பருந்து
உங்கள் சின்னஞ் சிறிய வயதிலாவது
பார்த்து அனுபவித்திருக்கிறீர்களா,
பருந்து ஒன்று
கோழிக் குஞ்சொன்றை
அடித்துச் சென்ற காட்சியை?
அதன் கூர்மையான நகங்களால்
உங்கள் முகம் குருதி காணப்
பிராண்டப் பட்டதுபோல்
உணர்ந்திருக்கிறீர்களா?
பறவை இனத்திற் பிறந்தாலும்
விண்ணிற் பறக்க இயலாது
குப்பை கிண்டித் திரியும் அதனை
துடிக்கத் துடிக்க ஓர் உயரத்திற்கு
அழைத்துச் சென்ற அந்தக் காட்சி!
அக் குஞ்சோடு குஞ்சாய் மரித்து
அப் பருந்தோடு பருந்தாய்
பறந்து திரிந்திருக்கிறீர்களா
பாதையில்லா வானத்தில்?
குப்பைகளை
ஆங்கே நெளியும் புழுக்களை
கோழிக் குஞ்சுகளை
அவை தங்களுக்குள்ளே இடித்துக் கொள்வதை
புலம்பல்களை
போரை
போர்க்களங்களில்
பிணமாகி அழியும் மனிதர்களை
பிணங்களின் அழுகிய வாழ்வை-
நீங்களும்தான் பார்த்திருப்பீர்களில்லையா?
அது தன் சிறகு மடித்து
தனது பனித்த கண்களுடன்
ஒரு குன்றின் மீதமர்ந்திருக்கையில்
அய்யம் சிறிதுமின்றி
ஒரு தேவதூதன் போன்றே காணப்படுகிறதில்லையா?
புதிய பார்வை (ஏப்ரல் 2006) மற்றும் பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள் கவிதைகள் தொகுப்புகளில் உள்ளது.