திருப்பரப்பு
தொடர்வண்டி ஒன்றில்
ஒரு நீண்ட இரவு கடந்து
பாரமும் களைப்புமாய்
இரயில் நிலையம் வந்து சேர்ந்தோம்
முழுசாய் எங்களுக்கே எங்களுக்கென
வந்ததொரு பேருந்து
அழைத்துச் சென்றது எங்களை
அவ்விடத்திலிருந்து
போர் விரித்தாடும் இடத்திலிருந்து
பாதுகாப்பான இடத்திற்கோ என
புகைந்தது புண்கள் நிறைந்த நெஞ்சு
தவறான இடத்திலிருந்து
சரியாக இடத்திற்கு
என்றது பேருந்து.
இதுவரை இருந்ததைவிட
இன்னும் மேலான இடத்திற்கு
அவ்வளவே என்றனர் தோழர்கள்.
ஆனால் ஆனால்
வழியெல்லாம் கிளைகளசைத்து
உயரமான மரங்களும் விண்ணும்
உரக்க உரக்க கூவினவே
புறப்படும் இடத்தையே மன்னித்தும்
மறக்கவும் செய்திடும்
சொர்கத்திற்கு என்று!
எங்களுக்காகவே கட்டப்பட்டிருந்தாற்போன்ற
ஓரொற்றைவிடுதி வந்து சேர்ந்தோம்
எக்காலத்தும் அங்கு வந்துசேர்ந்தார்
யாருமில்லை என்பதுபோல
புத்தம் புதிதாய் இருந்த விடுதி.
எங்களைக் கண்டதும் ஒளிர்ந்த
அதன் காந்தப் புன்னகைதான் எத்தனை அழகு!
காலம் தோறும் அது தன் இன்மை காத்து வந்தது
தித்திக்கும் இவ்வினிமைக்காகத் தானோ ?
அவ்விடுதியை மையம்கொண்டே
விண்ணும் மண்ணும்
எண்ணற்ற நட்சத்திரங்களும்
சூழ்திருப்பது கண்டு திடுக்கிட்டோம்.
இவ்வண்டத்தின் அத்தனை உயிர்களையும்
ஏற்று அரவணைக்க இயலும்
அத்தனை பெரும் பரப்புடையதாயிருந்தது
அந்த இடம் .
விடுதியின் மொட்டைமாடியிலிருந்தபடி
எங்கள் இன்பதுன்பங்கள் குறித்த
எங்கள் கவிதைகளை வாசித்துக்கொண்டிருந்த
எங்களை எழுப்பி நடத்தியது
இடையறாது பொழியும் மழைபோலொரு குரலோசை
எங்கோ ஊற்றெடுத்த ஓர் அன்புதான்
ஏகமாய் பரவி ஆங்காங்கே
தன் உருக்காட்டி எம்மை அழைத்ததுவோ ?
சூழ்ந்துள்ள ரப்பர் தோடங்களுக்கு நடுவே
இன்னும் அழிக்கப்படாதிருக்கும் காடுகளுக்கு நடுவே
பல்லாயிரம் கோடி வயதுடைய பாறைப்படுகைகள்மீது
ஓய்விலாது கலகலத்தபடி
ஓடி ஆடி தவழ்ந்து குதித்து புரண்டு சிலிர்த்துச்
சிரித்து களித்துக் கொண்டிருந்த நதி
ஓரிடத்தில் கொட்டியது அருவியாய்!
எம் நடை தடுத்தாட்கொண்ட
குன்றாப் பெருங்கொடை நிதியம்!
முடிவிலா இன்பத் தேடல்களால் வாழ்வைத்
துயர்களமாக்கிக் கொண்டிருக்கும் மனிதத் தலைகளுக்கும்
தன் இன்பம் ஊட்டி மகிழ்ந்துகொண்டிருக்கும்
பெருங்கருணை
திற்பரப்பில் நடந்த தேவதேவன் கவிதை அரங்கிற்கு வந்து திரும்பிய பின் கவிஞர் எழுதியது ,ஜீன் 11 உங்கள் நூலகம் இதழில் இருந்து .