப் பிடிக்கும்
காரணம்:
அவற்றைப் பிறருக்கு வழங்குகையில்
அப்பழங்களைச் சமைத்தவன்
நான்தான் என்பதுபோல்
என்னுள் ஓடும் ஒரு மின்னல்

எனக்குப் பழங்களை ரொம்பப் பிடிக்கும்
காரணம்:
திவ்யமான மவுனம் அவைகளுடையது
இருப்பினும் என்னைப் போலவே பாஷை தேடி
ஒரு நிறத்தையும் மணத்தையும் பெற்றிருக்கின்றன

எனக்குப் பழங்களை ரொம்பப் பிடிக்கும்
காரணம்:
உடமையாளர் அந்நியர் என்ற பேதம் காட்டாதவை அவை

எனக்குப் பழங்களை ரொம்பப் பிடிக்கும்
காரணம்:
பறவைகளுக்கும் அவைகளைப் பிடிக்கும்

எனக்குப் பழங்களை ரொம்பப் பிடிக்கும்
காரணம்:
அவை தங்களை நாடுவோர்க்குத்
தங்களை முழுமையாய் அளித்தும்
அழியாதிருக்கும் இரகசியம் கொண்டவை

எனக்குப் பழங்களை ரொம்பப் பிடிக்கும்
காரணம்:
மலர்களைப் போலும் வண்ணங்களுடையவை அவை

எனக்குப் பழங்களை ரொம்பப் பிடிக்கும்
காரணம்:
அவை ரொம்ப வெளிப்படையானவை
பாதுகாப்பற்றவை. என்றாலும் சில பழங்கள்
தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்
சிறுசிறு உத்திகளைக் கொண்டிருப்பதும்
தமக்காக அல்ல
தமக்காக அவை எதையும் செய்வதில்லை
அவை விதைகளைத் தம் உயிர்போலக்
கொண்டிருப்பதையும் அறியாதவை

எனக்குப் பழங்களை ரொம்பப் பிடிக்கும்
காரணம்:
யாருடையவோ இதயம்போல அவையிருப்பதால்

Read more...

Thursday, January 3, 2013

கைத்தொலைபேசிக்காரன்

திடீரென்ற ஓர் அழைப்பொலியைக் கேட்டாலும்
பதறாமல் அதற்குப் பழக்கப்பட்டவர்போன்ற
நிதானத்துடன் சிறிது தாமதமுமின்றி
சூழலை விட்டும் விலகியவராய் ஒதுங்கி
எங்கோ தூரத்திலுள்ள ஒரு குரலோடு
அவர் தொடர்பு கொள்கிறார்
அவ்வேளை அருகிலுள்ளவர்களெல்லோருமே
அவரால் கைவிடப்பட்டவர்கள் போலாகிறார்கள்
அவர் பேசி முடித்துவிட்டுத் திரும்புகையிலும்
அவர்கள் முகத்தில் அச்சோகம் ததும்புகிறது

அவர் யாரோடு பேசினார், என்ன பேசினார்
என்பதல்ல முக்கியம்
அவர் யாராயிருந்தாலும் அந்த யாரோ ஒருவர்
அவர்களுக்கு அந்நியராகவே ஆகிவிடுகிறார்
முகந்தெரியாத அந்த நபரின்
குரலுக்குச் செவிசாய்த்து நிற்கும் இவர் முகத்தில்
அவ்வப்போது துவக்கத்தில் சற்றே நெருடினாலும்
உடனே சரியாகப் பற்றிக்கொள்ளும்
அன்னியோன்யம், கவனம், அக்கறை...
அப்போது வசீகரமிக்க ஒரு காதலராய் அவர் காட்சியளிக்கிறார்
சுற்றியுள்ளவர்களிடமெல்லாம் பித்தேறுகிறது பிரேமை அவர்மீது
அவரால் உரையாட முடிகிற
முகம் தெரியாத அந்த யாரோ ஒருவர்மீது அந்நியமும்
பொறாமையும் இவரால் கைவிடப்பட்டது போன்ற
அந்த சோகமும் துடைக்கப்படாமலேயே
அந்த பிரேமை கனல்கிறது

அந்தக் கருவியை இடுப்பில் செருகி அமர்த்திவிட்டு
அவர் புன்னகையுடன் அவர்களை நோக்குகிறார்
அவர்களைப் படித்துவிடுகிறார்
அந்த யாரோ ஒருவர்தான் நீங்கள் ஒவ்வொருவருமே என்கிறார்
அவர்களுக்கு அது புரிகிறதில்லை
எல்லாம் பிதற்றல்களாகத் தெரிகின்றன

Read more...

இந்த இரவில்

இந்த இரவில் அறையப்பட்டு
ஒழுகும் இரத்த காயங்களுடன்
தாகவிடாயால்
உயிருடன் இறந்துகொண்டும்
இறந்து உயிர்த்துக்கொண்டும்
ஒரு ஜீவன்பாடும் அவஸ்தையை நீ அறிவாயா
உன் வானத்தை இடிமின்னல் கிழிக்கும்போது,
புயற்காற்று உன் விளக்குகளையெல்லாம் அணைக்கும்போது,
உன் கதறலைப் பொருட்படுத்தாத ஒரு மவுனவெளி
உன்னைத் திடுக்குறவைக்கும்போது?

அழுத்தும் இந்த வேதனை
மனிதவாசமற்ற பனிமுகடுகளில் திரியும்
பனிமனிதனின் காலடிப் பதிவுகளினாலா?
எந்த ஓர் இரகசியச் செயல்பாட்டின்
பொருள் புரியாத வலி இந்தத் தனிமை?

இந்தக் கொடூர உலகில்
சிறு அதிர்ச்சிக்கும் தாளாது மாண்டுவிடும்
மென்னுயிர்கள் ஆயிரத்தின் கல்லறைகள் மீதே
வீடுகொண்டிருக்கும் அவனுள் குடி கொண்டுவிட்டதோ
அந்த
மென்னுயிர்களின் ஆவிகள்?
யாருமறியாத இம்மூளைப் பிரபஞ்சத்தில்
யாரோ செய்யும் கதிர்ச் சிகிச்சையின்
படுத்தல்களோ இந்த வலி?

துயின்று கொண்டிருக்கும் மனிதகுமாரனின் தலையில்
ராவோடு ராவாக ராஜ்யபாரம் துறந்து ஓடிப்போன
கடவுள் தன் மணிமுடியைச்
சூட்டிவிட்டதால் வந்த பாரமோ?

Read more...

Wednesday, January 2, 2013

வீட்டின் முன் ஒருவன்

வீட்டிற்குள் வீட்டை விரும்பாத ஏதோ ஒன்று
அவனை எப்போதும் வீட்டின் முற்றத்திற்கே துரத்துகிறது
வானத்தின் ஒளிவெள்ளத்தில் மிதக்கும் முற்றத்தின்
பச்சைத் தீவுதான் அவன் விரும்பும் இடமோ?
எவ்வேளையும் வீடு தன்னகத்தே வைத்திருக்கும்
சிறு இருளோ அவனைத் துரத்திக்கொண்டே இருப்பது?
படுக்கைநீள ஜன்னல் ஒளியில்
அவன் குளித்துக்கொண்டிருக்கும் போதும்
கட்டிலுக்கடியிலும் அறைமூலைகளிலும்
அது மவுனமாய்ப் பதுங்கியிருக்கிறது
முந்தானையை இழுத்துச் செருகி
பெருக்குமாற்றைத் தூக்கிக்கொண்டு நிற்கும் அவள் கோலம்
அந்த இருளுக்கெதிரான சீற்றம்போல் கனலக் காண்கிறேன்
ஆனால் அத்தனை நிதானமும் அத்தனை அழகும் ஒளிவீச
தூசுப் படிவுகளையும் கசங்கிய காகிதங்களையும் ஒதுக்குவதுபோல்
அந்த இருளை அவள் விரட்டுகிறாள் எவருமறியாமல்.
இருந்தும் வீட்டுக்குள் வீட்டை விரும்பாத ஏதோ ஒன்று
அவனை விடாமல் துரத்திக்கொண்டேயிருக்கிறது முற்றத்திற்கு.
வீட்டிற்கு முந்தைய ஆதி நாடோடிக் காலமொன்று
அந்தப் பச்சைவெளியில் பருவகாலங்கள் போல்
நிலைகொள்ளாமல் சென்றுகொண்டேயிருக்கிறது
இந்தப் பக்கமோ ஆழமற்ற அத்திவாரங்களுடன்
வளர்ந்து வளர்ந்து நிற்கும் வீடுகள்
கட்டடங்கள் நகரங்கள் நாடுகள் நாகரிகங்கள்
திடீர் திடீரென்று சரிந்து ஓலமிடும் அழிவுகள்
என்றாலும் வீடு என்று ஒன்று வேண்டவே செய்கிறது
மனிதனை மனிதனிடமிருந்து அது பிரித்தாலும்
போர்க்காலத்துப் பதுங்குகுழிகள் போல அவை செயல்பட்டாலும்.
நுழைவாயிலேயே நின்றுவிட்ட கோலம் போல்.
முற்றத்தில் நின்றுகொண்டிருக்கும் அவனிடம்
யாரோ சொல்கிறார்கள்: ”நல்ல மனிதர்கள்
தம் வீடுகளைத் தம் வீடுகளினின்றே பாதுகாத்துக்கொள்கிறார்கள்”
நாடோடியாய் அலைந்துகொண்டிருந்த ஒரு யாத்ரீகன் அவன்
இன்று ஒரு வீட்டின் முன்னே நின்றுகொண்டு
வீதியையே பார்த்துக்கொண்டிருக்கிறான்
நிலையான அச்சித்திரத்தின் முன்னே
வந்து மறைந்துகொண்டிருக்கின்றனர் பயணவழிப்போக்கர்கள்
பயணவழிப்போக்கர் விழியில்
சற்றுநேரமே தெரிந்து மறையும் சித்திரம் அது

Read more...

அவனும் அவர்களும்

காலம் காலமாகவே
அவர்களுக்கு அவன்மீதும் நீதிமீதும்
இஷ்டமில்லை

அவனுக்குத் தடைவிதித்த
காலங்கள் போய்விட்டதனால்
அவர்களால் தடுக்க முடியவில்லை
அவனுடைய வளர்ச்சியினை

அவன் வளர்ந்தான்;
அவர்கள் அவனைக் கண்டுகொள்ளவில்லை.
அவன் மேலும் வளர்ந்தான்;
கண்டு கொள்ளாமலிருக்கவும் முடியாமற் போனதனால்
அவனை அவர்கள்
தங்கள் தளபதிகளாய்
அடியாட்களாய்ப்
பெருமைப்படுத்திக்
கண்டுகொண்டார்கள்.
அவன் மேலும் வளர்ந்தான்;
மீண்டும் அவர்கள்
கண்டுகொள்ளாதிருக்கப் பார்த்தார்கள்.
அவன்மேலும் வளர்ந்தான்;
தங்கள் அடியாட்கள் கொண்டே
அவனை அவர்கள்
தீர்த்துக் கட்டும் வழிகளையெல்லாம்
உபயோகித்தார்கள்.
தப்பிப் பிழைத்து
அவன் மேலும் வளர்ந்தான்;
அவனை அவர்கள்
தங்கள் சரியாசனத்தில் அமர்த்தியபடியே
சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
துக்கமோ சந்தோஷமோ இன்றி
அவன் மேலும் வளர்ந்தான்
கட்டிப் பிடித்து
அவனோடு ஒட்டி உறவாடியபடியே
அவனை விஷம் வைத்துக் கொன்றார்கள்,
எவருக்கும் தெரியாதபடி,
தங்களை உருவாக்கிய அதே விஷம் வைத்து

Read more...

Tuesday, January 1, 2013

இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும்

”அவர்களைத் தடுக்காதீர்கள்
அவர்களை என் அருகே வர அனுமதியுங்கள்” என்றவர்
தன் பீடத்திலிருந்து தள்ளிவிடப்பட்ட பின்தான்
தானாகவே குழந்தைகளை நாடி வந்தார்

மனித உறவுகளிலேயுள்ள
அதீத வன்முறைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல்தான்
இறுதியாக அவர் குழந்தைகளை நாடி வந்தார்
என்றும் சொல்லலாம்

இன்று அக் குழந்தைகளுக்கு அவர் இயேசு அல்ல
ஓர் ஆசிரியனும் விளையாட்டுத் தோழனுமாவார்.
மனிதர்களுக்கும் அவர் இயேசு அல்ல
கொஞ்சம் மனப்பிறழ்வும் கோழைத்தனமும்
தோல்விகளும் கூடிய அப்பிராணி

இன்று அவருக்கும் அவர் இயேசு அல்ல
அந்த மனிதன்!
மனுக் குலம் தன் தோற்றம் முதற்கொண்டு
கனாக் கண்டுகொண்டிருந்த அந்த மனிதன்
முற்றுணர்ந்தோன்,
கவிஞன்,
தீரன்

Read more...

ஆயிரம் பேரும் ஆயிரம் நுனிபற்றி

ஆயிரம் பேரும் ஆயிரம் நுனிபற்றி
தத்தமது பக்கம் இழுக்க
கிழிந்து போகாது
அத்தனை பேரின் ஆசைகளையும் நிறைவேற்றும்
இச்சையே தன் வடிவமாகும் –
உன்னை நான் அறிந்தேன்
ஒப்பிலாப் பேரமைதி கொண்டேன்

அந்த ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளத் தவறுகிற
ஒரு போர்ப் பின்னல் நிகழ்ந்துகொண்டிருக்க
அதுவேயாகும் – உன் கட்டழகின் – வடிவைத்
துல்லியமாய் நான் அறிகிறேன்.
எத்துணைப் பேரழகி நீ! எத்துணைப் பேரன்பு நீ!
என் நோயினைக் களைந்த மாமருந்து நீ!

நானுனைக் கண்டபோது
நீயுமெனைக் கண்டுகொண்டாய்
பார்வை மாறாமல் நாம் ஒருவரையொருவர்
பருகிக்கொண்டிருக்கும் இவ்வேளை குலைய
என் காதலை நான் உன்னிடம்
பிரகடனம் செய்யவா எனக்
காமிக்கத் தொடங்கும்போது
என் காமத்தையும் கற்பனைகளையும் பொசுக்கிக்
கைக் குழந்தையென எனை அணைத்துக் கிடக்கும்
உன் கரத்தை உணர்கிறேன்

எனினும் நான் வளருவேன் என் அன்னையே
உன்னுடையதே போன்ற குணங்களனைத்தும் பெற்று
வளர்ந்து வந்துன்னைக் கரம் பிடிப்பேன்
இவ்வுலகிலுள்ளோர் எல்லோர் முன்னிலையிலும்
உன்னை நான் அவர்களுக்குக் காட்டுவேன்

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP