மானசா-90
ஒவ்வொருவராய் தங்கள் கவிதைகளை வாசித்துவிட்டபின் பார்வையாளர்களிடமிருந்து ஒவ்வொரு கவிதைக்கும் எதிர்வினை எதிர்பார்த்து நடத்தப்படும் ஒருவகையான கவியரங்கம் அது. பார்வையாளர்களில் ஒருவராய் அமர்ந்திருந்த தந்தையின் மடியில் அமர்ந்திருந்தது, ஒரு குழந்தை.
ஒவ்வொருவரும் தங்கள் கவிதையை வாசித்து முடிக்கும்போதும் மிகச்சரியாகவே அதே நேரத்தில் அதேநேரத்தில் அந்தக் குழந்தை கரைந்தது. அப்படியொரு கரைச்சல்! குழந்தைகளுக்கே உரிய கரைச்சல்!
முதன்முதலாக அதைக் கண்டபோது, நல்லவேளை கவிதை முடிந்த போது கத்தியது என்று சமாதானமாகிக் கொண்டார்கள். தந்தைக்கு, குழந்தையை வெளியே கொண்டுசென்று நிற்கவேண்டுமே என்ற சங்கடம். அப்புறம்தான் அந்த குழந்தை ஒவ்வொரு கவிதையின் முடிவிலும்தான் கரைந்தது கண்டு எல்லோரும் திடுக்கிட்டார்கள். நிகழ்ச்சி இயக்குனர் அதிர்ந்துவிட்டார்.
விழா முடிந்து வெளியேறுகையில் ஒவ்வொருவரும் அவர்களை ஈர்த்த கவிதைகளையும், ஒரு சந்திப்பின் நிறைவிலுமே செல்ல வேண்டியவர்கள் மிகுதியும் அந்த குழந்தை கரைச்சல் பற்றிய மனமூட்டத்தோடேயே சென்றார்கள்.
அடுத்த ஆண்டு, அதே காலை, அதே விழா, நிகழ்ச்சி அமைப்பாளரும் இயக்குனருமானவர் ஒரு அழைப்பிதழை அழுத்தமான ஒரு வேண்டுகோளுடனே குழந்தை மானசாவுக்கும் தந்தை நவீனுக்கும் மறக்காமல் அனுப்பிவைத்தார்.
கவியரங்கில் அந்த துடிப்பு ஒரு சடங்காக நிகழ்த்தப்படுவதை இயக்குநர் தன் மேலாண்மையால் நிறுவிய அந்த நாளிலிருந்து அது உறுதியாகிவிட்டது. குழந்தை அழாவிட்டால் குழந்தையைக் கிள்ளிவிட்டார்கள், பெற்றோர்கள். குழந்தையே வராவிட்டாலும், இருக்கிறவர்களிடையே வளர்ந்த குழந்தை, இளைஞர்கள் என்று மெது மெதுவாக ஆர்வமும் அக்கறையும் உள்ள யாராவது ஒருவர் குழந்தையைப் போலவே கால்கை உதைத்து கரைந்தனர்.
குழந்தை மானசா சிறுவயதிலேயே கவிதை மற்றும் இலக்கிய அரங்கில் வளர்ந்தும் வாழ்ந்தும் வந்தவர். அந்நாட்டின் மரியாதைக்குரிய கவிஞரும் வருங்காலத்திற்கு வழிகாட்டும் ஒரு இலக்கியப் புள்ளியும் ஆனவர். அவர் இல்லாத ஒரு காவியமேடை அந்த நாட்டில் கிடையாது.
இப்போது மானசா தொண்ணூறு வயது மூதாட்டியாக அந்த மேடையில் இருக்கிறார். விழா அரங்கில் கவிதைதோறும் கரைவதற்குரிய குட்டிக்குழந்தை இல்லை. வளர்ந்தவர்களும் இல்லை. அந்தச் சடங்கிற்குரிய குழந்தையாவதற்கு வெட்கப்பட்டவர்களாய் நீ செய், நீ செய் என்று எல்லோரும் தயங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் மானசா அந்தப் பொறுப்பை தானே எடுத்துக்கொண்டு கைகால்களை உதைத்துக்கொண்டு கரையத் தொடங்கினார். யாராவது நிகழ்த்த வேண்டுமல்லவா?