Thursday, June 30, 2011

பாட்டியின் தனிமை

கதைசொல்லித் தூங்கவைத்த என் பாட்டியை
ஓர் காலையில் தேடி நடந்தேன். எவரும்
கடந்து செல்லமுடியாத ஒரு காட்சியாகவன்றோ
கண்டேன் அங்கே என் பாட்டியை!
வலி தரும் எத்தகைய துயர்த் தனிமையாயிருந்த்து அது!

வெயிலேறத் தொடங்கியிருந்த வேளை
கண்ணுக்கெட்டிய தூரத்திற்காய்த் தகித்துக் கிடக்கும்
புன்செய் நிலத் தோட்டமொன்றின் நடுவே குத்தவைத்து
ஒரு சிறு ஆயதமும் கைவிரல்களும் கொண்டு
தன்னந்தனியாய், கவனமான வேகத்துடன்
வியர்வைப் பெருக்கின் ஆவி சூழ
சுண்டச் சுண்டச் காய்ச்சப்படும்
இரத்தத்தின் முறுகல்பதம்
மீறிடுமோ என அஞ்சும் கோலத்தில் அவர்
மண்ணைக் கொத்தி உதறிக் கொண்டிருந்த காட்சி!

பாட்டி, காலமெல்லாம் உங்கள் பாடானது
உழைப்போ, அன்றி ஓர் மன்றாட்டமோ?
நம் வலியின் காரணங்களை ஆய்ந்து கொண்டிருக்கவோ
இது நேரம்? இக் கோலம்? பாட்டி,
எத்தகைய பூமியில் நாம் பிறந்துள்ளோம்
என்றா ஆய்ந்து கொண்டிருக்கிறீர்கள்?
இம் மண்ணில் தொலைந்து போனவற்றின்
தடயங்களைத் தேடுகிறீர்களோ?

விண்ணளவு விரிந்த
இப் பூமிக்கு நிகரான ஒரு மனுஷியை
உப்புக்கும் புளிக்குமாய்ப்
போராடுவதிலேயே கழிந்துவிடும்-
சுண்டெலியாக்கிவிட்ட விதியும்
மனிதச் சிறுமையுமோ நம் நெஞ்சில்
வேதனையாய்த் திரண்டு நிற்கின்றன, பாட்டி?

நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு
இவ்வாழ்கை பற்றிச் சொல்ல எவ்வளவு இருக்கும்?
விடுதலையேயற்ற துயரங்கள், கொடுமைகள்,
கேடுபேறுகளின்
காரணத்தையே அறிந்திராதவராகவோ
இன்னும் இருக்கிறீர்கள் நீங்கள்?

ஞானத்தினது பின்னும்
மாறாது நிகழ்ந்து கொண்டிருக்கும்
தொடர்வாழ் வெண்ணியோ
நீங்கள் அமைதியில் ஆழ்ந்துவிடுவதும்
பெருந் துயரொன்றாற்
கலங்குவதுமாயிருக்கிறீர்கள்
உங்கள் தனிமையிலெல்லாம்?

காட்டி கண்களை இடுக்கிக் கொண்டு
உங்கள் பேரன் என்னை
நீங்கள் கண்டுகொண்டமாத்திரத்தில்
ராசா...என்றுதிரும் சொல்லையும்
மொத்தமானதொரு துயர் ஒப்படைப்பையும்
அதன்பின் நீங்கள் அடைகிற
மானுட நம்பிக்கையையும் இயல்பு மகிழ்ச்சியையும்
நாங்கள் நன்கு அறிவோம், பாட்டி!

Wednesday, June 29, 2011

நாய் கவனம்

எனது துப்புரவுப் பணியாளரே!
கொலை வெறிபோலும்
வெறுப்பையும் கோபத்தையும்
தன்னை நோக்கிக் குரைத்த
நாயின்மேல்
காலியான குப்பைக் கூடையால்
அதன் சிரசில்
ஓங்கி ஓங்கி
அறைந்து காட்டிவிட்டுச் செல்கிறீர்.
ஒவ்வொரு முறையும்
தணியாத உமது வெறுப்பும்
ஆத்திரமும்
உமது கண்களை மறைத்துள்ளது
அறிகிலீர்.

பளீரென்ற வெண்மயிர் மின்ன
பழகுவதற்காகவே குரைத்த வாலாட்டும் அதனிடம்
நீவிர் இயல்பான முகமலர்ச்சியையும்
மெய்வருடலையும் காட்டியிருப்பீர் எனில்
உண்மை உமக்குப் புரிந்திருக்குமே
ஓநாயிலிருந்து
பல இலட்சம் ஆண்டுகள் தூரம்
பிரிந்து வந்த்து இந் நாய்க்குட்டி.
பார்ப்பதற்குத்தான்
அச்சந்தரும் பற்களுடையது.
தன் உணவுவேளையின் போதுமாத்ரமே
இன்னும் தன் விலங்குக்குணம் மாறாதது.

அன்புப் பெருக்கால் அதிரும் அதன் மூச்சையும்
ஆரத்தழுவும் கைகளாய்த்
தவிக்கும் அதன் முன்னங்கால்களையும்
அச்சமூட்டும் பற்களுக்கிடையே
இளகித் தவிக்கும் நாவையும்
மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் வாலசைவையும்
தனது உணவுமாமிசத்தை அரிவதற்காய்
அதன் வாயிலேயே வடிவமைக்கப்பட்டுவிட்டதால்
தோன்றும் கொடூரத்தைச் சமன்செய்ய விழையும்
அதன் விழிகளையும்
உற்றுக் கவனியுங்கள் நண்பர்களே,
நிதானியுங்கள்.
வெறுப்பிலும் கோபத்திலுமாய் வீணாகலாமோ,
பேரளவான நமது அன்பும் ஆற்றலும்?

Tuesday, June 28, 2011

பிள்ளை இன்பப் பேருவகையுடன்

பிள்ளை இன்பப் பேருவகையுடன்
சூரிய ஒளி வந்து அமர்ந்திருக்கும்
மரகதப் பொன் இலைகள்.
மதிற்சுவர்மேல் ஓடித்திரியும் அணில்.
கிளை துள்ளிக் களிக்கும் தேன்சிட்டுக்கள்.
பழுத்திருக்கும் வேப்பமரமெங்கும்
இன்பம் பிதற்றும் பறவைகள்.

தூசு முதல்
யாவும்
தொழுகைக்குரிய விக்ரகங்களேயாக!

இழந்து நிற்கும் தாய்நாட்டிற்கான
ஏக்கம் போன்றதோ
நன்மைமீதான மனிதனின் வலி?

Monday, June 27, 2011

துயில்

கண்டு கொள்ளும்போது முகிழ்க்கும்
மெல்லிய இதழ் விரிவில்லை?
காணாதபோது துலங்கும்
மவுனமும் இல்லை?
தேடாத போது ஒளிரும்
அமைதியுமில்லை.
உறும் கவனநெருப்புமில்லை
துயரின் வலிகளேதுமில்லை என்பதுவே
கூடுதல் நிறைவு.

விழிகள் மூடியிருக்கின்றன
கனவுகள் இல்லையென்று
அறுதியிட்டுச் சொல்கின்றன
முகத்திலோடும் ரேகைகள்.
மூச்சு இருக்கிறதுவால்
மரணமில்லை என்று சொல்வதற்கில்லை.

யாருக்காவது கலைக்க மனம்வருமோ
இந்தத் துயிற்கோலத்தை?

இன்னும் கொஞ்சம் ஓய்வு கொள்ளட்டுமென்று
தனக்கு மட்டுமே கேட்கும் குரலில் முனங்கிக்கொள்கிறது
மரணமேயில்லாத ஓர் தாயுள்ளம்.

Sunday, June 26, 2011

அலங்கோலமான

அலங்கோலமான இல்லம்.
அழகும் ஒழுங்குமற்றே
எரிகிறது இவ்வுலகம் என்பதை
உய்த்துணரவியலாத அசமந்தம்.

பகுத்தறிதலில்லாது விடுதலை இல்லை

காணற்கரிதானதே
என் அன்பே,
அன்பின் ஒழுங்கும் அழகும்
அற்புதங்களும்!

ஒன்று, சவத்தன்மையும்
இயந்திரத் தன்மையும் கொண்ட கச்சிதம்.
இல்லையெனில்
அசமந்தமும் சோம்பலும் அறியாமையும்
தூக்கி எறியப்பட வேண்டிய பொருள்கள் மீதான
பற்றும் பிணியும் மூடமும் கலந்த குழப்பம்.

நம் கவனத்தால் ஆராய்ந்து பார்ப்போமோ
இவைகளை எல்லாம்?

அசமந்தத்தின் செயல்கள்தாம்
எத்தனை இவ்வுலகில்!
அசமந்தம்தான்
நம்பிக்கைகளைப் பற்றுகிறது.
நம்பிக்கைகள்தாம்
சக மனிதர்களைப் புறக்கணிக்கவும்
போரிட்டு ஒழிக்கவும் பாய்கின்றன.

என்றாவது நிகழும் அற அதிர்ச்சிக்காகவோ
காத்திருக்கிறது அசமந்தம் இப்போது
காண்பவை ஒவ்வொன்றிலும்
உக்கிரமாய் ஒலித்தபடி?

Saturday, June 25, 2011

திருப்பரப்பு

தொடர்வண்டி ஒன்றில்
ஒரு நீண்ட இரவு கடந்து
பாரமும் களைப்புமாய் 
இரயில் நிலையம் வந்து சேர்ந்தோம்

முழுசாய் எங்களுக்கே எங்களுக்கென
வந்ததொரு பேருந்து
அழைத்துச் சென்றது எங்களை
அவ்விடத்திலிருந்து

போர் விரித்தாடும் இடத்திலிருந்து
பாதுகாப்பான இடத்திற்கோ என
புகைந்தது புண்கள் நிறைந்த நெஞ்சு
தவறான இடத்திலிருந்து
சரியாக இடத்திற்கு
என்றது பேருந்து.
இதுவரை இருந்ததைவிட
இன்னும் மேலான இடத்திற்கு
அவ்வளவே என்றனர் தோழர்கள்.
ஆனால் ஆனால்
வழியெல்லாம் கிளைகளசைத்து
உயரமான மரங்களும் விண்ணும் 
உரக்க உரக்க கூவினவே
புறப்படும் இடத்தையே மன்னித்தும்
மறக்கவும் செய்திடும் 
சொர்கத்திற்கு என்று!

எங்களுக்காகவே கட்டப்பட்டிருந்தாற்போன்ற 
ஓரொற்றைவிடுதி வந்து சேர்ந்தோம்
எக்காலத்தும் அங்கு வந்துசேர்ந்தார் 
யாருமில்லை என்பதுபோல
புத்தம் புதிதாய் இருந்த விடுதி.
எங்களைக் கண்டதும் ஒளிர்ந்த 
அதன் காந்தப் புன்னகைதான் எத்தனை அழகு!
காலம் தோறும் அது தன் இன்மை காத்து வந்தது
தித்திக்கும் இவ்வினிமைக்காகத் தானோ ?

அவ்விடுதியை மையம்கொண்டே 
விண்ணும் மண்ணும்
எண்ணற்ற நட்சத்திரங்களும்
சூழ்திருப்பது கண்டு திடுக்கிட்டோம்.
இவ்வண்டத்தின் அத்தனை உயிர்களையும்
ஏற்று அரவணைக்க இயலும்
அத்தனை பெரும் பரப்புடையதாயிருந்தது
அந்த இடம் .

விடுதியின் மொட்டைமாடியிலிருந்தபடி
எங்கள் இன்பதுன்பங்கள் குறித்த
எங்கள் கவிதைகளை வாசித்துக்கொண்டிருந்த
எங்களை எழுப்பி நடத்தியது
இடையறாது பொழியும் மழைபோலொரு குரலோசை
எங்கோ ஊற்றெடுத்த ஓர் அன்புதான்
ஏகமாய் பரவி ஆங்காங்கே
தன் உருக்காட்டி எம்மை அழைத்ததுவோ ?

சூழ்ந்துள்ள ரப்பர் தோடங்களுக்கு நடுவே
இன்னும் அழிக்கப்படாதிருக்கும் காடுகளுக்கு நடுவே
பல்லாயிரம் கோடி வயதுடைய பாறைப்படுகைகள்மீது
ஓய்விலாது கலகலத்தபடி
ஓடி ஆடி தவழ்ந்து குதித்து புரண்டு சிலிர்த்துச்
சிரித்து களித்துக் கொண்டிருந்த நதி
ஓரிடத்தில் கொட்டியது அருவியாய்!
எம் நடை தடுத்தாட்கொண்ட
குன்றாப் பெருங்கொடை நிதியம்!
முடிவிலா இன்பத் தேடல்களால் வாழ்வைத்
துயர்களமாக்கிக் கொண்டிருக்கும் மனிதத் தலைகளுக்கும் 
தன் இன்பம் ஊட்டி மகிழ்ந்துகொண்டிருக்கும்
பெருங்கருணை 




திற்பரப்பில் நடந்த தேவதேவன் கவிதை அரங்கிற்கு வந்து திரும்பிய பின் கவிஞர் எழுதியது ,ஜீன் 11 உங்கள் நூலகம் இதழில் இருந்து .

சுட்டுவிரல்

அது பிறந்ததுமில்லை
இறக்கப் போவதுமில்லை.

வளர்ச்சி, வளர்ச்சிப் படிநிலைகள்
என்றேதுமில்லை அதனிடம்.

அளவிடமுடியாத எடைபொருந்திய
அதன் மவுனம்,
அவன் குழந்தைப் பருவத்திலிருந்த
அதே மவுனம்,
அவன் இல்லாதபோதும் நிலவுகிறது,
பணி ஓய்வுக்குப் பின் அதிலே அவன்
கூடுதலாய்த் திளைக்க-
எப்போதும் எங்கும் நிலவுகிறதுதானே,

பேரளவினதாய்க் கனலும்
இந்த மவுனத்தின்
ததும்பும் வெறுமையில்
நான் எனும் பிரக்ஞைவலிநிலையே
தான் எனும் இவ்வுலகென்றும்
அறிந்தோனால்
என்ன செய்ய இருக்கிறது இங்கே!
எத்தகையது
காலத்தோடு நமக்குள்ள உறவு!
காலம் அவனைத் தன் சுட்டுவிரலாற்
நகர்த்திக் கொண்டிருக்கும் வெளியில்
காலத்தின் மேடை நின்று
நாம் செய்யப் போவதென்ன,
காலத்தினின்றும் அவன்தன்னைக்
கழற்றிக் கொள்வதைத் தவிர?

Friday, June 24, 2011

அமைதி என்பது...

உத்தேசமில்லாமலேயே
அனைத்துச் சச்சரவுகளுக்கும்
தீவினைகளுக்கும் எதிராய் எரியும்
உக்கிரமான போரோ?

பயனிலா வெளிப்பாடுகளனைத்தையும்
இடையறாது களைந்தபடி
உள்ளோடும் அழுக்குகளனைத்தையும்
இமைக்காது உற்றுநோக்கியபடி
ஆழ்ந்து அமர்ந்து நிற்கும்
அடங்கலரிய கொந்தளிப்போ?

எச் செயலாய் வெளிப்படுவதென
உட் திணறி
கூருணர்வாய்
அவதானித்தலாய்
அறியாமை கண்டு
வேதனிக்கும் நெஞ்சாய்
சாய்வு சமரசமற்ற
பேரறிவாய்
கருணையாய்
மெய்யன்பாய்
மெல்லக் கசிந்துருகும்
பேராற்றலின் சுனையோ?

கேளிக்கை
விளையாட்டு
வேடிக்கை
திருவிழாக்கள்
எதனாலும்
அணையாது நின்றெரியும் நெருப்போ?

தோல்வியின்
ஆகப் பெரிய தனிமையினால்
ஆகிய பெருங் கண்ணீருடன்
கனலும் துர்ப்பாக்கியமோ?

Thursday, June 23, 2011

காட்டையழித்து

காட்டையழித்து
ஒரு கரும்புத் தோட்டம்.

ஆயிரங்கால் மண்டபத்தையழித்து
ஒரு அருங்காட்சியகம்.

பெண்ணை அழித்து
ஒரு மனைவி, மகள், மருமகள்.
மனிதனை அழித்து
ஒரு கடவுள், சாமியார், தலைவன்,
தொண்டன், ஏழை.

என்றாலும்
ஆடிக்கொண்டிருக்கும்
ஒவ்வொன்றிற்குப் பின்னாலும்
அழியாதே மறைந்தபடி
அசையாது நிற்கின்றன
அழிக்கப்பட்ட ஒவ்வொன்றும்!

உயிரின் கனல் தீண்டி
உயிர்த்தெழுந்து மணம் வீச!

எக் கணமும் தயார் நிலையில்
இருக்கும் பெருநிலையை
எண்ணி எண்ணி வியந்ததும்போய்
எண்ணியதே ஆனபடி!

Wednesday, June 22, 2011

மலர்களில் மலர்ந்துள்ளது எது?

மலர்களில் மலர்ந்துள்ளதும்
நின் அகன்ற விழிகளில்
துயிலின்றி விழித்திருப்பதும்

நின் இதழ்களில் கனிந்து
மவுனமாய்ப் பேசிக்கொண்டிருப்பதும்

சலனமின்றி நின் செவிகள்
செவிமடுத்துக் கொண்டிருப்பதும்

நின் நாசி மடிலோரம்
பொறுமையாய்க் காத்திருப்பதும்

பெறுதற்கரிய இருப்புடன்
உன் மடிமீது அமர்ந்திருப்பதும்

நின் கருங் கூந்தலில்
இரகசியமாய்ப் புதைந்திருப்பதும்

உன் கைகால் நகங்களில்
கதிரொளி ஏற்றிப்
பணிந்து கிடப்பதும்

நின் மெல்லிய சலனங்கள் ஒவ்வொன்றிலும்
விழி உயர்த்திப் பேச யத்தனிப்பதும்…

இன்னும் இப்புவியை வாழ்வித்துக் கொண்டிருக்கும்
காதலன்றி வேறு என்ன?

Tuesday, June 21, 2011

பெருங்குளம்

துடிக்கும் அலைகளுடன்
வானம் பார்க்க விரிந்து
பூமி செழிக்க்க் கிடக்கும்
நீயே உனது ஆனந்தம்.

கண்களிற் பட விழைந்த
காட்டுப் பூக்கள் கோடியின்
காதல் உளக் கிடக்கையோ,
பால்வெளியோ,
மண்ணில் இறங்கி நிற்கும்
தேவதைகளோ என
ஒளியில் விழித்துக் காற்றொடு கூடிப்
பேரானந்தம் கொண்டாடுகின்றன
உன் பக்கத் துணைகளாம் நாணல் மலர்கள்
முடிவற்றதோர் இன்பக் காட்சியாய்.

குளிர்காற்றும், திடீரென்று
வான் முழுக்க நிறைந்துவிட்ட
மழைமேகங்களும் இடி முழக்கமுமாய்
நெருங்கிவிட்டதோர் முற்றுமுழுநிறைவேற்றம்
உன் முகப் பொலிவைக் கூட்ட
மரங்கள் அசைகின்றன
தோகை விரித்தாடும் மயில்கள் ஆயிரமாய்.

ஆட்டுமந்தை ஓட்டிவரும் மேய்ப்பனின்
வாடி வதங்கிய முகத்திலும்
பூ மலர்கிறது.

உன் கரையோர ஆலமரத்தடியிலன்றோ
எங்களை ஒதுங்கி நிற்கவைத்தது மழை.
மழையை வாங்கி
மழையேயாகி நிற்கும்
உன் கோலம் காணவோ
வந்துற்றோம் நாங்கள் இங்கே?

உன்னைக் காணும் பித்தேறி
சுற்று வட்டாரம் முழுக்க நீ விரித்திருக்கும்
பச்சைக் கம்பளம் மீதூர்ந்து
நாங்கள் பறந்தோடி வந்து நிற்பது
நீ எங்களைத் தேர்ந்துள்ள இரகசியத்தாலோ?
எதற்கோ?

Monday, June 20, 2011

சின்னஞ்சிறு குருவியே

எத்துணை கொடுத்து வைத்தவள் நீ!
மானுடப் பரப்பில்
உன் மூளை இயங்கிக் கொண்டிருக்கவில்லை.
அமைதி அமைதியின்மை அறியாத
பேரமைதியின் புதல்வி நீ.
எளிய தேவைகளுக்கும்கூட
தன் வாணாளைப் பணயம் வைத்துப்
பாடுபட வேண்டிய
விந்தை உலகத்தவனில்லை நீ.
உன் உயிர் தரிப்பதற்கான
சிற்றுணவுப் பஞ்சத்தை
நீ ஒரு நாளும் அறிந்த்தில்லை.

புகழுக்கும் மேலாண்மைக்கும் போகத்திற்குமாய்
அல்லலுறும் மானுட உலகையே அறியாது,
வானத்திற்கும் பூமிக்கும் பிறந்தவளாய்
அன்பின் பெருவிரிவில் சிறகுவீசும் என் செல்லம்!

இன்பமும் துன்பமும் உயிரச்சமும்
அறியாதவன்
என்றாலும் இயற்கைப் பெருவெளியை
உதைக்கும் ஒரு சிறு கீறலுக்கும்
துணுக்குற்று அலறும் ஒரு நுண்ணுயிர்!
உனக்காக,
உனக்காகவேதான் என் கண்ணே,
இந்த ஈனச் சிறு மானுடர்க்காய் அல்ல;
அவர்களுக்காகவெனில்
இவ்வுலகை ஆயிரம்முறை அழிக்கலாம்.
உன் துணுக்குறலாற் துயருற்றே
உனக்காகவேதான் என் செல்லமே
தன்னைச் சரிசெய்துகொள்ளத் துடிக்கிறது
இப் பேரியற்கை
என் அன்பே!

Sunday, June 19, 2011

அந்தி

நீரால் அமைந்த இவ்வுலகில்
வானிற் கதிரவனாய் ஒளிர்வதும்
மண்ணிற் தாமரைகளாய் மலர்வதும்
ஒன்றேயெனும்
பேருணர்வின் நாடகமோ இவ்வாழ்க்கை?
இரு பேருணர்வுகளின் சந்திப்போ காதல் என்பது?

ஒருவரையொருவர் ஈர்த்து
இருவரையும் இல்லாமலாக்கும்
காட்சியின்பம் மட்டுமேதானோ அது?

ஒருவரை ஒருவர் அடித்துப் புசித்து
எவரும் இல்லாமலாகும்
பெருங் காமப் பசியோ?

யாருமறியாவண்ணம்
எங்கு எப்போது சந்திப்பதென
அவன் தன் குறிப்புணர்ந்தவளோ
தன் கைத்தாமரை குவித்து
அந்திக் குளக்கரையைக் கூறிநின்றாள்?

எல்லோரும் அகன்று
தனித்துவிடப்பட்ட அந்திமங்கல்
அமைதிக் குளக்கரை
மரநிழலில் ஒளிந்தபடி
அவன் அவளைச் சந்திக்க்க் காத்திருந்தான்.

பரிதியைக்
கண்டு விரிந்த தாமரையே
பரிதியை
உட்கொண்டு குவிந்துநின்றிருந்தது அங்கே.
வெளிமூச்சு போலும்
வீசிய சிறுமென் காற்றில்
ஒன்றையொன்று நெருங்கித்
தொட்டுணர்ந்து விலகிக்கொண்டன
இரண்டு மொட்டுகள்.

Saturday, June 18, 2011

இரத்தினங்கள்

கணமும் விண்ணைப் பிரிந்திராத காதலால்
பெருநிறைவும் பேரழுகுமாய்
ஒளிர்ந்து கொண்டிருந்தது பூமி.

சாலைவழிச் செல்லும் சக்கரங்களின்
புழுதி தீண்டாத தூரத்தில்
அவன் ஒரு வீடமைத்தான்.

அதை அவன்தன் இனியாள் ஒருத்தியிடம்
ஒப்படைத்ததுபோல்
அதிகாலையிலேயே எழுந்து
அவள் தந்த கட்டுச்சோறுடன்
வெளியே கிளம்பினான்.

இவ்வீடு விஷயமாய்
இப் பூமியிடம்
மிகப்பெரிய வில்லங்கத்தில் மாட்டிக்கொண்டு
ஒருவாறு நல்லவிதமான
பேச்சுவார்த்தை நோக்கி
நாளும் தூங்கி விழித்துச்
சென்றுகொண்டிருப்பான் போலிருந்தான்-
அவளும் அக்கவலையை அவனோடு பகிர்ந்துகொள்ளும்
ஒரு பாதியாகியிருந்தாள்.

அவர்கள் பொறுமையாக இருந்தார்கள்.
நன்மையின் மீதான
ஆழ்ந்த உறுதியோடும் தெளிவோடும்
இருந்தார்கள்.
எதிராளியின் வல்லமையையும் கருணையையும்
நன்குணர்ந்த அறிவாலும் தாழ்மையாலும்
அமைதி கொண்டிருந்தார்கள் அவர்கள்.
கிடைத்தற்கரிய அற்புத இரத்தினங்களைப் போல்
ஒளி வீசின அவர்கள் கண்கள்.

Friday, June 17, 2011

நாய்ச் சிற்பம்

வளர்ப்பு மிருகங்கள் வளர்ப்பதில்
பிரியமில்லாதவனாய் இருந்தவன்,
என் சின்னமகனின்
பிடிவாதமான கட்டளையால்
மாட்டிக் கொண்டேன்,
ஒரு செல்ல நாய்க்குட்டியுடன்.

உணவளித்தோம், கொஞ்சினோம்;
குளிப்பாட்டினோம்;மெய்தழுவி மகிழ்ந்தோம்.
விளையாடினோம்;
காலை நடை மாலை நடை சென்றோம்.
கவிதை எழுதுகையில் நூல் வாசிக்கையில்
நாற்காலியொட்டி படுத்துக் கொள்ளும்
அதன் இருப்பினை வருடி நின்றோம்.
வீட்டைவிட்டு வெளிச் செல்கையிலும்
உள்வருகையிலும் இன்முகத்துடன்
உறவு பேணிக் கொண்டோம்.

எங்கள் வாழ்க்கையை விட்டொரு நாள்
எங்கள் செல்லநாய் மறைந்து போனது.

எங்கள் தோட்டத்தில் ஓர்நாள் கிடைத்த
ஒரு பெரிய மர வேர்த்துண்டின்
அழகை வியந்து அதைச் சற்றே செதுக்கி
தோட்டத்து நடுவே அமைந்த ஓர் மேடையில்
அந்த அழகு நாய்ச் சிற்பத்தை நிறுத்தினேன்.

அதை ஏறெடுத்தும் பார்த்தானில்லையே என் மகன்!

கலையானது ஒருக்காலும் கடவுளாவதில்லையோ?

தன் நாய்ச் செல்லத்தை இழந்த துயரம்
அதன் சிற்ப அழகில் தீரவில்லை என் மகனிடம்,
ஆனால் அவன் மீண்டும் மலரத் தொடங்கினானே
வாழ்வின் தீராத உறவில்!

Thursday, June 16, 2011

மணமக்கள்

நன்கு அலங்கரிக்கப்பட்ட
ஒரு திருமண மண்டபம்.
மய்யமாய்
மலர்மாலை சூடிநிற்கும்
தன்னந்தனியான
ஒரு திருமண ஜோடி.
ஆனால், தனிமை என்பது
ஆங்கில்லை.

பாட்டுகள் கொண்டாட்டங்கள்
கோலாகலங்கள்
ஒலிபெருக்கியில் உரத்து ஒலித்து
கும்மாளப் பாட்டுக்கு
இளைஞர்கள் ஆடிய ஆட்டங்கள்
பரிசளிப்புகள் பரிமாற்றங்கள்
விராரிப்புகள் விருந்துகள்
அனைத்தும் அக்காட்சியில்
திடீர் விழிப்பெய்தினவாய்
தங்கள் குணங்களை
ஒதுக்கி நின்றன ஒரு கணம்.

மண்டபத்தில் நுழைந்த ஒரு மூதாட்டி
கண்பனிக்கக் கைகூப்பித் தொழுது நின்றாள்
மணமக்களை நோக்கி.

மணமக்கள் விழிகளிலும் ஒரு திகைப்பு.
தங்கள் முதல் சந்திப்பில்
சமப்பார்வையாக இருந்தது,
தங்கள் களவொழுக்கத்தில்
ஆர்வத்தாலும் சந்திப்பில்
கைவிலகி நின்று தகித்தது,
தங்கள் காதல் வாழ்வின்
ஒவ்வொரு வேளையிலும்
இனித்தும் கரித்தும் நின்றது,
இன்று ஒரு உரத்த குரல் எய்தி
கூட்டம் கூட்டி
மலர்மாலைகளுடன் காட்சியளிப்பது-
எல்லாம்
ஒரு மூதாட்டியால் மட்டுமே
உள்ளம் கசிந்துருக
உய்த்துணர இயலும் தேவமோ?

Wednesday, June 15, 2011

கவிதை

நீர் நடுவே
தன்னை அழித்துக் கொண்டு
சுட்டும் விரல்போல் நிற்கும்
ஒரு பட்ட மரம்.
புரிந்துணர்வின் பொன்முத்தமாய்
அதில் வந்து அமர்ந்திருக்கும்
ஒரு புள்.

Tuesday, June 14, 2011

விண்ணளவு பூமி

விண்ணளவு பூமி
விரிந்து நிற்கும் நிலம் நடுவே

செவியின்
இரு கேள்எல்லைகளையும் தாண்டிக்
கேட்டதொருபேரோசை.
கண்ணின்
இரு பார்வை எல்லைகளையும் தாண்டிக்
கண்டதொரு பெருங்காட்சி.

யாவற்றினதும் மையமாய்
யாவற்றையும் அழித்தொழித்து
யாங்கும் எப்பொருளிலும் எக்காலத்தும்
நின்றெரியும் மெய்மையாய்
ஒரு மனிதன்
தன்னை உணர்ந்த வேளை.

Monday, June 13, 2011

பாதையோரத்து மலர்கள்

யார் வலியவனும் மனிதனுமானவன்?

தன் ஏழை எளிய சுற்றத்தைத்
தன் தோள்மேல் சுமந்து செல்பவனா?

செல்வம் திரட்டிப் போகிற போக்கில்
தீனர் திக்கற்றவர்களின் இடுப்பொடித்து
வஞ்சித்து, அவர் தோள்மேலே
தன் சுக வாழ்வுச் சவாரியினை
அமைத்துக் கொள்பவனா?

அந்த ஈனச் சுகவாழ்வை
நிலைநிறுத்திக் கொள்ளவே
தீனர் திக்கற்றவர் மற்றும்
கலை கல்வியினது பாதுகாவலனாகி

மானுடம் இதுவரை கண்டுள்ள
அனைத்து நல்லவைகளையும்
எற்றி ஏமாற்றி
தனக்குள் எள்ளி நகையாடும் பைசாசமா?

தெள்ளத் தெளிந்த கூர்மதி ஒளிர
வழிமறித்தும் வழிமறிக்காமலும்
ஒதுங்கி நிற்கின்றன
தன் அழகின் பிடிவாதம் இளகாத
பாதையோரத்து மலர்கள்.

Sunday, June 12, 2011

மரம்

உனது பாடுகளையோ
ஆறாத ரணங்களையோ
அவ்வப்போது
இலைகள் திறந்து காட்டுகிறாய்?

தாங்கொணாத வேதனையானதெப்படி
நமது வாழ்வு?

இக் கடுங் கோடையில்
தளிர்த்துப் பொங்கி
பூத்துக் குலுங்கி
ஒரு புது மென்காற்றையும்
எனை நோக்கி வீசும்
உனது காதல் மட்டும் இல்லையெனில்
என்னாவேன் நான், என் தெய்வமே!

Saturday, June 11, 2011

மலர்கள்

நம் பார்வைக்கே
ஏங்கி நிற்கின்றன
தொட்டால் வாடிவிடும் மலர்கள்.

வாடுமோ கல்லில் செதுக்கப்பட்ட மலர்;
காதல் பரிமாறக்
காதலாற் கொய்யப்பட்ட மலர்?

மலர்கள் சில பறித்தாலென்ன
யாதொன்றும் வாடாத
சொர்க்கம் அங்கே நிலவுகையில்?

காம்பு நீட்டி நின்ற ஒரு மலரோ
கடவுளாக்கியது அவனை?

Friday, June 10, 2011

அதன் பின்

துன்பகரமான
நினைவுகளினதும் வலிகளினதும்
காரணங்களைத் துருவியபடி
இருள்வெளியில்
காலம் காலமாய்ப்
பறந்து கொண்டிருந்த
ஒரு பறவை,அவனருகே
தோளுரசும் ஒரு மரக்கிளையில்!

அதிசயத்திற்குப் பின்தானோ
அது எழுந்து பறந்துகொண்டிருந்தது
காலமற்ற பெருவெளியில்?

Thursday, June 9, 2011

வேசி

ஆகக் கழிசடையைக் குறிக்கவும்
பெண்தானா அகப்பட்டாள் உங்களுக்கென
என் மகள் சீறி ஆட்சேபிக்கவும்
சொல்லிழந்த நிலையில்
கண்டேன் அதுவரையிலும் நான்
காணாத தொன்றை!

Wednesday, June 8, 2011

இராஜ்ய பாரம்

மைதாஸ் நீ தொடுவதற்குமுன்
எல்லாம் பொன்னாகத்தானே இருக்கின்றன,
வேறு ஒரு வரம் கேள்.

பேசத் தோன்றாமல் நின்றதனால்
அவளாகவே உதவினாள்;
நீ தொடுவதெதுவுமே
தன் இயல்பினின்றும் நலிந்து விடாதவாறு
வரம் தருகிறேன் என்றாள்.

அன்று முதல் மைதாஸ்
தன் ராஜ்யத்திலுள்ள
அனைத்துக் குழந்தைகளையும்;
குழந்தையுள்ளம் கொள்ளும்
நேரம் பார்த்து
அந்தந்த மனிதர்களையும்
போய் தவறாது தொட்டுவிடும்
வேலை மும்முரத்திலாழ்ந்தான்.

மக்களும் மந்திரி பிரதானிகளும்
மன்னரின் சித்தம் குறித்தும்
நாட்டைக் குறித்தும்
கவலை கொண்டு கூடினர்

இராஜ்ய பாரம் என்பது லேசா?

Tuesday, June 7, 2011

ஒரு மலர்

தன் மணம்
இப் பிரபஞ்சவெளியின்
முடிவின்மைவரை
பரவிக் கொண்டிருக்கிறதாய்
முற்றுமுழு உறுதியுடன்
முறுவலித்துக் கொண்டிருந்தது
ஒரு மலர்.

தனக்குக் கிட்டாததாய்
வாடி வருந்தும் மனிதனைச்
செவி மடுத்துச் சொல்லிற்று அது;
“நெருங்கி வா.
ஒருபோதும் விட்டு விடாதே
என் அண்மையை.”

Monday, June 6, 2011

அந்தி விளக்கொளியில்...

என் பணிகளையெல்லாம்
முடித்து விட்டு
ஒவ்வொரு நாளும் தவறாது
எத்தனை வேகமாய்
ஓடிவந்தமர்கிறேன்
உன்னிடம்!

எத்தனை பெருங்காதல்
நம்மிடையே நிலவுகிற தென்பதை
யாரரிவார்?
என் அந்தி விளக்கொளியில்
ஒளி வீசும் பேரழகி நீ!

கன்னங் கரிய
என் பேரொளி
என் சொர்க்கம்.
மனம் அவிந்த
நெருக்கம்.
திகட்டாத பேரமைதி
பேராறுதல்
என் உறக்கத்திலும்
களைத்த என் உடம்பை
மாமருந்தாய்த் தீண்டியபடி
விழித்திருந்து காவல்காக்கும்
தெய்வம்.
என் காயங்கள் மீது பொழியும்
அம்ருதப் பெருங் கருணை.

பகலெல்லாம்
வியர்வை கொட்டிக் கொண்டிருக்கும்
என் மேனியினை
நிழல் திரைகளில் மறைந்து நின்றபடி
இமைக்காது நோக்கிக்கொண்டிருக்கும்
காதல்.

நம் சங்கமக் காந்தப் புலமெங்கும்
அறியப்படாத ஓர் இரகசியப் புதையலாய்
பெருகிக் கிடக்கும் மவுன வெள்ளம்.

Sunday, June 5, 2011

கப்பன் பார்க், பெங்களுர்

ஒவ்வோர் கணமும் ஓரோர் திசை
திரும்பிய வண்ணமாய்
எக் காலத்தும் எத்திசையும்
எல்லோரை நோக்கியும்
நீண்ட நீண்ட கைகளேயான
ஒரு பெருமரப் பிரமாண்டம்
அந்தப் பூங்காவில்.
அதன் கீழ்
காதல் வேண்டியன்றோ
வந்து-இருந்து-எழுந்து
சென்று கொண்டிருந்தனர் மனிதர்.
அவனோ, அம்மரத்தின்மீதே
காதல் கொண்டவனாய் வந்தமர்ந்திருந்தான்.
அம்மரத்தின் மகத்துவமோ
தன்மீதே தான் கொண்ட
காதலால் இயன்றிருந்தறிந்தான்.

Saturday, June 4, 2011

பருந்து

உங்கள் சின்னஞ் சிறிய வயதிலாவது
பார்த்து அனுபவித்திருக்கிறீர்களா,
பருந்து ஒன்று
கோழிக் குஞ்சொன்றை
அடித்துச் சென்ற காட்சியை?

அதன் கூர்மையான நகங்களால்
உங்கள் முகம் குருதி காணப்
பிராண்டப் பட்டதுபோல்
உணர்ந்திருக்கிறீர்களா?

பறவை இனத்திற் பிறந்தாலும்
விண்ணிற் பறக்க இயலாது
குப்பை கிண்டித் திரியும் அதனை
துடிக்கத் துடிக்க ஓர் உயரத்திற்கு
அழைத்துச் சென்ற அந்தக் காட்சி!

அக் குஞ்சோடு குஞ்சாய் மரித்து
அப் பருந்தோடு பருந்தாய்
பறந்து திரிந்திருக்கிறீர்களா
பாதையில்லா வானத்தில்?

குப்பைகளை
ஆங்கே நெளியும் புழுக்களை
கோழிக் குஞ்சுகளை
அவை தங்களுக்குள்ளே இடித்துக் கொள்வதை
புலம்பல்களை
போரை
போர்க்களங்களில்
பிணமாகி அழியும் மனிதர்களை
பிணங்களின் அழுகிய வாழ்வை-
நீங்களும்தான் பார்த்திருப்பீர்களில்லையா?

அது தன் சிறகு மடித்து
தனது பனித்த கண்களுடன்
ஒரு குன்றின் மீதமர்ந்திருக்கையில்
அய்யம் சிறிதுமின்றி
ஒரு தேவதூதன் போன்றே காணப்படுகிறதில்லையா?


புதிய பார்வை (ஏப்ரல் 2006) மற்றும் பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள் கவிதைகள் தொகுப்புகளில் உள்ளது.

Friday, June 3, 2011

ஏதோ ஒரு திட்டத்தில்...

எங்கள் பயிற்சி வகுப்பின்
நிகழ்ச்சி நிரலில் ஒன்றாய்
வினாடி வினா நடத்தியவரின்
முகத்தையே தான்
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்,
அதில் ஒளிரும் மேலாண்மைப் பெருமிதம்தான்
என்னே என்று வியந்தபடி.

உலகத்தின், அநேகமாய் அத்தனை அறிவையும்
தன் நினைவில் சேகரித்து வைத்திருக்கும்
ஒரு கணினிமுகம்தான்
'ஒன்றுமில்லை' என்றபடி
எத்தனை எளிமையுடன்
எத்தனை தாழ்மையுடன் இருக்கிறது!

எத்தனை முட்டாளாய்
இன்னுமிருந்து வருகிறானிந்த மனிதன்!

ஏதோ ஒரு திட்டத்தில்
எல்லா அறிவினையும்
தன் நினைவுப் பெட்டிக்குள்
இழுத்து வைத்துக் கொண்டு
என்னமோ சொல்வது போலிருக்கிறது
கணினிப் பெட்டி.

Thursday, June 2, 2011

என் அணிற்பிள்ளைகள்

என் மரநிழல் குளிர்விக்கும்
மதிற்சுவர்மேல்
பருக்கைகள் வைத்துவிட்டு நகர்ந்தேன்.
விரைந்து வந்து உண்ணும்
என் அணிற்பிள்ளைகளின்
பட்டுடலெங்கும் கனலும் பதற்றம்.

ஒரு பக்கம்
குதித்தாடித் திரிய வைக்கும்
அலகிலா இன்ப ஒளிப்பெருக்கு
மறுபக்கம்
குத்திக் குதறி
உயிர் குடித்திடவே
தலைக்குமேல் எப்போதும்
சுற்றிக் கொண்டிருக்கும் கருமை.
நடுவே
வேறு எப்படித்தான் இருக்க முடியும்
இந்த அணிற்பிள்ளைகளின் வாழ்வு?

Wednesday, June 1, 2011

கவிதைவெளி

கவிதை எழுப்பித்தானே
காலையில் நான் துயில் களைந்தேன்
கவிதையின் நீரில் தானே
முகம் கழுவினேன்

கவிதையின் தூரிகை கொண்டல்லவா
வீட்டினை நான் தூய்மையும் ஒழுங்கும் செய்தேன்
கவிதையின் படகிலேறியன்றோ
அண்டை வீட்டார்களுடனும் அந்நியர்களுடனும்
உறவு கொண்டேன்

கவிதையின் நெருப்பினிலன்றோ
சோறு வடித்தேன்
கவிதையின் அரிவாள்மனை அமர்ந்தல்லவா
காய்கறிகள் நறுக்கினேன்
கவிதையின் வாகனத்திலேறித்தானே
அலுவலகம் சென்றேன்

கவிதையின் கிண்ணத்திலன்றோ
தேநீர் பருகினேன்
கவிதையின் ஒளியிலல்லவா
தகதகத்துக் கொண்டிருந்தது இயற்கை
கவிதையின் பொன்வெளியிலல்லவா
நாளும் என் சிறுஉலா நடந்தது

கவிதையின் மொட்டைமாடியிலன்றோ
வான் பார்த்து நின்றேன் நான்
கவிதையின் நாற்காலிகளிலமர்ந்து கொண்டல்லவா
பிரச்னைகளை நாங்கள் ஆராய்ந்தோம்
மூடத்துயர் மிகுந்துகொண்டே வரும் இவ்வுலகில்
மனித முயற்சிகளனைத்தும் வீணேயாகிக் கொண்டிருக்கும்
இச்சாம்பல் வானத்தின் கீழே
வாழ்வின் அரும்பொருள் வினை இதுவே என
எப்போதும் உணர்த்தும் நிலையில்தானே
எரிந்துகொண்டிருந்தது அங்கே
கவிதைவெளி!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP