பாட்டியின் தனிமை
கதைசொல்லித் தூங்கவைத்த என் பாட்டியை
ஓர் காலையில் தேடி நடந்தேன். எவரும்
கடந்து செல்லமுடியாத ஒரு காட்சியாகவன்றோ
கண்டேன் அங்கே என் பாட்டியை!
வலி தரும் எத்தகைய துயர்த் தனிமையாயிருந்த்து அது!
வெயிலேறத் தொடங்கியிருந்த வேளை
கண்ணுக்கெட்டிய தூரத்திற்காய்த் தகித்துக் கிடக்கும்
புன்செய் நிலத் தோட்டமொன்றின் நடுவே குத்தவைத்து
ஒரு சிறு ஆயதமும் கைவிரல்களும் கொண்டு
தன்னந்தனியாய், கவனமான வேகத்துடன்
வியர்வைப் பெருக்கின் ஆவி சூழ
சுண்டச் சுண்டச் காய்ச்சப்படும்
இரத்தத்தின் முறுகல்பதம்
மீறிடுமோ என அஞ்சும் கோலத்தில் அவர்
மண்ணைக் கொத்தி உதறிக் கொண்டிருந்த காட்சி!
பாட்டி, காலமெல்லாம் உங்கள் பாடானது
உழைப்போ, அன்றி ஓர் மன்றாட்டமோ?
நம் வலியின் காரணங்களை ஆய்ந்து கொண்டிருக்கவோ
இது நேரம்? இக் கோலம்? பாட்டி,
எத்தகைய பூமியில் நாம் பிறந்துள்ளோம்
என்றா ஆய்ந்து கொண்டிருக்கிறீர்கள்?
இம் மண்ணில் தொலைந்து போனவற்றின்
தடயங்களைத் தேடுகிறீர்களோ?
விண்ணளவு விரிந்த
இப் பூமிக்கு நிகரான ஒரு மனுஷியை
உப்புக்கும் புளிக்குமாய்ப்
போராடுவதிலேயே கழிந்துவிடும்-
சுண்டெலியாக்கிவிட்ட விதியும்
மனிதச் சிறுமையுமோ நம் நெஞ்சில்
வேதனையாய்த் திரண்டு நிற்கின்றன, பாட்டி?
நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு
இவ்வாழ்கை பற்றிச் சொல்ல எவ்வளவு இருக்கும்?
விடுதலையேயற்ற துயரங்கள், கொடுமைகள்,
கேடுபேறுகளின்
காரணத்தையே அறிந்திராதவராகவோ
இன்னும் இருக்கிறீர்கள் நீங்கள்?
ஞானத்தினது பின்னும்
மாறாது நிகழ்ந்து கொண்டிருக்கும்
தொடர்வாழ் வெண்ணியோ
நீங்கள் அமைதியில் ஆழ்ந்துவிடுவதும்
பெருந் துயரொன்றாற்
கலங்குவதுமாயிருக்கிறீர்கள்
உங்கள் தனிமையிலெல்லாம்?
காட்டி கண்களை இடுக்கிக் கொண்டு
உங்கள் பேரன் என்னை
நீங்கள் கண்டுகொண்டமாத்திரத்தில்
ராசா...என்றுதிரும் சொல்லையும்
மொத்தமானதொரு துயர் ஒப்படைப்பையும்
அதன்பின் நீங்கள் அடைகிற
மானுட நம்பிக்கையையும் இயல்பு மகிழ்ச்சியையும்
நாங்கள் நன்கு அறிவோம், பாட்டி!