ஒரு தோட்டப் பணியாளர்
தோட்டப் பணியாளர்களாய் நான்கு பேர்_
ஒருவர்
முதுமையும் சோர்வும் கொண்டவராய்
வேலை செய்யாமல்
இதமாக குளிர்ந்து வீசிய காற்றில்
இளைப்பாறிக் கொண்டு அமர்ந்திருந்தார்.
எளிய மனிதர்களின் ஒரே ஆறுதல்
இந்த இயற்கை மட்டும்தானே?
அவனைப் பார்த்துவிட்டவர்
“என்ன சார், சாப்பாடு ஆச்சா?” என்றும்
”இன்று பண்டிகை உணவுதானே” என்றும்
நலம் உசாவினார்.
“ஆங். ஆச்சு!” என்றவனுக்கு
அவர் முதுமையும் ஏழ்மையும், சோர்வும்தான்
தாக்கியது.
என்னென்ன துயரங்கள், வலிகள்
மனக்குறைகள் மனிதர்களிடம்!
இவை எல்லாமாலும்
மழுங்கிவிட்ட மனதால்
மனிதர்களையும்தான்
எப்படி நேசிக்க முடியும்?
இந்த இயற்கையையும் பேரன்பையும்தான்
எப்படி முழுமையாய் அனுபவிக்க முடியும்?
அன்பா,
நாம் காணவேண்டியதையும்
கண்டடைய வேண்டியதையும் நோக்கியா
நடந்து கொண்டிருக்கிறோம்?