அகம்
அவருக்கு கடை கண்ணிகளுக்குப் போய்
காய்கறிகள் வாங்க
பழங்கள் வாங்க –
வீட்டு மரத்திலிருந்தும்
பழங்கள் காய்கள் பறிக்க தெரியும்
அடுக்களையில் உறைந்தபடி
சமைக்கத் தெரியும்.
தேநீர் போடத் தெரியும்
முடங்கிக் கிடக்கும் முதியவர்களைப்
பேணத் தெரியும்.
ஆசாரமாய்த் தொழத் தெரியும்
கோயில் செல்லத் தெரியும்
கோலம் போடத் தெரியும்
நல்ல நாட்கள், கிழமைகள்
பண்டிகைகள் என்று
கடவுளையும் நன்கு சமைக்கத் தெரியும்
நீங்கள் எப்படி?
நாம் எப்படி?
நாம் அவரைவிட
வித்தியாசமானவர்களா?
நம் அகம் எப்படி?
“அய்யோ, நேரமாச்சு
ஆத்துல என்ன தேடுவா” என
வேகமாக எழுந்துகொண்ட தீபா
அறிவாரோ
தான் விட்டு எழுந்துவிட்ட இடத்தை?
நாம் அறிவோமோ
நம் அகத்துக்கு வெளியேயே இருந்துகொண்டு
எப்போதும் நம்மைத் தொட்டுத் தழுவியே
அழைத்துக்கொண்டேயிருக்கும் அம்ருத மாருதத்தை?