நாய் கவனம்
எனது துப்புரவுப் பணியாளரே!
கொலை வெறிபோலும்
வெறுப்பையும் கோபத்தையும்
தன்னை நோக்கிக் குரைத்த
நாயின்மேல்
காலியான குப்பைக் கூடையால்
அதன் சிரசில்
ஓங்கி ஓங்கி
அறைந்து காட்டிவிட்டுச் செல்கிறீர்.
ஒவ்வொரு முறையும்
தணியாத உமது வெறுப்பும்
ஆத்திரமும்
உமது கண்களை மறைத்துள்ளது
அறிகிலீர்.
பளீரென்ற வெண்மயிர் மின்ன
பழகுவதற்காகவே குரைத்த வாலாட்டும் அதனிடம்
நீவிர் இயல்பான முகமலர்ச்சியையும்
மெய்வருடலையும் காட்டியிருப்பீர் எனில்
உண்மை உமக்குப் புரிந்திருக்குமே
ஓநாயிலிருந்து
பல இலட்சம் ஆண்டுகள் தூரம்
பிரிந்து வந்த்து இந் நாய்க்குட்டி.
பார்ப்பதற்குத்தான்
அச்சந்தரும் பற்களுடையது.
தன் உணவுவேளையின் போதுமாத்ரமே
இன்னும் தன் விலங்குக்குணம் மாறாதது.
அன்புப் பெருக்கால் அதிரும் அதன் மூச்சையும்
ஆரத்தழுவும் கைகளாய்த்
தவிக்கும் அதன் முன்னங்கால்களையும்
அச்சமூட்டும் பற்களுக்கிடையே
இளகித் தவிக்கும் நாவையும்
மகிழ்ச்சி ஆரவாரம் செய்யும் வாலசைவையும்
தனது உணவுமாமிசத்தை அரிவதற்காய்
அதன் வாயிலேயே வடிவமைக்கப்பட்டுவிட்டதால்
தோன்றும் கொடூரத்தைச் சமன்செய்ய விழையும்
அதன் விழிகளையும்
உற்றுக் கவனியுங்கள் நண்பர்களே,
நிதானியுங்கள்.
வெறுப்பிலும் கோபத்திலுமாய் வீணாகலாமோ,
பேரளவான நமது அன்பும் ஆற்றலும்?